வெள்ளி, 22 அக்டோபர், 2021

தென்றல் வேலன் - பகுதி 11


நாம் இதுவரை கடந்த காலம் மிக அழகானது ! நிகழ்கால வாழ்வில் நாம் நம்பிக்கையற்று நிற்கும்  பொழுதெல்லாம் அந்நினைவுகள் நம்மை ஆரத்தழுவி அமைதிநிலையில் பரவசிக்க தவறுவதில்லை.

ஒரு இழப்பின் முடிவுரையில் தான் மற்றொரு பிறப்பின் முன்னுரை இருக்கிறது என்று நம்புங்கள்.

நிகழ்காலத்தில் நல்ல நபர்களை நண்பர்களாய் சம்பாதியுங்கள். நீங்கள் கடக்கும் கடுமையான பாதைகளின் மாறுபட்ட பரிமாணங்களை அறிந்தவர்கள் அவர்கள் !

அப்படியொரு நண்பன் அல்லது தோழி தான் என்னை எழுத தூண்டிக்கொண்டிருக்கிறார்.

உங்களை உங்களது வேட்கையோடு சேர்த்து ரசிக்கும் நண்பர்களை எந்தகாலத்திலும் கைவிடாதீர்கள் ! 

அவர் இந்த பதிவையும் படிக்கும் பச்சத்தில் .. நன்றி !

லதாவின் அழுகையை கண்ட ராமன் செய்வதறியாது நின்றான்.

பள்ளியில், உங்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவன் வரை வீட்டு பாடத்தை சரி பார்த்த ஆசிரியர், உங்களை நோக்கி வரும்பொழுது கடைசி மணி அடிப்பது போல, பல்லெட்டின் மணிச்சத்தம் கேட்க, தப்பித்தோம் என்று நினைத்தான் ராம். 

லதாவின் விம்மலும்  நின்றது.

அடிடா புடிடா என்று எல்லோரும் ஓடி தலைமறைவு ஆனார்கள். 

இப்படிதான் உங்கம்மா காதலை கட் அண்ட் ரைட்டா சொன்னா; என்று ராமன் சிறு ஓய்வு கொடுத்தார் !

அடேங்கப்பா ! ஒரு வாரணம் ஆயிரம் part 2 வே  ஓடிருக்கும் போலயே என்று வேலன் பூரிப்படைய, போதும் போதும் உங்க பூரி கதயெல்லாம்; அதுக்கப்புரம்  நான் தைரியமா மூஞ்சிக்கு முன்ன நின்னு, நான் உங்கள காதலகிக்கிறேன்னு காலேஜ் வாசல்ல சொன்னதெல்லாம் உங்கப்பாக்கு நியாபகம் வராது என்றாள் லதா. 

அத எப்படி மறப்பேன் !

NDAல அந்த குளிர்காத்துல கதக்வாஸ்லா ஏரி (Khadakwasla Lake) கரையில, ஏன்டா இங்க வந்தோம்ன்னு, நான் கண்ண கசக்குன ஒவ்வொரு நாளும் ; தோத்துடுவேன்னு துவண்டு போயி நின்னப்போலாம்; என்னய்ய தூக்கி நிப்பாட்டுனதே அந்த நிமிஷங்களோட நினைவலைகள்தாண்டி என்றார் ராமன்.

(உங்களிடம் யாரேனும் "எனக்கு உன்னை பிடித்திருக்கிறது" அல்லது  "உன்னுடன் கழித்த நொடிகள் வாழ்வில் மறக்கமுடியாதது" என்றெல்லாம் கூறி இருந்தால் அந்த நிமிடங்களை நினைத்து பாருங்கள் ! அந்த நொடிகள் அதீத அழகானவை ! அது போன்ற நினைவுகள் நம்மை நமது கடினமான நாட்களில் "நம்மையும் சிலருக்கு பிடிக்கும், அவர்கள் அருகாமையில் நமக்கு இந்த வாழ்வை பிடிக்கும் " என்று நினைக்க செய்து தேற்றும். அப்படி ஒருவரை நீங்கள் இதுவரை பார்க்கவில்லை என்றால், காத்திருங்கள் காலம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையோடு)

கல்யாணம் ஆகி இத்தன வருஷத்துல இதெல்லாம் சொல்லவே இல்ல, இப்போ என்ன திடீர்னு மணிரத்தினம் படம் கணக்கா சொல்றீங்க, என்று லதா  வம்பிழுக்க. 

நீங்க சொல்லுங்கப்பா என்றான் வேலன், பூஸ்ட்ட குடிச்சுக்கிட்டே .

“தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே, தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே” என்பது போல ராமன் இனம்புரியாத இன்பமுடன் அந்த நொடிகளுக்குள் பிரயானமானார்.

லதா காதல சொல்லி 8 மாசத்துல நான் அந்த ஊர விட்டு போயிட்டேன். அப்புறம்  2 வருஷம் விடுதி வாழ்க்கை, படிப்புன்னு ரொம்ப வேகமா ஓடிடுச்சி. 

2 வருஷதுக்கு அப்பறம், எங்க டியூஷன் அக்காக்கு கல்யாணம், நான் National Defence academy க்கு  entrance  எழுதிட்டு, SSB Interview க்கு wait பண்ணிட்டு  இருந்தேன்.

அப்போ அந்த கல்யாணத்துக்கு போயிட்டு, நைட் ஒரு 7.30 மணிக்கு எங்கவீட்டுக்கு போலாம்னு மாமா வீட்டுல இருந்து கிளம்பினேன்.

ரெண்டு தெரு கடந்தாச்சு, யாரோ பின்னாடியே வர்ற மாதிரி இருந்துச்சு, தெருவோட இரண்டு முனையிலயும் light எரிய தெரு மட்டும் இருட்டா இருந்துச்சி.

அங்கிருந்த கல்லூரியின் வாயிலை கடந்தப்போ திரும்பி பாத்தேன், தூரத்துல யாரோ சைக்கிள்ள வர்ற மாதிரி இருந்துச்சி; சரி கிட்ட வரட்டும் உதவி கேட்டு போயிடலாம்ன்னு நெனச்சுக்கிட்டு, நடந்தேன்.

அடுத்த 20ஆவது நொடி, ராம் நில்லு  உன் கிட்ட பேசனும்ன்னு மூச்சி வாங்க ஒரு கீச்சு குரல்; 

யாருடான்னு இருட்டுக்கு கண்ண பழக்கி பார்த்தா, லதா !

அந்த 3 வருஷத்துல லதாவ பாக்க கூட இல்ல, அவளோட குரல்ல அப்படி ஒரு மாற்றம், ஆள் பார்க்க அடையாளமே தெரியாம அந்த இருட்டுலயும் அப்படி ஒரு அழகு.

15 நொடி அமைதிக்கு பிறகு, பேச தொடங்கினாள்,

எப்படி இருக்க, சாயுங்காலமை வந்துருப்பேன், அத்தை வீட்ல நேரம் ஆகிட்டு; நீ எப்படியும் பாரதி அக்கா கல்யாணதுக்கு வருவேன்னு  மனசுல பட்டுச்சி.

நெனச்ச மாதிரியே  நீயும் வந்துட்ட !

நீ இல்லாம இந்த 3 வருஷம் இங்க இருக்கவே புடிக்கல,.. 

இதுக்கப்புறம் என்ன பண்ண போற ? 

இங்க எங்கயாவது காலேஜ்ல படிப்பியா இல்ல, வெளியூர் போக போறியா ?

நீ தான் எல்லாம் முடிவு பண்ணி வச்சருப்பியே, என்று கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினாள்.

நான் NDA Clear பண்ணி Defence போக போறேன், அப்டின்னு சொன்ன உடனே ஒரு அமைதி.

Written Exams நல்லா எழுதிருக்கேன், எப்புடியும் உள்ள போயிடுவேன்.

நீ என்ன பண்ண போற என்றான் ராமன்.

நான் 12th board exams நல்லா எழுதிருக்கேன், எப்படியாச்சும், MeritMedical Seat வாங்கிடுவேன் என்றாள்.

சூப்பர்ப்பா என்றார் ராமன்.

அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு அமைதி நிலவ, அவளே அந்த அமைதியை உடைத்தாள்.

சேரி, நான் சொல்லவந்ததை சொல்லிடறேன், என்று சொன்ன அடுத்த நொடி தூரத்து தெருவிளக்கின் பிரதிபளிப்பு அவளது கண் எடுத்துக் காட்ட, அவள் அவளது வார்த்தைகளை உதிர்க்க தொடங்கினாள்.

ராம், நீ போன அப்புறம் தான் உன்னோட அருமை எனக்கு நல்லா தெரிஞ்சுது, உன்னய எனக்கு எவ்ளோ புடிக்கும்னு தெறிஞ்சுகிட்டேன். 

இந்த 3 வருஷத்துல நீ என்னய்ய நெனச்சியா இல்லையான்னு  எனக்கு தெரியாது, ஆனா நான் தினமும் ஏதாச்சும் ஒரு வழில உன்ன நெனச்சுடுவேன்.

இப்பவும் சொல்றேன் ராம், நான் உன்ன காதலிக்கிறேன்.

நீ என்ன காதலிக்க வேண்டாம், கல்யாணம் பன்னிக்கோ போதும் என்று சொல்லி முடிக்க, கண்ணில் தெரிந்த பிரதிபளிப்பு, துளிகளாக பெருகி உதிர தொடங்கியது ! (இதை கேட்டவுடன் வேலனுக்கு தென்றலிடம் தனது காதலை கூறியவுடன், அவளது கண்ணில் வந்த கண்ணீர் துளிகள் நினைவில் வந்தது - மயிர் கூச்சமுர தனது கைகளை தடவிக்கொண்டான்)

அப்பொழுது BULLET வரவில்லை, ராம் பதிலலித்தே நகர வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளபட்டான் !   

மீண்டும் ஒரு அமைதி நிலவ, இம்முறை ராம் அதை உடைக்க முன்வந்தான். 

ஹே ! கண்ண தொட ! என்ன கொஞ்சம் பாரு.. 

Board Exam முடிஞ்சா  எல்லாம்  முடிஞ்சுடுச்சுன்னு நினைக்க கூடாது லதா, வாழ்க்கையே இங்கதான் தொடங்குது. 

கனவு கண்டா மட்டும் பத்தாது , அதை சாதிக்க ஒரு வெறி வேணும். 

மீண்டும் கண் கலங்க தொடங்கியது ...

கண்ண தொட மொதல்ல, எனக்கு பொண்ணுங்க அழுதாலே புடிக்காது. 

இப்போதைக்கு உன்னோட கணவ நோக்கி ஓடு., அத அடைஞ்ச அப்புறம்  திரும்பி பாரு; அப்போயும் நான் மட்டும் தான் நின்னு, நானும் அப்போ ஒரு நல்ல நிலமைல இருந்தா எல்லாம் நடக்கும். 

பொண்ணுங்கள பறக்க சொல்ற உலகத்துல, நீ நடக்க ஆச படுற !

இப்போ கூட, தவழ கஷ்ட படுற பொண்ணுங்க இருக்க தான் செய்யுராங்க. 

நீ சொல்லணும்ன்னு நினைச்சத சொல்லிட்ட; இப்போ நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ, எனக்கு உன்ன புடிக்காதுன்னுலாம் பொய் சொல்ல மாட்டேன். 

இப்போ வந்து என்கிட்ட இவ்ளோ தைரியமா பேசுனால இதுவே எனக்கு புடிக்கும், உன்கிட்ட எந்த பையனும் வம்பு வச்சுக்க மாட்டான், நீ அவளோ தைரியமான பொண்ணு. ஆனா இது எல்லாமே லதா என்னோட தோழியா இருக்குறப்போ. 

இதயெல்லாம் ஒரு ஓரமா ஒதுக்கி வச்சுட்டு படிச்சு முன்னேறுற வாழிய பாக்கலாம். எல்லாம் அதுக்கு அப்புறம் தானா நடக்கும், என்று ராம் சொல்லி முடிக்க ; 

மீண்டும் ஒரு அமைதியை தவிர்த்து, பெண்களுக்கே உரிய தனி சொத்தான  - உடமை உரிமம் பெற., இதுவரை கடைபிடித்த தயக்கத்தை உடைத்து, ராம் ஒண்ணு மட்டும் சொல்லு.,

நீ வேற யாரையாச்சும் லவ் பண்றியா !? இல்ல பண்ணுனியா !? என்றாள் லதா. 



செவ்வாய், 12 அக்டோபர், 2021

தென்றல் வேலன் - பகுதி 10




ஒவ்வொருவருக்கும் ஒரு கடினமான நாள் இருக்கும்; அந்த நாள் உங்களை நாம் ஏன் இப்படி இருக்கிறோம், நாம் ஏன் இங்கே இப்படி வாழ்கிறோம், நாம் எப்படியெல்லாம் வாழ வேண்டியவர் என்று பல பிதற்றல் சிந்தனைகளை உங்களுள் விதைத்து, உங்களை அடுத்த அடி எடுக்கவைக்காமல் தேக்கநிலையடைய செய்யலாம்.

அவ்வாறான நாட்களில் நீங்கள் திருமணமானவராக இருக்கும் பட்சத்தில், ஒருவேளை இவனை அல்லது இவனை காட்டாமல் அவளோடு அல்லது அவனோடு வாழ்ந்திருந்தால் நம் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமோ என்று நினைப்பு உங்களை கடந்தாலே; உங்கள் வாழ்க்கையின் பெரும் தோல்வியை நீங்கள் அடைகிறீர்கள் என்று ஊர்ஜிதமாகிறது. 

உங்களுக்கு பிடித்த நபர் பிடித்தவராக மட்டுமே இருத்தல் வேண்டும். சின்ன கருத்து வேறுபாடு கூட வர கூடாது என்று நீங்கள் நினைப்பவரானால் அது மூடத்தனம்.

இன்பம் துன்பம் போல, சிறு சண்டைகளும் ஒரு உறவில் தேவைப்படுகிறது. அச்சினைஞ்சிரு சண்டைகள் தான் உங்களின் புரிதலை அதிகப்படுத்தும்.

காதலிக்கும் பொழுது 3-  4 மணி நேரங்களோ கழித்த பொழுது இனித்த காதலி / காதலன், திருமணத்திற்கு பிறகு 24 மணி நேரங்கள் ஒன்றாகவே வாழும் பொழுது திகட்டுவது சகஜம்தான். 

அதை பொருட்படுத்தாமல், உங்களின் இனிய நினைவுகளை அவ்விதமான சண்டை நேரங்களில் பகிர்ந்து பேசி சிறுமை படுத்துங்கள்.

அமைதியே ஒரு உறவின் முதல் எதிரி.

இக்கருத்தில் எதிர்மறை இருந்தால், காதலித்து பாருங்கள் ! காதலித்தவளை(னை) திருமணம் செய்து பாருங்கள் !

The practicality of post love marriage life !

இது ஒரு பக்கம் இருக்கட்டும், நாம வேலன் அப்பாவ கொஞ்சம் கவனிப்போம் !

தனது காதல் கதையை யாரிடமாவது கூறும் பொழுது, யாருக்கு தான் லயித்து போகும் ?

வேலனின் அப்பா மேலும் தொடர்ந்தார்,
லதா மற்றும் நண்பர்களுடனான நட்பு கரண்ட் கட்டான பொழுதெல்லாம் வளர்ந்தது.

நாட்கள் வேகமாக ஓடியது, எங்ககிட்ட பேசுரத்துக்காகவே லதா எங்க வீடு வரைக்கும் வர ஆரம்பிச்சா !

நாங்க பேசுற பேச்சு தெரு முனை வரைக்கும் கேக்கும், பாட்டு பாடி போற வாரவங்களை சாவடிப்போம், ராஜா ராணி, பாட்டுக்கு பாட்டுன்னு ஒரே கூத்தா இருக்கும்.

சில நாட்களில் நான் பம்பரம் ஆட போனா, அன்னைக்கு லதா மூஞ்சில எள்ளும் கொள்ளும் வெடிக்கும். எல்லாம் எங்க மாமா வீட்டுக்கு வர்ற வரைக்கும் தான். அந்த நாட்களில் அவரோட புல்லட் சத்தம் தனியா எங்களை எச்சரிக்கும், 500 மீட்டர் அந்தாண்டையே வரவை காட்டி குடுத்துடும்.
அடுத்த நொடி எல்லாம் தெரிச்சு ஓடுவோம். அவ்ளோ terror piece uh.

அப்புறம் மறுநாள் சந்திக்கையில மொதல் நாள் ஓட்டத்தை பத்தி கதை தயாரா இருக்கும். அப்போலாம் லதா இருந்தா அந்த நிமிஷம் அவ்ளோ சந்தோசமா இருக்கும் என்று சொல்லி முடிப்பதற்குள், கையில பூஸ்ட்டோட அறைக்குள் நுழைந்த லதா; இப்போ ராசாக்கு சந்தோசமே இல்லையாக்கும் என்று ஓம்பிழுக்க, நான் அப்படி சொல்லலமா என்று ராமன் சமாளிக்க, அந்த அறை முழுவதும் சந்தோசம் படர்ந்தது.

உங்கப்பா பேச ஆரம்பிச்சா யாரா இருந்தாலும் பாத்த முதல் சந்திப்புலயே நெருக்கம் ஆகிடுவாங்க. அப்டி எவ நெருங்குனாலும் எனக்கு பத்திக்கிட்டு வரும் , அதை தனிச்சு தனிச்சு தான் தண்ணிக்குள்ள விழுந்துட்டேன் என்றாள் லதா.

அப்புறம் இது சரிப்பட்டு வராதுன்னு நானே ஒருநாள் அவரை தனியா புடிச்சு, இந்தாருங்க !
எனக்கு கட்டுனா உங்களைய தான் கட்டனும் மத்தபடி ஏதும் வேணாம், அப்டின்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன்.

அப்டி சொல்லியும் இந்த கல்நெஞ்ச காரரு ஒடனே ஒத்துகிட்டாருன்னு நினைக்கிற ?

இரு இரு அந்த கதைய நான் சொல்றேன் என்று சிரிப்பு போங்க ராமன் வழக்கிழுத்தார்.

அம்முனி கட் அண்ட் ரைட்டா சொன்ன கதைய நீயே கேளு !

அன்னைக்கு ராத்திரி ஒரு எட்டு மணி இருக்கும், அப்போதான் நானும் டியூசன் முடிச்சு வீட்டுக்கு வந்திருந்தேன், எங்க வீட்டுல பூரி போட்டு இருந்தாங்க அத்தை, அதை ஒரு கட்டு கட்டலாம்னு ஆசையா தட்டுல கை வைக்க போனேன்.

வெளிய இருந்து கீர்த்தி, ராமா ஒரு நிமிஷம் இங்க வாயேன்னு கூப்பிட, இருந்த (இரு + ந்த -  ஊரு பக்கம் பொம்பள புள்ளைங்கள, வாந்த போந்த என்று அழைப்பது வழக்கம்) சாப்பிட்டுட்டு வரேன் என்றேன்.

உங்க மாமா வந்துடுவாரு அப்புறம் என்று கூறி அவள் அழைப்பை நியாய படுத்த, நானும் கைல பூரி ஒன்ன தூக்கிக்கிட்டு வாசலுக்கு போனேன்.
நீயே சொல்லுக்கா என்றால் அபிநயா. ரெண்டு பேரும் ஏதோ சதி திட்டம் தீட்டுராளுங்க போலனு நெனச்சு, கொஞ்சம் சுதாரிப்போட சட்டுனு சொல்லுங்களேன் என்றேன்.

கரண்ட் போயிட்டு, அம்மாவாசை இருட்டு, ரெண்டு நொடில இருட்டு பழகிட்டு. அப்போதான் கீர்த்தி சொன்னா, நம்ம லதாக்கு உன் கிட்ட ஒன்னு சொல்லனுமாம், ஆனா பயமா இருக்காம் அப்படின்னா..

அவளுக்கு சொல்லனும்னா அவளே சொல்லலாமே நான் அவளுக்கும் friend தானே, எங்க அவன்னேன்.

அவ வருவா, அதுக்கு முன்ன நாங்களே சொல்லிடுறோம், அவ உன்னைய காதலிக்கிறாளாம்னா.

அம்புட்டு தான் எனக்கு வயித்துல புளிய கரச்சிடுச்சு, இதுங்க ஏதோ ஓட்டுதுங்கன்னு தோணுச்சு !

சுதாரித்து கொண்டு, என்னையலாம் யாரு love பண்ணுவா, என் மூஞ்சியும், மொகரையும். சும்மா காமெடி பண்ணாத கீர்த்தின்னேன், அபி நீயுமான்னேன் ?

இல்லடா உண்மைய தான் சொல்றோம்னாளுங்க.

அப்டியே இருக்கட்டும், ஒன்ன நல்லா புரிஞ்சுக்கோங்க, நீங்க ரெண்டு பேரும் எனக்கு எப்படி நண்பர்களோ அதே மாரித்தான் லதாவும், அவ இப்படிலாம் நினைப்பான்னு நான் எதிர் பார்க்கல. காதலிக்கிற வயசா இது ? எனக்குன்னு சில லட்சியங்கள் இருக்கு, எனக்குன்னு நிறைய கனவுகள் இருக்கு அதெல்லாம் அடைஞ்சாதான் நான் காதலை பத்திலாம் சிந்திக்க கூட முடியும்.
அவ வரட்டும் நான் பேசுறேன் என்று சொல்லி முடிப்பதற்குள், ஒரு இடி இடிக்க தொடங்கியதற்கும், கரண்ட் வருவதற்கும் சரியாக இருந்தது.

நான் சாஞ்சிருந்த சேவுத்துக்கு அந்த பக்கமிருந்து ஒரு திடீர் விம்மல் சத்தம், யாருன்னு எட்டி பார்த்தா, லதா !

எனக்கு பகீர்னு ஆச்சு ! திக்குமுக்காடி போயிட்டேன் !

ஹிரோஷிமா நாகசாகியின் மீது அமெரிக்கா பயன்படுத்திய குண்டைவிட மோசமானது ஒரு பெண்ணின் கண்ணீர் !

அணுவணுவாய் உங்களை சிந்திக்க செய்து, மண்டியிட செய்யும் வல்லமை வாய்ந்தது !

காத்திருங்கள் ! ராம கிருஷ்ணன் சற்று அந்த நினைவலைகளில் நீந்தட்டும் !

திங்கள், 11 அக்டோபர், 2021

தென்றல் வேலன் - பகுதி 9




இடைப்பட்ட காலத்தில் இக்கதையை தொடராமைக்கு மன்னிக்கவும்.

இக்கதையின் தொடர்ச்சி என் வாழ்வியலில் இணைந்திருப்பதால் வந்த தாமதம் !

பல முடிவுகளை நான் கடந்தமையால், இனி இதுபோன்ற தாமதம் வரப்போவதில்லை என்ற நம்பிக்கையோடு தொடர்வோம் !

காதல் மிக அழகானது, அது யாருக்கு வேண்டுமானாலும் ; யார் மீதேனும் ; எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். 

காதலர்களுக்கு அவர்களின் காதலும் காதலியும் மிதமிஞ்சிய அழகாக தெரிகிறார்கள் !

சாலையில் கடக்கும் காதலர்களை பார்த்து பலரும் விமர்சிப்பது உண்டு. (இது எங்க உருப்புட போகுது, ஆளும் மூஞ்சியும் மண்டையும், எப்படி போகுது பாரு, இதுங்கள சொல்லி தப்பில்ல; இதுங்க வளர்ப்பு அப்படி)

இவ்வாறு காதலிப்பவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் விமர்சித்து தங்களின் செல்வ மகளை யாரென்றே தெரியாத (நன்றாக சம்பாரிக்கும் பொறுப்புள்ளவன் என்ற ஒரே காரணத்தால்) ஒருவனின் கரம் பிடித்து அவனோடு தேன் நிலவுக்கு அனுப்பி வைக்கும் உங்களை விட அவர்கள் பன்மடங்கு சிறந்தவர்கள்.

(மேல் கண்ட வரிகள், திருமணத்தின்  முடிவுகளை  தனது மகளுடன் கலந்து ஆலோசித்து, அவளது வாழ்வின் முடிவுகளை அவளை சுதந்திரமாக எடுக்க செய்த பெற்றோர்களுக்கானது அல்ல)

அது போன்ற விமர்சனங்கள் அவர்களை எவ்விததிலும் சென்றடைய போவதில்லை. காதலில் லயித்த அவர்கள் உங்களை ஒருபொழுதும் பொருட்படுத்த போவதில்லை. 

அவர்கள் உங்களை நோக்கும் தருவாயில், உங்கள் மீதான அவர்களின் விமர்சனம் என்னவாக இருக்கும் என்று மட்டும் சற்று யோசிக்கலாம். 

(தெருவில் தெரியும் நாய்களுக்கு சிலர் பெயர் வைக்க, அந்த நாய்கள் அவர்களுக்குள் என்ன பெயர் வைதிருக்கும் என்று நினைத்து பார்ப்பது போல)

அதை விடுங்கள் .. நாம் வேலனை எழுப்புவோம் !

மயங்கிய அன்றிரவு  பால்கனியில் முடிய, சில மணி நேர தூக்கதிற்க்கு பிறகு வேலன் எழுந்தான். 

அவன் அருகில் அவன் அம்மாவும் அப்பாவும் நின்று கொண்டிருந்தார்கள்; என்னடா ஆச்சு உனக்கு, பால்கனில ஏன்  போயி படுப்ப ? அதும்  ஹெட்போனோட ? 

யாரோ தென்றலாம், அந்த புள்ள இதுவரைக்கும் 5 - 6 தடவ போன் பண்ணிட்டு ; நீ எப்டி இருக்க; எழுந்தாச்சான்னு கேட்டுச்சு !

நீ எதுக்குமா எனக்கு வர்ற போன்லாம் எடுக்குற !

ஆமா அது பாட்டுக்கும் அடிச்சுட்டே கடந்துச்சேன்னு எடுத்தேன் பாரு எனக்கிது தேவதான்டா !

இதை காதில் வாங்கியவாறு, தனது அலைபேசியின் இன்பாக்ஸை நோண்டினான், 

3 messages from தென்றல், என்றிருக்க அதை திறக்கலானான்.

தென்றல்  : Sorry vela, I was in a deep sleep then when you called me. Hope you are fine !

தென்றல்  : Extremely sorry, I don't even remember what we spoke over phone last night. This is may be due to the pills I consumed. Call me if urgent.

தென்றல் : Forgot to tell, Sorry ! Good morning Da ! Meet you in college 😊

இதை பார்த்து முடிப்பதற்குள், வேலனின் அம்மா, "நீ இன்னக்கி காலேஜ் போக வேண்டாம்" ஒழுங்கா போன் நோண்டாம படுத்து தூங்கி எழு, நாளக்கி எல்லாம் சரி ஆகிடும் என்றாள்.

அதெல்லாம் இல்லம்மா நான் இன்னக்கி காலேஜ் போயி ஆகனும், Lab இருக்கு அப்புறம் practicals ல internal marks இல்லாம போயிடும் என்று கூறி எழ முயன்றான்.

எழ முயன்ற அடுத்த நொடி, ஒரு low sugar மயக்கம் வர, மீண்டும் படுக்கையில் மல்லாந்தான்.

இதை கண்டவுடன், வேலா அம்மா சொன்னா கேளு, உனக்கு ரொம்ப Tired ஆஹ் இருக்கு.

இன்னைக்கு ஒழுங்கா rest எடு அப்போதான் நாளைக்காச்சும் காலேஜ் போக முடியும் என்று சொல்ல, மறுப்பு தெரிவிக்கும் சக்தியை கூட வேலன் இழந்திருந்தான்.

அம்மா போயி வெந்தய கஞ்சி போட்டு எடுத்துட்டு வரேன், அது வரைக்கும் படுத்திரு ; அப்பா இங்க இருப்பாரு.

கஞ்சிலாம் அப்பறம் வைக்கலாம், மொதல்ல அவனுக்கு ஒரு boost போட்டு குடு என்றார் வேலனின் அப்பா.

Boost போட அம்மா நகர, அறையில் ஒரு அமைதி நிலவியது.

இதற்கிடையில், வேலன் அவன் பங்கிற்கு தென்றலுக்கு குறிஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தான்.

வேலன் : Missed this good morning for a while ! I am still sick. Taking leave today. Will see you soon in college. Take care.

என்று சொடுக்கி பொன்முறுவல் ஒன்றை அடக்க முயல, அவன் அப்பா அதை கவனிக்காமல் இல்லை.

அவரை திசைதிருப்ப, அப்பா நீங்க office போல ? என்றான் வேலன்.

உனக்கு உடம்பு முடியலனு லீவு போட்டுட்டேன் என்றார் அவர்.

மீண்டும் ஒரு அமைதி நிலவ, அமைதியை கலைக்க, 

அப்பா உங்களுக்கும் அம்மாக்கும் Love Marriage தான, எப்போ எப்படி அம்மாவ நீங்க first பாத்தீங்க, யாரு first love சொன்னா, உங்க கதையை கொஞ்சம் சொல்லுங்க அப்பா என்றான்.

ஒரு நொடி பிரகாசத்தோடு, நானும் உன் அம்மாவும் 16 வருஷம் love பண்ணி கல்யாணம் செஞ்சுகிட்டோம். லதாவை கல்யாணம் பண்றதுக்குள்ள நான் பட்டபாடு இருக்கே, அப்பப்பா ; இப்போ நெனச்சாலும் வயித்தை கலக்குது !

லதாவை நான் மொதல்ல அவங்க வீட்ல தான் பார்த்தேன். அப்போலாம் எங்க வீட்ல இருந்து பள்ளிக்கூடம் தூரமா இருந்துச்சு. தினமும் கூட்ட நெரிசல்ல போயிட்டு வரவே நேரம் சரியா இருந்துச்சு.

படிக்க வச்சா என்னையும் உன் பெரியப்பன்னையும் english mediumல தான் படிக்க வைப்பேன்னு ஒரு வைராக்கியம் உன் தாத்தா பாட்டிக்கு.

அப்போதான் எங்க மாமா பெந்தகத்துக்கு வீடு எடுத்து அவரு பொண்ண படிக்க வைக்க பள்ளிக்கூடம் பக்கமாவே குடி போனாரு.

உடனே என்னய அங்க அனுப்பி அங்கேர்ந்து படிக்க வச்சாங்க. அந்த தெரு முனையில தான் லதா வீடு இருந்துச்சு. அப்போலாம் அடிக்கடி கரண்ட் கட் ஆகும். லதா வீட்டுக்கு பக்கத்து வீட்ல தான் நாங்க டியூசன் படிச்சுட்டு இருந்தோம்.

கரண்ட் கட் ஆனா போதும் எங்களுக்குலாம் ஒரே கொண்டாட்டம் தான். ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கும். நான், அருண், கீர்த்தனா, அபிநயா, லதான்னு ஒக்காந்து பேசிட்டு இருப்போம்.

அப்டி பேசி பேசி தான் எங்க நட்பு பலமாச்சு.

பழக தொடங்கின நாட்கள்ல உங்கம்மா பேரு ஸ்வர்ணலதான்னு எனக்கு தெரியாது. எல்லாரும் லதா லதான்னு கூப்டுறதுனால, நான் அதான் அவா முழு பெயருன்னு நெனச்சுட்டு இருந்தன்.

அவங்க அப்பா ஊருக்கு போனதுனால, அவ ஸ்கூல் டூர் போக அவர்கிட்ட அனுமதி கடித்துல கையெழுத்து வாங்கி வச்சுருந்தா, அதுல ஸ்வர்ணலதான்னு பெயர பாத்துட்டு நான் யாரோடதோ கீழ கெடக்குன்னு எடுத்து கிழிச்சு போட, அவ ஒப்பாரி வைக்க, நான் அவங்க அப்பா கையெழுத்தை போட்டு டூர் அனுப்பி வச்சு மோதல்ல தொடங்குச்சு எங்க நட்பு.

டூர்  போயிட்டு  வரட்டும் கொஞ்சம் காத்திருங்கள் !

வெள்ளி, 11 ஜூன், 2021

தென்றல் வேலன் - பகுதி 8




எனக்கென யாரும் இல்லை - என்று பலரும் வாழ்வின் பல நிலைகளில் நினைத்து வருத்தமுற்று, முடங்கி யாரின் செயலையும் கண்டுகொள்ளாமல் தனது வட்டத்தை சுருக்கி கொண்டு, தன்னியல்பு துறந்து அமர்ந்திருக்கலாம். 

அப்படியொரு நிலையில்தான் வேலன் அன்று இருந்தான் . 

இப்படியொரு நிலையில் எப்படிதான் அவனால் தூங்க முடிகிறது என்று பலரும் கேட்கலாம். 

வேலனின் நிலையில், உடலுக்கு தூக்கம் வேண்டும், மனதுக்கு தென்றல் வேண்டும் என்ற இழுப்பரிக்கு நடுவில்; மருத்துவம் வென்றது. 

அவனே தென்றலின் பதிலுக்கு காத்திருக்க நினைத்தாலும், அவன் விழி வறண்டு, இமைகள் கட்டி பிடித்து புணர்ந்தன.  

உடலின் சோர்வை ஆங்கில மருந்து பார்த்துக்கொண்டாலும் , மனம் சோர்வு அவனது மனதை தூங்க விடாமல் பலவாறு வருத்தி அங்கும் இங்கும் ஊசலாட செய்து  கொண்டிருந்தது,

அந்நேரதில் தென்றல் இவனுக்கு அலைபேசியில் அழைத்து , "நான் உன்னை காதலிக்கிறேன் வேலா; ஆனா  நமக்கு இப்போதைக்கு படிப்பு தான் முக்கியம், இப்போதைக்கு நல்லா படிப்போம், நல்ல வேலைக்கு போயிட்டு நம்ம வீட்ல பேசலாம், கண்டிப்பா வீட்ல ஒத்துக்குவாங்க. " என்றாள். 

பிறகு வேலன் மகிழ்ச்சியுற்று, வேகமான இதயத்துடிப்புடன், எனக்கு உன்ன இப்போவே பாக்கணும் தென்றல் என்று சொல்லி  உங்க வீட்டு பால்கனிக்கு வந்துடு நான் தூரமா நின்னு உன்ன பாத்துட்டு போயிடுறேன் என்றான். 

அந்த அதிகாலையில், தனது வண்டியை எடுத்துக்கொண்டு தென்றலின் ஊரை சென்றடைகிறான், அங்கு அவளது வீடு இருந்த இடத்தில் வேலனின் வீடு இருந்தது, வேலனின் அப்பா அருகில் இவன் முதல் முறை மொக்கை வாங்கிய டீக்கடைக்காரண் இருந்தான். 

வேலன் வண்டியில் அங்கு வந்ததும், அந்த டீக்கடைக்காரண் " இவன் தான் அய்யா நான் சொன்ன பொறுக்கி பய" என்று கை  நீட்ட. 

வேலன் வேர்வை மழையில் போர்வை நனைத்து எழுந்து அமர்ந்தான். 

(இது போன்ற Teleport கனவுகள் நம்மில் பலருக்கு வந்திருக்கும், ஆனாலும் நான் உங்களின் ஆசைகளை இங்கு இவ்வாறு கொலை செய்திருக்கக்கூடாது மன்னியுங்கள். 

courtesy  : தமிழில் கலசம் சீரியல் - Directed by ரம்யா கிருஷ்ணன்

if you want it in international way : நன்றி கிறிஸ்டோபர் நோலன்)

கருவானத்தின் விடியலை நோக்கிய பயணத்தில், அதிகாலை நேரம் 3.30 இருக்கலாம் , அதை confirm செய்ய தன் அலைபேசியாய் on செய்ய mobile screen ஐ double tap  செய்தான் வேலன். 

5 missed calls என்றிருக்க, Lockscreen இல் இருந்த ஏஞ்சலினா ஜொலியை ஓரம் தள்ளி, 8436725 என்று 90s காதலர்களுக்கே உரிய விதத்தில் தென்றலின் பெயரை password ஆக enter செய்து உள்நுழைந்தான். 

தென்றல்தான் அழைத்தது என்று தெரிந்த உடன் மேலும் குதூகலம் அடைந்தான். 

தான் அனுப்பிய குறுந்தகவல்களுக்கு ஏதேனும் பதில் வந்துள்ளதா என்று பார்த்தான். 

அதில் எந்த பதிலும் இல்லை.. 

"புலனத்தை சென்றடைந்தான், அங்கும் பதில் இல்லை.. 

ஆனால் அங்கும் அவளது அழைப்பு வந்திருந்ததை  பார்த்தான். 

பிறகு அவளது Last seen பார்த்தான் " இரவு 12.38 என்றிருக்க, தூங்காம என்ன பண்ணிருப்பா என்று எண்ணிக்கொண்டு; 

அவளை இந்நேரதில் தொடர்பு கொள்ளலாமா வேண்டாமா என்ற ஒரு குழப்பத்தில், கையில் செவிக்கூவியுடன் (headphones) பால்கனியை அடைந்தான். 

அதுவரை இல்லாத குழப்பங்கள் அனைத்தும் அவனை பற்றிகொண்டது. 

இதுபோன்ற மனநிலையில், பாடல்களின் இசை நம்மை அமைதிக்கொள்ள வைக்கும், ஆனால் பாடல் வரிகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும். 

பையா திரைப்படத்தில் வரும் "என் காதல் சொல்ல நேரமில்லை உன் காதல் சொல்ல தேவை இல்லை என்ற பாடல்" யுவனின் இசையில் அவனை அமைதி கொள்ள செய்தாலும் ; ஆனால் நா.மு விடவில்லை 

" ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி, அந்த நிமிடங்கள் நீளட்டுமே ;

வேறேதும் நினைக்காமல் விழி மூடடி, எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே;

யாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன், என்னை அறியாமல் உனை பார்க்கிறேன்;

சிறு பிள்ளை என, எந்தன் இமைகள் அது , உன்னை கண்டாலே குதிக்கின்றதே .. " என்று வேலனை உருக்கிவிட்டார். 

(நா. முத்து குமாருக்கு நிகரேது  ? சொற்கத்தில் எழுதி தீருங்கள் ஆசானே) 

இந்நேரதில் அழைப்பதா வேண்டாமா என்றிருந்த மனநிலையை இந்த பாடல் வரிகள் ஊக்குவித்து அவனை தென்றலை அழைக்க வைத்தது.

 பற பற பற பறவையொன்று, என்ற வைரமுத்து வரிகள் caller tune ஆக ஒளிக்க.. 

மருந்துகளின் பயனாய் கண் திறக்க முடியாமல், தட்டி தடவி தனது அலைபேசியை எடுத்து

 "Hello யாரு" என்ற தென்றலின் குறல் அவன் காதில் ஒளித்தது.

அந்த கோடையின் காலை குளிரில் வேலன் நடுக்கத்தை உணர்ந்தான். 

முதல் முறை தென்றலிடம் பேச துடித்த பொழுது எந்த நிலையில் இருந்தானோ அதே நிலையை 100 மடங்கு கூட்டிய ஒரு உணர்வை உணர்ந்து, வாயில் வார்த்தைகளை வெளியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, 

கண் இருட்ட தொடங்கி மெல்ல மயக்க நிலையாய் அடைந்தான். 

வேலன் கண் விழித்தானா ? சற்று காத்திருப்போம் !

#வினித் மணிமாறன் 


கருத்துகளுக்கு 
+918220829080

இது போன்ற உங்களது காதல் பகிர்ந்த நிமிடங்களை comment இல்  பதிவிடுங்கள் ! (என்னை தொடர்பும் கொள்ளலாம்) 

திங்கள், 7 ஜூன், 2021

தென்றல் வேலன் - பகுதி 7




நம்பகத்தன்மை.

ஒரு பெண் நட்பென நினைக்கும் உறவு, காதலாகும் பொழுது அவன் மீது அவள் கொண்ட நம்பகத்தன்மை உடைகிறது... 

ஒரு பெண் உங்களிடத்தில் மனம் விட்டு பேச எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட, உங்கள் மீதான நம்பகத்தன்மையை வியாபார படுத்த, பல பரமபத (சைன் வேவ் யோசனைகள்) யோசனைகளை சிந்தித்து, அதை அவள் மனதில் netflix series போல மீண்டும் மீண்டும் ஓட்டி Binge Watching செய்திருக்கலாம்.

ஆனால் அவள் Binge வாட்சிங் பொழுதில், முடிவற்ற அந்த தொடரை மீண்டும் மீண்டும் ஓட்டினாலும், அதன் வேகம், Dairy Milk Silk ஒன்றை kiss me bgm உடன் உண்ணும் வேகத்தில் உணர்ந்து நம்பகத்தன்மை பெறுகிறாள். 

(இது காதல் வயப்பட்ட பெண்களுக்கு மட்டும் புரியலாம் - புரியவில்லை என்றால் கவலை வேண்டாம் - உங்களவனது Series விரைவில் Release செய்யப்படும்)

தென்றல் உறங்கட்டும் என்று நாம் ஒதுங்கிய நேரத்தில், தென்றல் தூங்கி இருந்தால்; அதில் என்ன பிரமாதம் இருக்க போகிறது !

Universal truth நிகழ்ந்தது, நான் இங்கே தூக்கம் கெட்டு கெடக்கன், உனக்கென்னடி தூக்கம் என்பார்ப்போல; அடுத்த நொடி மேகலை நோக்கி பறந்தது அழைப்பு. 

இந்த பாடலை காப்பி செய்ய ஸ்டார் மற்றும் ஒன்பதை அழுத்தவும். கட்டனங்களுக்கு உட்பட்டது...

ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்று நா.முவின் வரிகள், அதை கேட்க தொடங்கிய அடுத்த வினாடி; தென்றல் அழைப்பை மேகலை ஏற்று "சொல்லுடி, எப்படி இருக்கே இப்போ" என்றாள் மேகலை.

"நல்லா இருக்கேன் டி "

Tablets போட்டாச்சு தூங்கி எழுந்தா okey ஆயுடுவேன்.

உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..  உனக்கு ஒரு Screenshot அனுப்புறேன் அதை பாரு சொல்றேன் என்று தென்றல் முடிப்பதற்குள், யாரு வேலனா என்றால் மேகலை...

தென்றல் நினைத்தும் பார்க்கவில்லை, மேகலை இப்படி ஒரு கற்பூரமாய் இருப்பாள் என்று.

(இந்த இடத்தில் ஒரு வேண்டுகோள்; ஒருவர் எந்த நம்பிக்கையோடு வேண்டுமானாலும் ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை உங்களிடம் பகிர்ந்திருக்கலாம், நீங்கள் மற்றவர்களுக்கு உங்கள் மீது உள்ள நம்பிக்கையை சம்பாரிக்கவோ, அல்லது அவர்களின் ஆறுதல் வார்த்தைகளை உங்களுக்கு ஏற்றார் போல மாற்று ஒப்புதலுடன் வாங்கவேண்டும் என்ற நோக்கதிலோ; தயவு செய்து அந்த செய்தியை screenshot எடுத்து  அனுப்பாதீர்கள். அவ்வாறு நீங்கள் அனுப்பும் நேரத்தில்  உங்களை போலவே வேர் ஒருவனும் அவர்களின் நம்பிக்கையை சம்பாரிக்க நீங்கள் அவரை பற்றி என்ன பேசினீர்கள் என்ற screenshot பறக்கவிடலாம்.)

#நினைவில் கொள்ளுங்கள் இவ்வுலகம் மிக சிறியது
#screenshot is injurious to friendship 
#screenshot kills privacy

அந்த பகீர் படபடப்பு தென்றலை சற்று திக்குமுக்காட செய்திருந்தது,
ஒரு நிமிஷம் இருடி என்று மேகளையிடம் கூறிவிட்டு, உடனடியாக அலைபேசியுடன் மொட்டைமாடியை  அடைந்தாள். 

Water tank  இருந்த மூலையை அடைந்தாள், அந்த குளிர்ந்த சுவற்றில் சாய்ந்து அமர்ந்து, வானத்தை பார்த்தாள்; ஒளிர்ந்த வெண்ணிலவை வெள்ளை மேகம் மறைக்க, நிலவு தனது வெண்மை இழந்து ஒளிமங்கி காட்சியளித்தது.  (தென்றலை வேலன் மங்க  வைத்தது போல)

ஆனாலும் கருவானம் விடவில்லை, தனது கருமையால் நிலவை வெண்மையாக காட்ட முயற்சி செய்து கொண்டுதான் இருந்தது. (மேகலையை போல)

இரண்டு மாடி ஏறியதன்  பயனால், 200 மீட்டர் ஓட்டம் ஓடிய பெண்ணாக தனது  சூடான மூச்சிகாற்றை, குளிர்ந்த காற்றில் பாய்ச்சி ; சொல்லுடி இப்போ என்றாள் . 

மேகலையை இப்பொழுது பதற்றம் பற்றி கொண்டது, ஆனாலும் தோழிகளுக்கே உரிய பாவனையில், என்னடி வேலன்னு சொன்ன உடனே இப்டி மூச்சு வாங்குது என்று ஒரு கீச் சிரிப்பை சிதற செய்தாள். 

எருமை  அதெல்லாம்  ஒன்னும்  இல்ல, வீட்ல யாராச்சும் என்ன பேசுறேன்னு கேட்டுட்டா என்ன பண்றது அதான் மொட்டை மாடிக்கு வந்தேன் என்றாள் தென்றல் . 

பாருடா ; புள்ளைக்கு பயத்தை - மறுபடி மறுபடி வம்பிழத்தாள் மேகலை. 

அதெல்லாம் இருக்கட்டும் வேலணை பற்றி நீ என்ன நினைக்குற என்றாள் தென்றல் . 

"அட நாயே, நான் கேக்க வேண்டியத எல்லாம் நீ கேக்குற ?" என்றாள் மேகலை. 

"Eeee.. என்று சிரித்தவாறு, அவன் கூட பேசாம இருந்தப்போ எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சுன்னு உனக்கே நல்லா தெரியும்"

அவன் சாதாரண பசங்க மாதிரி இல்லடி, அவன் ஏதோ ஒரு விதத்துல சாதாரண பசங்க கிட்ட இருந்து  வித்யாசமா இருக்கான் டி. 

அவன் அப்டி இப்டின்னு, விஜய் tv ல கும்கி  படத்துக்கு கோபி நாயர் பேசுற வரையறை மாதிரி ஓடியது. 

இதையெல்லாம் சளிபில்லாமல் கேட்ட மேகலை, தென்றலை நோக்கி ஒரே ஒரு கேள்வியை கேட்டாள். 

இப்போ வேலன் கிட்ட என்ன சொல்ல போற ?

அவன் கிட்ட நீ அவன  காதலிக்கிறேன்னா ?

Final year வந்தாச்சு, மிஞ்சி மிஞ்சி போனா ஒரு 90 நாள் நாமெல்லாம் இப்டி bus  ல ஒன்னா போகலாம். அதுக்கு அப்புறம் ?

நீ அனுப்புன, screenshot  பார்த்தேன்; அவனே எல்லாதுக்கும் முற்று புள்ளி வைக்கிறான். நீ தேவை  இல்லாமல் அரைபுள்ளி போட்டு எல்லாதாயும் தொடங்கி வைக்காத. 

இதையெல்லாம் உங்க வீட்ல எப்டியும் ஒத்துக்க  மாட்டாங்க, அப்புறம் எதுக்கு தென்றல் இப்டி complicate  பண்ணிக்கிற உன்னோட life ah என்றாள் மேகலை . 

ஏண்டா இவளுக்கு இந்த screenshot  அனுப்பினோம் என்று தென்றலுக்கு தோன்றியது. 

ஆனாலும் மணிமேகலையின் எண்ணங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவள் இழந்திருந்தாள். 

(காதல் வயபட்ட பலருக்கு இதுதான் பிரட்சனை ; உங்கள் எண்ணங்களுக்கு தோழமை தலையசைக்க வேண்டும் என்றே அவர்களிடம் பேசுகிறீர்கள். அவர்கள் கூற வரும் உண்மையான கருத்துகளுக்கு உங்கள் முக்கியத்துவம் செவிசாய்ப்பதில்லை - உங்களுக்கு ஆமா சாமி போடும் தோழமை தான் அப்பொழுது தேவை படுகிறார்கள் - இங்குதான் காதலுக்கு கண் குருடோடு, செவியும் பழுதாகிறது) 

இதுவரை வராத தலைவலி தென்றலுக்கு வந்ததாக மேகலையிடம் கூறினாள். 

இங்குதான் மேகலை திறம்பட ஒரு விஷயத்தை கூறினாள், " இங்க பாரு புள்ள,  உனக்கு வேலன் தான் வேணும்னா உனக்கு முழுசா உதவி செய்ய நான் தயார். ஆனா எனக்கு உன்னையும் , உன் குடும்பத்தையும் ரொம்ப நல்லா தெரியும். 

நான் இதுவரைக்கும் எது சொல்லி இருந்தாலும் உன்னோட நல்லத்துக்காக மட்டும் தான் சொன்னேன். 

இதயெல்லாம்  மனசுல போட்டு குழப்பிக்காம, இப்போ நல்லா தூங்கு. 

எடுத்தோம் கவுத்தோம்னு இதெல்லாம் முடிவு செய்ய கூடாது. 

நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடு. 

எனக்கு தெரிஞ்ச தென்றல், ரொம்ப தைரியமான, எதார்த்தமான ஒருத்தி. 
சொல்லப்போனா என்ன மாதிரி கிராமத்து புள்ளைங்களுக்கு உத்வேகமே தென்றல் மாதிரி ஆளுங்க தான்."

அப்டின்னு  சொல்லிட்டு, நான் ஏதாச்சும் தப்பா சொல்லிருந்தா என்னய்ய மன்னிச்சுக்க புள்ள என்றாள் மேகலை. 

தென்றலுக்கு மணிமேகலையின் மீதிருந்த நம்பிக்கை மேலும் உயர்ந்தது, எந்த screenshot um பகிறாமல். 

(மன்னிப்பு என்ற வார்த்தைக்கு, அவ்வளவு மதிப்பு உண்டு.. என்னதான்  friends குள்ள  sorry  thanks லாம் வேணாம்னு சொன்னாலும் , உங்ககிட்ட மன்னிப்பு கேக்கும்  நண்பர்களை இழக்காதீர்கள் - இது போன்ற ஒரு நண்பனை இழப்பது, ஆயிரம் க்ரோத நட்புகளை சம்பாரிப்பதற்கு சமம்.) 

நீ எதயுமே தப்பா சொல்லல மணி, இப்டி ஒரு தெளிவு பிறக்கும்னு தான் இந்த நேரத்துலயும், உனக்கு போன்  பண்ணினேன் என்றாள் தென்றல். 

நான் இப்போ நிம்மதியா தூங்க போறேன், நீ என்ன சொன்னாலும் கண்டிப்பா நான் அத  தப்பா நினைக்க மாட்டேன் மணி என்று கூறி  அழைப்பை துண்டித்து, வானத்தை பார்த்தாள்.. 

மேகம் கலைந்து, நிலவு பிரகாசித்தது. 

ஆனால் வானத்தின் கருமை மட்டும் ; நிலவின் வெண்மையை எடுதுயம்பி கொண்டுதான் இருந்தது.   

(மேகலையையும் சற்று விரும்புங்கள்.. இந்த நேரத்தில், உங்கள் பள்ளி பருவ மேகலையை தொடர்பு கொள்ளலாம். அவர்களிடம் இந்த பதிவு அவர்களை நினைவு கொள்ள செய்தது என்று பகிறலாம்)

#வினித் மணிமாறன் 

கருத்துகளுக்கு 
+918220829080

புதன், 2 ஜூன், 2021

தென்றல் வேலன் - பகுதி 6




விபத்துகள் நேரும் பொழுது, நமக்கு என்ன நேர்ந்தது என்பதை சற்றும் பொருட்படுத்தாமல், தங்களை சார்ந்தவர்க்கு என்ன ஆயிற்று என்று நீங்கள் சிந்திக்கும் பொருட்டு, உங்களுக்கு அவர்களின் மீதுள்ள அலாதியான அன்பு தெரிகிறது.

வேலனுக்கு இவ்வாறு நடப்பது முதல்முறையன்று, அவனது பதினான்காம் அகவையில், தந்தையுடன் தீபாவளிக்கு துணி எடுக்க சென்று வீடு திரும்பும் வழியில் பேருந்து விபத்துக்குள்ளாகி, தலைகீழாக கவிழ, இருளில், அப்பேருந்திலிருந்து வெளி வந்து, அவன் தனது தந்தையை தேட, அவர் இவனை தேட ; அந்த கோர சம்பவம் இவர்களை நாட்கணக்கில் வருத்தியது.

அந்த விபத்தில் ஏற்பட்ட காயத்தால் பல வருடங்கள் அவனுக்கு தலைவலி இருந்ததும் உண்டு.

அதே போல ஒரு சூழலைதான் வேலன் இப்பொழுதும் கடந்திருந்தான்.

அதே தலைவலி இவனை அன்று பற்றிக்கொண்டது, ஆனாலும் வீட்டை அடைந்த உடன் தனது கைபேசியை தேடி அவளிடம் பிறந்தநாள் வாழ்த்து கூற முற்பட்டான்.

பதிலளிக்காத காரணத்தால் குறுந்தகவலில் வாழ்த்துகளை பின்வருமாறு ஏவினான்.

"வாழ்வில், எனது அன்னைக்கு பிறகு நான் மதிக்கும் பெண்ணாய், என் வாழ்வில் வந்தவளே. இதுவரை பெறாத இன்பமனைத்தும் இவ்வகவையிலே பெற்று வாழ வாழ்த்துகள்."

அடுத்த 5 நிமிடத்தில்... அடுத்த ஏவுகணை

"என்னால் இயன்ற மட்டும் உனது முகத்தில் புன்னகை விதைக்க முயன்றேன்,முயல்கிறேன், முயல்வேன்..

மணிக்கணக்கான பேச்சு, இதைதான் பேச வேண்டும் இதை பேச கூடாது என்றெல்லாம் நமக்குள் எந்த வரைமுறையும் இல்லாத பொறுப்பு திறப்பை, நான் காதலென்றெண்ணி உன்னிடம் அதை பகிர்ந்தேன்."

"உனது விருப்பம் என்ன என்பதை, என் காதலை பகிர்ந்தவுடன் உன் கண்ணில் கண்டேன், இனி அப்படி ஒரு வார்த்தையை சொல்லி, நமது நட்பை கொச்சை படுத்த விரும்பவில்லை.

மூன்றாம் ஏவுகணை !

என்னால் முடிந்த ஒரே பிறந்தநாள் பரிசு, உன்னிடம் காதல் என்ற சொல்லை பயன்படுத்தி வற்புறுத்தாமல் இருப்பதே"

"Happy Birthday Ilanthenral Srinivasan"

"அதே குழிந்த சிரிப்போடு என்னிடம் பேசும் தென்றல், மீள்வாள் என்ற நம்பிக்கையுடன் உனது நண்பன் வேலன்" 

இவ்வாறாக பல குறுந்தகவல் ஏவுகணைகளை தட்டி, தான் உட்கொண்ட வலிமரக்கும் மாத்திரைகளின் மாயத்தில், விழி மூடினான்.

மூடி மூன்றாம் நொடி, தனது கைபேசி சிணுங்குவதை உணர்ந்தான்.

ஆனால் அதை கையிலெடுத்து, யாரென்று பார்க்காமல் On செய்து காதில் வைத்தான்.

(உங்களது ஆர்வம் புரிகிறது... சற்று பொறுமை கொள்ளுங்கள்)

மற்றொரு முனையில், பாலாஜி - மச்சான் எப்படி இருக்க, தலைல ரொம்ப இரத்தம் வந்துச்சே டாக்டர் என்ன சொன்னாங்க ?

நாளைக்கு காலேஜ் வந்துடுவியா என்றான், இவனோ, என்னால முடியல மச்சான். 
Tablets போட்டுட்டேன், தூங்க போறேன் அப்புறம் பேசவா என்றான்.

Sorry மச்சான், நீ தூங்கு நாளைக்கு பேசலாம் என்றான் பாலாஜி.

கையோடு alert slide பட்டனை தள்ள, கைபேசி Silent mode சென்றடைந்தது.

நிம்மதியான உறக்க நிலையை அடைந்தான் வேலன்.

இவன் இருளடைய, தென்றல் விடியல் கொண்டாள் போலும்.

இவனது குறுந்தகவல்களை பார்த்து, இவனை தொடர்பு கொள்ள முயன்றாள்.

அவனிடம் இருந்து பதில் இல்லை.
பிறகு புலனத்திலும் முயன்றாள்..

Ringing என்றே வந்தும், பதில் ஏதும் இல்லை.

நான்கு முயற்சிக்கு பின், முயல்வதை நிறுத்தி.. அவன் அனுப்பிய குறுந்தகவல்களை மீண்டும் படித்து, உறக்கம் கொண்டாள்.

(யாரிடமேனும் ஏதேனும் சொல்ல முயன்று, அதை அவர்களிடத்தில் சொல்ல சந்தர்ப்பம் அமையாமல் போகும் தருவாயில், மீண்டும் அவர்களை பார்க்கும் பொழுது ; நீங்கள் சொல்ல விரும்பிய வார்த்தைகளின் வீரியம் குறையதான் செய்கிறது.

உங்களது ஒருதலை காதலனிடம்/ காதலியிடம் அல்லது crush இடம், சொல்ல முயன்று பல முறை தட்டச்சில் type செய்து, delete செய்யப்பட்ட பல கவிதைகளை போல.)

சற்று அமைதி கொள்ளுங்கள்..

தென்றல் வேலன் உறங்கட்டும்.

புதன், 5 மே, 2021

தென்றல் வேலன் - பகுதி 5




இப்படியாக அந்த இரண்டு நாட்கள் விரைந்தோட, திங்கள் வந்தது ; கல்லூரிக்கு அவ்வளவு மகிழ்ச்சியோடு அவன் தயாரானதே இல்லை.

200 text மெசேஜ்களுக்கு அவ்வளவு சக்தியுண்டா என்றெண்ணும் அளவுக்கு ஒரு மாற்றம்.

பேருந்தில் ஏறி அமர்ந்து அவளை தேட தேவையே இல்லை என்பது போல, மணியும் அவளும் ராமர் கோட்டின் அருகில் அமர்ந்திருந்தார்கள்.

இவனும் சென்று பின்னால் சீட்டில் பலாஜியுடன் அமர்ந்து கொண்டான்.

என்னவென்று தெறியாத அளவுக்கு அன்று அவள் சற்று கூடுதல் அழகாக இருந்தாள்.

அவள் கம்மலாடும் அழகை ஸ்லோ மோஷனில் ரசித்தபடி அமர்ந்திருந்தான்.

அவ்வப்போது காற்றில் வளைந்த முன்முடி, கம்மலை வம்பிழுத்தும், கம்மல் கற்களில் சிக்கி புரண்டு தப்பித்து கொண்டிருந்தது - இவனைப்போல்.

இதை ரசித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், எதிரே வந்த லாரி சற்றும் எதிர் பாராத நேரத்தில் இவர்களின் பேருந்தில் உரசி, பேருந்தை நிலைகுலைய செய்ய, ஓடும் பாதையில் இருந்து தடுமாறிய பேருந்து அருகாமையில் இருந்த மதுக்கட்டையில் முட்டி மோதி நிறுத்தப்பட,

பேருந்தில் இருந்த பெண் குரல்கள் எல்லாம் ஒன்று கூடி, சூப்பர் சிங்கர் கோரஸ் தோற்கும் அளவிற்கு சத்தம் எழுப்பி முனுமுனுப்புடன் என்ன நேர்ந்தது என்று எல்லோரும் இயல்பு நிலை திரும்ப சிறு நேரம் எடுத்திருக்கலாம்.

ஆனால் இவையனைத்தும் கனநேரத்தில் நடந்தேறியது.

அருகில் இருந்த ஊரார் அனைவரும் அவ்விடம் வந்து சேர்ந்து, சிறு அடி பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்க முயன்ற தருணம்.

இவனுக்கு கேட்டதெல்லாம் அவள் ஒருத்தியின் குரல் மட்டும் தான். 

அப்பா ! அம்மா ! வலிக்குதே,  என் தல, கை, என்றவள் குரல் எழுப்பி கொண்டிருக்க.

இவன் தனது தலையில் இருந்து வழியும் இரத்தத்தை பொருட்படுத்தாமல், தென்றல் ஒண்ணும் இல்ல, எழுந்திரி, வெளிய போயிடலாம் என்று சொல்ல... 

அவளும் மத்திரிக்க பட்ட கோழியாய், அவன் சொன்ன சொல் கேட்டு, எழுந்து நடந்தாள்.

மணிமேகலையும் அவளை தொடர்ந்து எழுந்து நடக்கலானாள்.

சன்னலோரம் இருந்தபடியால் அவளுக்கு பட்ட அடியை விட, அங்கு நடந்த சம்பவத்தை தெளிவாக பார்த்தமையால், பயமிகுதி அவளை மேலும் வலுவிழக்க செய்திருந்தது.

இவன் அங்கும் இங்கும் ஓடி ஒரு பருத்தி துண்டை எடுத்து வந்து தலையில் வழியும் இரத்தத்தை துடைக்க முயல்வதற்குள், அங்கிருந்த பெண் ஆசிரியை அதை வாங்கி துடைக்க முற்பட, மற்றவர்கள் இவர்களை சுற்றி நின்று என்ன நடக்கிறது என்று பார்க்க தொடங்கினார்கள்.

தென்றல் கிட்டத்தட்ட நிதானம் இழந்திருந்தாள்...

தென்றலுக்கு கூட தென்றலின் தீண்டல் தேவை பட்டதாக தோன்றியது.

உடனடியாக காட்டுத்தனமாக கத்தினான், எல்லாரும் கொஞ்சம் நகருங்க.. 
இவங்களுக்கு கொஞ்சம் காத்து வரட்டும்...

அனைவரும் சற்று நகர்வதற்குள் 108 அவசர ஊர்தி அங்கே வந்து சேர்ந்தது, உடனே மாற்று பேருந்தும் வந்து சேர்ந்தது.

தென்றல் மற்றும் லேசான காயத்துடன் இருந்த இருவரை அழைத்துக்கொண்டு ஆசிரியை ஒருவர் 108 அவசர ஊர்தியில் ஏற, அவனையும் அவளுடன் அவசர ஊர்தியில் சிறையிட்டனர்.

மற்றவர்கள் மாற்று பேருந்தில், கல்லூரிக்கு செல்ல முடிவெடுத்து அங்கிருந்து புறப்பட்டனர்.

ஆங்காங்கே இரத்த துளிகளுடன், அவ்விடம் போர்கலமாய் காட்சியளித்தது.

இவர்கள் ஐவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டு, தேவையான முதலுதவி செய்யப்பட்டு, ஓய்வறையில் படுக்க வைக்க பட்டனர்.

இவனுக்கு அடுத்த படுக்கையில் அவள் இருந்தாள், தலையில் இருவருக்கும் ஜோடியாக கட்டப்பட்ட வெள்ளை துணி அவர்களை ஒருமை படுத்தியதாக நினைத்து சற்று பம்மாத்தடைந்தான்.

அவள் சற்று திரும்பி சற்றும் முற்றும் பார்க்க முயல, அவளும் அவனும் நேருக்கு நேர் கண்ணோடு கண் பார்த்தார்கள்.

ஏதும் பிரச்சனை இல்லையே என்று இவன் கேட்க விரைய, அவளோ ; எனக்கு ஒன்னுமில்ல, நீ okey தான என்றாள்.

இவன் சற்று தலையசைத்து, அவளை பார்த்தபடி கதைக்கலாம் என்று சற்று திரும்ப முயல, தென்றலின் பெற்றோர் அங்கே வந்தடைந்தனர்.

அவளது தாய், பொறந்தநாளும் அதுமா என் புள்ளைக்கு இப்டி ஆகி போச்சே என்றவுடன் இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

இது தெரியாமல் போயிற்றே என்று அவன் தன்னை தானே காரித்துப்பாத குறையாக நினைத்து சற்று நிமிரும் நேரம், அவனது பெற்றோரும் அவ்விடம் வந்து சேர்ந்தார்கள்.

பிறகென்ன... காத்திருங்கள் !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

தென்றல் வேலன் - பகுதி 4




சாதி.. மதம்.. இனம்.. பாகுபாடு..

நீங்கள் படித்தவர்கள், சாதியியத்திற்கு அடிபணிய விருப்பமற்றவராக இருக்கும் பட்சத்தில்..

நீங்கள் ஒருவனின் /ஒருத்தியின் காதலை, எங்க அப்பா அம்மா ஏத்துக்க மாட்டாங்க என்று காரணம் சொல்லி உடைத்தெறிய முன்வரும் பட்சத்தில்.

சற்று யோசியுங்கள்......

உங்கள் பெற்றோர் ஏற்று கொள்ளாமைக்கு காரணம் என்ன ?

அந்த பெண் அல்லது ஆண், வேற்று சாதி, மதம், கோத்திரம் என்று பல காரணம் இருக்கலாம்.

அவ்வாறு அந்த வேற்றானை தங்களது பிள்ளை திருமணம் செய்யும் பட்சத்தில், சுற்றம் என்ன பேசும் ? சொந்த பந்தம் என்ன பேசும் என்ற எண்ணம் தானெனில்.

மறைமுகமாக நீங்களும் சாதியியத்திற்கு கட்டுப்பட்டு போகிறீர்கள் என்பது தான் உண்மை.

இந்த சங்கிலி, உங்கள் பெற்றோருக்காக நீங்கள்; உங்களுக்காக உங்கள் பிள்ளைகள் என்று தொடரும்.

எனவே இதை படிக்கும் பெற்றோரோ, பிள்ளைகளோ, சற்று யோசியுங்கள்...

சாதி ஒழிப்பு என்பது பரியேறும் பெருமாள் நல்ல படம், அசுரன் அருமையான படம், கர்ணன் வெறித்தனம் என்று சொல்வதில் இல்லை.

அங்கு உங்களின் எண்ண ஓட்டங்கள் விலைபோகின்றது.

மத்த சிந்தனைகளை உங்கள் கையில்விட்டு, 

மேல் சொன்னவாறு பல இடங்களில் என் பெற்றோரை காரணமாக காட்டி சாதியியம் பார்த்த நான் என் கதைக்குள் போகிறேன்.

தொடர்ச்சி : 

சொடுக்கிய குறுந்தகவல் அவளிடம் சேர எப்படியும் அந்த பேருந்து ஒரு நான்கைந்து திருப்பங்கள் தான் எடுத்திருக்கும்.

வழக்கமாக அந்த கல்லூரி பேருந்துகள், வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக புறப்படும்.

அதனால் பின்னால் வரும் பேருந்தின் ஒளி எப்பொழுதும் முன்னாள் செல்லும் பேருந்தினை ஒளியேற்றம் செய்து கொண்டிருந்தது.

திருப்பங்களில் சற்று ஒளி மங்கி மீண்டும் நேர்கோட்டில் ஒளியேற்றி, 

கண் மூடி திறந்தால், கலங்கரை விளக்க ஒளியை ஒத்திருந்தது.

அவ்வாறு ஒரு திருப்பத்தில் மங்கி, அடுத்த நேர் கோட்டில் ஒளியேற்ற அவள் திரும்பி அவனை ஒரு நொடி பார்த்தாள்.

கண்ணில் காதல் வழிந்தோடும் என்ற எதிர்பார்ப்பு, இமைப்பதற்குள் பதற்றமேற்றியது.

பின்னால் வந்த பேருந்தின் வெளிச்சம் அவள் கண்ணீரில் பிரதிபலித்து, மறுநொடியில் அவன் இதயத்தில் எரியூட்டம் செய்தது.

80 கி.மீ. வேகத்தில் செல்லும் பேருந்தின் திறந்த சன்னல் காற்றிலும் அவனுக்கு வியர்த்தது.

அடுத்த நொடி, மணிமேகலை தென்றலின் கன்னத்தை தொட்டு என்னாச்சுடீ என்ற பெண் டோலிகளுக்கே (தோழிகளுக்கே) உரிதான டோனில் (தோணியில்) அவளை அணைத்து தேத்த முயன்றாள்.

அவனுக்கு அப்பொழுதுதான் தோன்றியது, முதலில் மணிமேகலையை தூண்டிலிட்டுருக்க வேண்டும் என்று.

அப்படி ஒரு வேகமான ஒரு பயணத்தை அந்த நான்காண்டுகளில் அவன் அனுபவித்ததே இல்லை.

அன்றிரவு சற்று அவசர பட்டுவிட்டோமோ, அவள் அந்த நோக்கத்தில் பழகவில்லையோ என்றெல்லாம் எண்ண ஓட்டங்கள் அவன் மண்டைக்குள் மீண்டும் மீண்டும் ஓடி, விடியலே வந்துவிட்டது.

இரண்டாண்டுகளாக அவளது Good morning இல்லாமல் இவன் வானம் விடிந்ததே இல்லை.

அவளுக்கு good morning அனுப்பி கூல் செய்யலாம் என்று அலைபேசியை எடுத்தான், சார்ஜ் இல்லை.

சற்று சார்ஜ் போட்டுவிட்டு, பல் துலக்கி குளித்து இளைப்பாறி, அலைபேசிக்கு உயிர் கொடுத்தான்.

பதட்டத்துடன் பகிரியில் நுழைந்தான், அவளது DP நீக்கம் பெற்றிருந்தது, last seen மறைக்க பட்டிருந்தது.

தான் Block செய்யப்பட்டதாக எண்ணிக்கொண்டு, சோக கீதம் பாடாத குறையாக சனி ஞாயிறு என்று இரண்டு விடுப்பு நாட்களை ஓட்டினான். (Caller tune : கனவே கனவே என்று மாற்றம் பெற்றது, கூடுதல் சிறப்பு)

நாட்கள் யுகங்களாக காட்சியளித்தன, எதிலும் கவனம் செலுத்த முடியாமல், முதலில் கிறுக்கப்பட்ட காய்ப் புழுவின் வேதனையை உணர்ந்தான்.

திங்கள் காலை வந்தது, ஒரு தோசையை பிச்சி வாயில் போட்டு கொண்டு கல்லூரி பேருந்தை பிடிக்க பேருந்து நிறுத்தம் சென்றடைந்தான்.

பேருந்திலாவது அவள் முகம் பார்ப்போம், செய்கையிலேனும் மன்னிப்பு கேட்கலாம் என்ற எண்ணத்தோடு காத்திருந்தான்.

ராமர் கோட்டருகில் சீதையை காணோம்.

அவளும் அழகிய பதுமைகளோடு கைகோர்த்து வாகனத்தை வேகப்படுத்த முற்பட்டு முன்னாள் இருக்கையில் அமர்ந்தாள் போலும்.

மூன்றாண்டுகளில் நடக்காத விடயங்கள் எல்லாம் அன்று நடந்தேறியது.

அவன் முதல் முதலில் பார்த்த அதே மஞ்சள் சுடிதார், நீல நிற ஷூ, கேரளத்து கதகளியாடும் கலைஞர்களின் கீழாடையை ஒத்த ஒரு தோடு.

அவளுக்கே உரிதான குதிரைவால் சடை, கூறிய வாள் தோற்கும் அளவிற்கு கூர்மையான புருவ மை, 

அகில அண்டத்தையும் உள்ளடக்கும் வல்லமை கொண்ட ஒரு லேடீஸ் ஸ்லிங் பேக், என அவளை பார்த்தும் பார்க்காததுமாய் குறிப்பெடுப்பதற்குள், பேருந்து இரயில் நிலையம் கடந்திருந்தது.

இவள் ஏதோ கை நீட்டி பேச, ஓட்டுனர் அங்கே பேருந்தை நிறுத்தினார்;

அவளும் மேகலையும் அங்கே இறங்கி கொண்டார்கள்.

அவனும் அங்கேயே இறங்கி அப்படியே சென்றிடலாம் என்றிருந்தான்.

ஆனால் அந்த எண்ணம் வருவதற்குள், அந்த சாரதி (சூரரை போற்று சூர்யாவின் சித்தப்பா பையன்), என்னத்த பாத்தானோ தெறியல, ஒரே அழுத்து அடுத்த ஐந்தாம் நொடி பேருந்து அவ்விடத்தில் இல்லை.

அவள் இறங்கியவுடன் அவள் விழி வழியில் ஒரு வழிபோக்கனாய் நாம் இருப்போமா என்று அவளை பார்க்க முயல்கையில், மேகலை மட்டும் இவன் நோட்டம் விடுவதை பார்த்து தென்றலிடம் ஏதோ சொல்லி சிரித்து அவள் தோள்களை பற்றினாள்.

இவனது எண்ணஓட்டங்களுக்கு அந்த தீனி சற்று தேவையற்றது தான், ஆனால் என்ன செய்வது ? விதி வலியது.

பிறகென்ன மாலை பேருந்தில் அவள் வரவில்லை, இரயில் நிலையத்தில் பேருந்து எந்த சம்மந்தமும் இல்லாமல் கடந்தோடியது.

மறுநாள் முதல் அவள் இவன்கண் படவே இல்லை.. 

எங்கிருந்து வந்ததோ தெறியவில்லை அந்த தைரியம், தனது Splender பைக்கை எடுத்து கொண்டு, பயணமானான் ; யாரையுமே தெரியாத ஊருக்கு, அவளை தேடி..

அந்த ஊரை அடைந்து, அங்கிருந்த டீ கடையில், அய்யா இங்க சீனிவாசன் sir வீடு எங்க இருக்கு ?

ஊர் காரங்களுக்கே உள்ள திமிரோடு, உங்களுக்கு எதுக்கு தம்பி ?

சற்று தயக்கத்தோடு அவன், இல்லங்கய்யா அவங்க எங்களுக்கு வேண்ட பட்டவங்க தான், அவங்கள நேர்ல பாத்து கொஞ்சம் பேசனும்னு வந்தேன் என்று சொல்ல.

பத்து நிமிஷம் பொறுங்க அய்யா இப்படித்தான் போவாரு பாத்து பேசிக்கிடலாம் என்றான் டீ கடை காரன்.

டீ கடை காரனின் நோக்கம் புரிந்தவனாய், டீ கடை வச்சா பெரிய பிரதம மந்திரினு நெனப்பு என்று நினைத்து கொண்டு (இதில் எந்த உள் குத்தும் இல்லை), வண்டியை எடுத்து கொண்டு வீடு திரும்பினான்.

பொறுத்து பொறுத்து பார்த்து, அலைபேசியில் தொடர்ப்பு கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு சற்று தைரியம் ஏற்றி, அடுத்த வெள்ளிக்கிழமையில் தொடர்பும் கொண்டான்.

ஏதோ ஒரு பெண் எடுத்து, சொல்லுங்க யார் வேண்டும் என்று கேட்க ; துண்டித்து அட்ரெநெல்லின் ஏற்றம் பெற்றான்.

ஆனால் அவனது முயற்சி வீண்போகவில்லை.

சனி கிழமை காலை ஒரு text message வந்தது...
"why did you call me ?" என்று.

அவன் : why didn't you text me ?
அவள் : why should I ? (அகம் புடிச்ச கழுதை)

சிறிது நேரம் கழித்து...
அவன் : Antha alavuku pocha.. 

மாலையில்...
அவள் : entha alavuku, onnum puriyala..
அவன் : Call ?
அவள் : Not now, veetla ellaarum irukaanga..

கரையை கடக்கும் புயலென, பல வகையான ஒரு வரி கேள்வி பதில்கள் text மெசேஜில் இடம் பெயர்ந்தது.

TRAI நெறிமுறைபடி இன்றைய 100 text message களை நீங்கள் பயன்படுத்திவிட்டீர்கள் என்ற தகவல் வரும் வரை தொடர்ந்தது.

வாழ்க TRAI ... (ஒரு நாளைக்கு 100 MESSAGE என்ற கணக்கு இன்னக்கி வரைக்கும் புரியல எனக்கு)

ஆனால் அந்த மூன்றெழுத்து வார்த்தையை அவனும் இழுக்க வில்லை, அவளும் சொடுக்க இடம் கொடுக்க வில்லை.

பிறகென்ன... சற்று அமைதி கொள்ளுங்கள்...

அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சு...


வியாழன், 29 ஏப்ரல், 2021

தென்றல் வேலன் - பகுதி 3




காதலின் உத்வேகம் எத்தகையது என்று ஆராய தொடங்குங்கள், நீங்கள் உங்கள் வாழ்வியல் பயணத்தில் எங்கோ எப்படியோ;  உங்கள் குடும்பம், சூழ்நிலை என்று பலவாறாக  முதல் காதலை தொலைத்து இருப்பீர்கள் / இருக்கலாம்.

ஒருதலை காதலோ, இருமுனை ஈர்ப்போ ; நீங்களே நினைத்தாலும் அந்த காதலை மீட்டெடுத்து உங்கள் முன்னாள் காதலனை/காதலியை அதே உள்ளன்போடு பார்க்க முடியாது.

ஆனால் யாரென்றே தெறியாத என் போன்ற ஒருவன் அல்லது எவளோ ஒருத்தி உங்களின் காதலுக்கு கண்மூடித்தனமாய் உதவி செய்திருக்கலாம்.

அவர்களை இப்பொழுதே அழைத்து பேசுங்கள், உங்களுக்கு 45 வயது ஆனாலும் உங்களின் இளமைக்கு இழுத்து செல்லும் வல்லமை வாய்ந்த அந்த நட்பை வீனடிக்காதீர்கள்.

இப்படி அவ்வப்பொழுது கருத்து கரப்பான் பூச்சிகள் எட்டி பார்க்கும், அதை ஹிட் அடித்து ஜட்டியுடன் படுக்க வைக்க முயலாமல், சற்று அன்புடன் அரவனைத்து; விளக்கமாற்றால் (விளக்கம் என்ற மத்தால்) அடியுங்கள், சாகும் வரை புலம்பிவிட்டு போகட்டும்... 

கரப்பான் பூச்சிகள் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையோடு நம் கதைக்கு போவோம்...

என்னதான் ஒரு மணி நேரம் பேசினாலும், அவ்விடத்தில் இங்கிதமின்றி அலைபேசி எண்ணை கேட்பது அவனுக்கு உசிதமாக படவில்லை.

பிறகென்ன, வழக்கம் போல தான் ; சமூக வலைதளங்களில் தேடி பிடித்து பறந்தது facebook friend request.

அதை அவள் accept செய்வாளா மாட்டாளா என்ற பெரும் புலம்பல்களோடு ஓடியது 4 நாட்கள்.

இன்றைய காலகட்ட கல்லூரி மாணவர்கள் போலல்லாமல் அப்போது படித்தவர்களுக்கே என ஒரு formula இருந்தது.

செமஸ்டர் நெருங்கினால், இன்டர்நெட்டுக்கு bye bye.

அந்த 50mb Pocket இன்டர்நெட் தான் ஒருவனின் Arrear எண்ணிக்கையை கணக்கிடுவது போன்ற ஒரு எண்ணம்.

அந்த ஒரு வாரத்தில்; பரிட்சை அட்டவனை, Practical என்று பல குழப்பங்கள் அவனை நிலைகுலைய செய்தாலும், பரிட்சையற்ற நாட்களில் அவள் வருகைக்காக நூலகம் சென்று வந்தான்.

அங்கு சென்று, இவன் எடுத்துவந்த நாவல்களை சுவாரஸ்யமாக படித்து கொண்டிருப்பான்.

அங்கே வரும் பெண்களெல்லாம், சரியான பொங்கல் சோறு, தயிர்சாதம் என நினைத்திருக்கலாம். 

ஆசிரியர்களோ; இந்த காலத்தில் இப்படி ஒரு பையனா என்று கூட நினைத்து இருக்கலாம்.

ஆனால் அவன் நினைப்பனைத்தும், அடுத்த சந்திப்பில் அலைபேசி எண்ணை வாங்க என்ன வழி என தேடியது.

ஒரு வழியாக அவன் எதிர்பார்த்த அந்த தருணம் அந்த அயோத்தியில் நடந்தது.

ஒருநாள் காலை இவன் நூலகத்தில் நேரம் கழித்து, சோம்பல் தீர்க்க கேன்டீன் டீயை குடிக்கலாம் என்று, தற்கொலை முயற்சி செய்ய முன்வந்த தருணத்தில்;

நம் சகுந்தலாவோ LAB COAT போட்டுகிட்டு, வராண்டாவில் CATWALK செய்து கொண்டிருந்தாள்.

இவன் அவள் LAB குள் நுழைவதை பார்த்து, அடடா என்று தலை முடியை வார முற்படுவதற்குள், RECORD நோட்டில் கை மறைத்து ஒரு HI காட்டி, அதே கன்னக்குழி சிரிப்பில் இவனை கண்காட்சி பொருளாக்கி போனாள்.

அன்று என்ன ஆனதோ தெறியவில்லை, கேன்டீன் தேநீர், தேனில் போட்டிருந்த ஒரு சுவை. 

அன்று பல முறை அந்த வராண்டாவில், கஜா வராண்டா கஜா வராண்டா என்று bgm போடாத குறையாக நமது குட்டி போட்ட பூனை நடந்தது.

அன்று மாலையும் பேருந்தில் காலம் கைகூடும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்க, அங்கு ஆப்பு வைக்க அற்புதமாய் கூடவே வந்தாள் மணிமேகலை. (ஒரு பெண்ணை correct செய்ய முயல்பவனுக்கே தெறியும், பெண்களின் பெஸ்ட்டீக்கள் எத்தகைய கிருஞ்சு (CRINGE) என்று... மன்னிக்கவும் டோலிகளே)

இந்த பெண்களுக்கு மட்டும் எங்கிருந்து தான் இப்படி பட்ட நட்பு ஏற்படுகிறதோ தெறியவில்லை.

பேருந்தில் ஏறும் பொழுதே, கம்மல் கரகாட்டம் ஆட, முகம் சிவக்க சிரித்தபடி ஏறி ராமர் கோட்டருகில் அமர்ந்தாள் சீதை, மாலை வெயில் இவள் கம்மலில் ஒளிச்சிதர்வுற்று, இவனுக்கு ராமன் விளைவை விளக்கி கொண்டிருந்தது.

குளிக்காத காற்று இவள் கூந்தலில் நுழைந்து, மல்லிகை மனமேற்றம் செய்து, குளிர்காற்றாய் பூப்பெய்தி கொண்டிருந்தது.

மயிரிழைகள் காற்றின் கண்ணாமூச்சி ஆட்டத்தில், அவள் புரடியில் இருந்த மச்சத்தை மானபங்கம் செய்துகொண்டிருந்தது.

சுடிதார் துப்பட்டாவோ, இவள் அழகிற்கு இங்கு ஏதேனும் ஈடுண்டா என, வழிபோக்கர்களிடம் துப்பு கேட்டு கொண்டிருந்தது.

இவனோ, பேருந்து ஜன்னல் கம்பியில் சாய்ந்தவாறு; அவள் அழகின் வர்ணனையில் கம்பனிடம் போட்டி போட்டு கொண்டிருந்தான்.

இப்படியே கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக அவன் வீட்டை அடைந்தான்.

அடைந்து அலைபேசியை எடுத்து இன்டர்நெட்டை சொடுக்க, அவனுக்கு வந்த முதல் தகவல் ஒலி, "Ilanthenral accepted your friend request. Say Hi " 

Mark zuckerburg சொன்னா கேக்காம இருப்போமா. 

Hi என்ற message தட்டப்பட்டது.
(சற்று முன்னமே அவள் பெயரை சொல்லி இருக்கலாம், இது என்னை அறியாது உங்களிடம் அவள் பெயரை சொன்னதாக இருக்கட்டும். தயவு கூர்ந்து யாரும் facebook search செய்ய வேண்டாம்.)

பிறகென்ன, எல்லா கதைகளும் அரங்கேற்றம் பெற்றது.

பல கதைகள், பல புத்தகங்கள் அவர்களின் தட்டச்சில் இடம் பெற்றது. எல்லாம் மீறி அவன் அவளிடம் அவளது அலைபேசியின் எண்ணை கேட்டான். (ஆண்கள் எங்கு நேரடியாக கேட்டு இருக்கிறோம், சங்கதாராவின் pdf என்னிடம் உள்ளது, அனுப்புகிறேன் என்று கேட்டான்)

அதன் பின் மீண்டும் ஒரு அமைதி, ஒரு 14 மணி நேர மௌன அஞ்சலிக்கு பின், அவள் ஒரு எண்ணை share செய்ய.

சங்கதாரா பரிமாற்றம் அடைந்தது. 
(நன்றி காலச்சக்கரம் நரசிம்மா)

பிறகு தினம் ஒரு கதை என்று அவளை அவனும், அவனை அவளும் நன்றாக தெரிந்து கொண்டார்கள்.

கல்லூரி நான்காம் ஆண்டு வரை நல்ல நட்பாக இருந்த இந்த உறவு, பிரிய போகிறோம் என்ற ஏக்கத்தில் காதலானது.

அதுவும் அவ்வளவு சாதாரணமாக இல்லை, கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா முடிந்து அன்று வழக்கத்திற்கு மாறாக இரவு 9 மணி ஆனது பேருந்துகள் புறப்பட.

அன்று அதே ராமர் கோட்டின் அருகில் அவள் அமர்ந்திருக்க இவன் இரண்டு சீட்டுகள் தள்ளி இருக்க, அவன் அலைபேசியில் இருந்து "நான் உன்னை காதலிக்கிறேன்" என்ற குறுந்தகவல் இரண்டாம் அலைகற்றையில் இடைமறித்து, மெதுவியக்கத்தில் பயணித்து அவளிடம் சென்றடைந்தது.

பிறகென்ன நேர்ந்தது, காத்திருங்கள்....

புதன், 28 ஏப்ரல், 2021

தென்றல் வேலன் - பகுதி 2




ஒரு பெண்ணின் பார்வைக்கு எத்தகைய சக்தி உண்டெனில் :

நீங்கள் காத்திருக்கும் பேருந்து நிறுத்தத்தில், நீங்கள் 3 வருடங்களாக கண்டுகொள்ளலாமலே இருந்த பெண் உங்களைத்தான் தினமும் பார்க்கிறாள் என்று உங்கள் நண்பன் உங்களிடம் கதைக்கையில்; 
"உலக அழிகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி" என்று நீங்கள் அவளிடம் இல்லாத அழகை இருப்பதாக எண்ணிக்கவிழும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.

உங்களின் எழுத்துகளில் இரண்டு மூன்று வைரமுத்துகளும், கால் கிலோ கண்ணதாசனும், மூன்று வாலி; நா.முத்துக்குமாரும் எட்டி பார்க்க தவற மாட்டார்கள். (அங்கிருந்த அரைபுள்ளியை பாராமல், அதை மூன்று நீர் நிரப்பும் வாலி என்று படித்து; ரங்கராஜனை மறந்து விடாதீர்கள்)

சரி நாம் கதைக்குள் போவோம் : 

பேருந்தில் ஏறியவுடன் பேச தொடங்கும் அவன் குரல், பேருந்து முழுக்க ஒலிக்கும். 

பேருந்தில் இருக்கும் ஆசிரியர்கள் திரும்பி பார்த்து, டேய் நான் இங்குதான் இருக்கிறேன் என்று கண்ணாலே விளக்கம் குடுக்க முயல்கையில்; 

இருந்துட்டு போ ! என்பது போல இருக்கும் அவன் பேச்சு.

இதிலும் சூடான வாத்திக்கள், வா என் அருகில் அமரு என்று அழைத்து பக்கத்தில் அமர வைக்க அந்த வாத்தியிடமும் பேசி அவரையும் அரட்டைக்குள் இழுக்கும் திறம் வாய்ந்த அரட்டையாளன் அவன்.

வழக்கமாக வடிவேலு காமெடி போல பேருந்தின் வேகத்தை கூட்ட அழகிய பெண்கள் ஓட்டுனருக்கு அருகாமையில் அமர்வது வழக்கம். (அந்த இடத்தில் குறிப்பாக 6 பெண்கள் மட்டுமே அமர்வார்கள், மற்றவர்கள் தெரியாமல் கூட அங்கே செல்ல மாட்டார்கள் - Courtesy : Terror லேடீஸ் கிளப்)

இதையெல்லாம் மீறி நம் சகுந்தலாவோ, ராமர் கோட்டிற்கு முதல் சீட்டில் தான் அமர்ந்தாள்.

(ஆமா அது என்ன ராமர் கோடு ? - தனியார் கல்லூரிகளில் ஆண்களுக்கென தனி வழி பெண்களுக்கென தனி வழி ; இதை பிரிக்க ஒரு மஞ்சள் கோடு இருக்கும் - அதுவே ராமர் கோடு எனப்படும்.

பேருந்தில் ராமர் கோடு எப்படி இருக்குமானால், இடது புறம் உள்ள இருக்கைகளில் பெண்களுக்கு பின்னால் ஆண் ஆசிரியர்கள் அமர, வலது புறம் உள்ள இருக்கைகளில் பெண்பால் ஆசிரியர்கள் அமருவார்கள்.

பேருந்துகளில் ராமர் கோடு உயிர் பெறுகிறது. 
வாழ்க ராம நாமம், வளர்க இந்துத்து.)

இப்படியாக இவனது குரல் கேட்க, ஒரு நாளில் ஒருமுறையாவது அவளை திரும்பி வைக்க வேண்டும் என்ற கொள்கையோடு அவனும் பேச, அவளும் அந்த target அடைய அவனுக்கு உதவி செய்தாள்.

இவ்வாறாக ஒரு செமஸ்டர் ஓட, Practical exam வந்து சேர்ந்தது.

Practical examகளின் பொழுது, கூட்டம் அவ்வளவாக இருக்காது, ராமர் கோடும் இருக்காது.

பேருந்துகள் 3 மணிக்கு தயாராகி, 5.15க்கு ஏவப்பட ஏதுவாக காத்திருந்தது.

அன்று முதன் முதலாக அவன் பேச ஆலற்று, அந்த பேருந்து அனாதையாகி இருந்தது.

அவன் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவளும் அந்த பேருந்தில் ஏறி, சித்திகரிக்கப்பட்ட ராமர் கோட்டின் அருகில் வந்தமர்ந்தாள்.

சற்றும் எதிர்பாராத நேரத்தில் திரும்பி, நீங்க தான அது, கத்திக்கிட்டே வருவீங்க என்றாள்.

இவனுக்கோ, என்னது கத்திக்கிட்டு வருவேனா; கிருஞ்சு (Cringe) குவியலாகிட்டோமோ என்ற எண்ணத்துடன்.... ஆமாம் என்றான்.

கன்னத்தில் குழி விழும் சிரிப்புடன் (அதுவரை அப்படியொரு கன்னகுழியை அவன் பார்த்ததில்லை) , முன்னாள் படர்ந்த முடியை ஒதுக்கியவாறு, actually நீங்க நல்லா பேசுறீங்க என்றாள்...

பஸ்ஸுக்குள் butterscotch வாசம் நிரம்பியது, (ஏன் Butter fly தான் இருக்கனுமா) மாலை வெயில் கண் கட்டச்செய்தது... அதை எல்லாம் மீறி அவன் அவளிடம் Thanks என்று கூறி அவனுக்கே உரிதான பாணியில் பேச தொடங்கினான் .

எதுவுமே இல்லனா கூட பேச ஆள் இருந்தா போதும் நல்லா சந்தோசமா இருப்பேன், ஆனால் இன்னக்கி தான் இந்த தனிமை என்றான்.

அதான் நான் இருக்கிறேனே என்றாள் அவள்.

இது போதும் எனக்கு, இதுபோதுமே என்ற பாடல் bgm கேட்காத குறையாக இவன் பேச தொடங்கினான்.

பிறகென்ன ஜாதக பரிமாற்றம் தவிற மற்ற அனைத்தும் நடந்தது. 

ராமர் கோட்டின் அழிவு ஆரம்பமானது, இதையெல்லாம் கண்ணாடியில் பார்த்த பேருந்து ஓட்டுநர் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தார்.

எல்லாம் வல்ல ஆண்டவன் அருளால் அன்று வேறு யாருமே பேருந்தில் வராதது, கூடுதல் சிறப்பாக அமைந்தது. (3 மணிக்கு பரிட்சை முடிய, 6 ரூபாய் டிக்கெட்டுக்கு கஞ்சத்தனம் காட்டியது எவ்வளவு நல்லதாக அமைந்தது)

இது போன்ற இடங்களில் "கஞ்சனுக்கு காலனாவும் ஆயுதம்" என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

அன்றைய பேச்சுவார்த்தையில், பொன்னியின் செல்வன் இடம்பெற்றுவிட்டார், கல்கியின் வாசகர்கள் பேசும் பொழுது ; வேறென்ன வேண்டும் ?

அவன் பூங்குழலியின் காதலன் என்றான், அவளோ அருள்மொழி வர்மன் என்றாள்.

அவ்வளவு நேரம் அருள்மொழி மீது அவன் கொண்டிருந்த மதிப்பு ஒரு நொடியில் வெறுப்பாய் மாறியது.

பிறகு சங்கதாராவை உள்ளிழுத்து அவள் அதை படித்திருக்க மாட்டாள் என்ற எண்ணத்தோடு, சங்கதாராவை மையாமாக வைத்து கதைக்க தொடங்கினான். 

(நன்றாக நினைவில் கொள்ளுங்கள், பொன்னியின் செல்வன் காதலர்களுக்கு, சங்கதாரா ஒரு பிரமாஸ்திரம்.

உங்களின் விருப்பமான நபர் பொன்னியின் செல்வன் பிரியனானால், சங்கதாரா கொண்டு தாக்குங்கள், உங்கள் வெற்றி உறுதி.)

அவள் கண்ணில் அந்த ஆர்வம் தெரிந்தது, அவனும் அதை குறைக்காமல் கதைக்க தொடங்கினான்.

இவ்வாறாக முதல் சந்திப்பில் பல சுவைகள் ஒத்து போக, எப்பொழுதும் போகும் 1 மணி நேர பேருந்து பயணம் அன்று 2 நிமிடங்களாக சுருங்கி முடிந்தது. 

அதன் பின் நடந்தது என்ன, 

சற்று காத்திருங்கள்....

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

தென்றல் வேலன் - பகுதி 1





என் எழுத்துகள் என்னைப்போலவே தோற்க தொடங்கிவிட்டன.. 

வெற்றியென்றால் என்னவென்றே தெறியாமல் யாரேனும் இருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் வேண்டுமெனில், அக்கம் பக்கம் பாராமல், அண்டை பதிவை நாடாமல் என் முகத்தை நினைத்து கொள்ளுங்கள்.

எனது தோல்வி எத்தகையது என்று கேட்டீர்களானால், என் முகத்தை நினைத்து கொள்ளுங்கள் என்றவுடன்; சற்றும் யோசனையின்றி உங்களால் என் முகத்தை நினைவு கொள்ள முடியும்.

ஏனெனில் என்னை தெரிந்தவர்களையன்றி யாரும் இப்பதிவை படிக்கப்போவது இல்லை.

(ஆனால், இப்பொழுது இந்த பொன்முறுவல் சற்று அவசியமற்றது என்று தோன்றுகிறது. இருந்தாலும் பரவாயில்லை, சற்று சிரித்து கொள்ளுங்கள்.)

தோல்வி எப்படி ஒரு மனிதனை புரட்டி எடுத்தாலும், அவனது வாழ்வை, வாழ்வியல் நிகழ்வுகளை அதனால் சற்று நிதான படுத்த மட்டுமே முடியும்.

அந்த நிதான நொடிகளில் அந்த தோல்வியின் காரணிகள் அவனை/அவளை மென்மேலும் துன்புறுத்தி மகிழும்.

பச்சை பட்டாணியில் பசியாரி, சந்தோஷமாய் அது தனது வீடு என நினைத்து வாழும் காய்ப் புழு, பட்டாணியை உரித்து சுண்டலாக்க முற்படும் எஜமானன் கையில் சிக்கி தவிக்கும் நிலையை ஒத்திருக்கும்.

மரத்தில் இருந்து தொங்கி இறங்க முயல்கையில், யார் கண்ணிலோ பட்டு, தனது கூட்டை காட்டி கொடுத்து, எமதர்மன் சோப்பு தண்ணி கரைத்து ஊற்ற, சாவின் விளிம்பில் தவிக்கும் மொசுக்கட்டையின் நான்கு தலைமுறையின் வலியை ஒத்திருக்கலாம்.

கர்ணன் திரைப்படம் போல இந்த காட்சிகள் 1990 களுக்கு முந்தையை காலத்தில் நடந்தது அல்ல.

(இந்த நொடியை 2010க்கு முன் கிராமத்தில் வளர்ந்த 90 சதவிகிதம் பேர் பார்த்திருக்கலாம், தயவு கூர்ந்து அதை நினைத்து பார்த்து ; தங்களின் வலது கையால் இடது கையை மயிர் கூச்செறிய சொரியாதீர்கள்)

இவ்வாறு பல வலிகளை நாம் ஒப்பிட்டாலும், அந்த குட்டி மொசுக்கட்டை கொண்ருன்னி மனிதர்கள் கடக்கும் வரை சற்று காத்திருந்திருக்கலாம்.

நாம் நமது கதைக்கு வருவோம்.

நீங்கள் ஒருத்தியை/ ஒருவனை உண்மையாக விரும்பும் பொழுது, எப்படி அவளை/அவனை வெறுப்பீர்கள் ?

காரணங்கள் கோடி சொன்னாலும், அவளை நீங்கள் விரும்பியதும்; அவள் உங்களை விரும்பியதும் மட்டுமே உண்மை.

எங்கிருந்தாலும் வாழ்க என்று கோடிப்பேர் கூறினாலும், நமக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது; என்று எண்ணும் சிலரும் வாழத்தான் செய்கிறார்கள்.

அவள் கூறிய காரணங்கள் தான் என்னென்ன ?

உனக்கு வேலை இல்லை : இச்சமூகத்தில் படிக்கிற அனைவருக்கும் வேலை இருந்தால்தான் காதலிக்க வேண்டும், வேலை இருந்தால் தான் ஒருத்தியின் மீது ஆசைப்பட வேண்டும் என்ற எண்ணம் எனோ அவனுக்கு படிக்கும் காலத்தில் வரத் தவறிவிட்டது.

Second year போனான் முழு காலேஜும் அவன் controlக்கு வந்துச்சுன்னு; ஒரு மாஸ் பன்ச் போடலாம்னு ஆசையோட போனா, Class notes எடுக்க வச்சு, அதுலயும் கேள்வி கேட்டு ; கொக்கி குமார் கொமட்டுல குத்தி வெளிய தள்ளிட்டாரு.

சேரி உள்ள ஒக்காந்து தூங்குறதுக்கு, வெளிய போயி இயற்கையை ரசிப்போம்னு செவுத்துல சாஞ்சி நின்ன ரெண்டா நிமிஷம் மாப்ள சலீமும் வெளிய வந்தான். (இன்ஷா அல்லா : உன் கருணையே கருணை - Why Blood same blood)

அங்கேயும் இங்கேயும் வேடிக்கை பாக்கையில, Lateral entry பசங்களெல்லாம் induction முடிச்சு, அவங்க அவங்க class க்கு போறத பாத்து சலீமு சுட்டி காட்டுனான்.

அந்த கூடத்துல தான் அவளும் இருந்தா...

முதல் முதலில் அவளை பார்த்த பொழுதில் கூட, நான் பொறுப்பற்று வகுபறையின் வெளியில் தான் நின்று கொண்டிருந்தேன். (கொக்கி குமாரின் கோர தாக்குதலுக்கு பின்)

மஞ்சள் சுடிதார், கணகாம்பரப்பூ நீல நிற ஷூ என்று அவளது செலெக்ஷன் தான் எத்துனை வித்தியாசம் ! (அப்பொழுதே அவளது செலெக்ஷனில் எனது தரத்தை ஒப்பீடு செய்திருக்கலாம்)

காட்டுக்குள் காலேஜ் கட்டியது கவித்துவம் ஏற்றத்தான் என்று, பினாமியை திட்டும் பொழுது தோன்றவில்லை. (இயற்கையை இயற்கை எய்தாமல் வைத்தமைக்கு நன்றி)

கடுங்கூட்டத்திற்கு நடுவிலும் ஏய் துஷந்தா என்று Song போடாத சகுந்தலாவாக அவள் மட்டுமே அவன் கண்ணில் பட்டுக் கொண்டிருந்தாள்.

அதுக்கப்புறம் என்ன, எங்க போனாலும் அவ அங்கேயெல்லாம் இருக்குற மாதிரி ஒரு இனம்புரியாத மயக்கம். (இவரே தேடி போவாராம், ஆனா விதிப்படி அந்தபொண்ணும் அங்க வந்துச்சுன்னு நெனச்சுகுடுவாராம்)

உணவு இடைவேளையில் கூட்டமா நிக்கையில, கேன்டீன்ல வந்து ப்ரூட் பவுல் வாங்கயில, ஒரு Close up தரிசனம் தர.

FRUITY குடிக்கிறப்போ, பன்னீர் சோடா குடிச்ச மாதிரி ஜிவ்வுன்னு ஒரு இனம் புரியாத அனுபவம். 

வயசு கோளாறு, இது காதலா இருக்குமோன்னு நினைக்க வச்சுது.

சாயங்காலம் எல்லாரும் கூட்டமா காலேஜ் பஸ்ஸை நோக்கி நடைபோட, search engine active ஆகிடுச்சு, filter yellow colour னு, excel filter கணக்கா filter போட்டு அடுத்த மூனா நிமிஷத்துல அவளாண்ட வந்து நின்னுச்சு.
அதே 23 பஸ்.

NON SYNC லே ரன் ஆகுற இந்த 19 வயசு OS க்கு இந்த UPDATE, HANDLE பண்ண கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.

எல்லாத்தையும் ஆண்டவன் மேல பாரமா போட்டுட்டு, பக்கத்துல இருந்த பாலாஜி கிட்ட கேட்டான்; 

மச்சி யாருடா அவன்னு...

நம்ம கூட காலேஜ் படிக்கிற பயலுகளுக்கே உள்ள அதுப்பு, 

பொண்ணு யாருனு கேட்டா ; 

ஆறு வருஷமா அரியர் எழுதுற செந்திலோட சொந்த கார பொண்ணு, அது மட்டும் இல்லாம நம்ம Final Year படிக்கிற சிவசந்திரனோட ஆளுன்னு எடுத்த ஒடனே; கும்பகோணம் - தஞ்சாவூர் வழியில உள்ள speed breaker மாதிரி ஒரு பத்து பன்னெண்ட அடுக்குனான்.

துயில் கொள் பாலாஜின்னு அவனை தோள்ள போட்டு தட்டி கொடுத்து தூங்க வச்சுட்டான்

பொதுவா 1 மணி நேரத்துல வீட்டுக்கு போற பஸ்ல அன்னைக்கு என்னமோ எட்டு மணி நேரம் பயணிக்கிற மாதிரியே ஒரு நெனப்பு.

அம்புட்டு தான், அடுத்த ஒரு வாரம் தீவிரமா Class notes எடுக்க ஆரம்பிச்சாச்சு, அதே வேகத்துல போயிருந்தா, second year லேர்ந்து அவன் university topper ஆகிருப்பான்.
(இவிங்க பாடம் நடத்துற அழகுல)

ஆனாலும் அந்த வாரங்கள்ல நம்ம சகுந்தலா கண்ல படாம இல்ல, 

மண்டைகுள்ள, பன்னிர் சோடா உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், பன்னிர் சோடா உயிரை கொல்லும் அப்டின்னு ஹஸ்கி வாய்ஸ் மட்டும் தான் கேக்கல ; அம்புட்டு சோடா குடிச்சுறுப்பான் நம்ம பய.

இப்டி பல முறை கேன்டீன் சந்திப்புகளுக்கு பிறகு என்னதான் ஆச்சு,.. விரைவில் சந்திப்போம்..

தொடரும்...

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு - பெயர் காதலர் தினம்

இத்தனை ஆண்டுகளாய் எம் எழுத்துகள் தோற்றும்,

இம்முறை அவள் வருவாளென்று மனம் உந்த;

அதைத் தேற்ற காகிதம் காத்திருக்க,

பேனா மையோ எண்திசையிலும் சிந்திச்சிதர தயாராகிறது....

முன்பேழுதிய கட்டுரைகளை படித்திருந்தால் உங்களுக்கு எந்நிலை புரியலாம்..

எப்போதாவது மட்டுமே எங்கள் வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்லும் நாட்களில்,

எந்த பேருந்தில் கூகூர் காரியை சைட் அடித்தேனோ அதே பேருந்தில் அதே இருக்கையில் இருந்து எழுதுகிறேன்.

என்னோடு பஸ்ஸில் ஏறும் ராஜேஷ், சஷ்டி, ராஜராஜன், என யாரும் என்னருகில் அமரவில்லை, 

பக்கத்து பஸ் ஸ்டாப்பில் ஏறி எங்களுக்கு இருக்கையை பிடித்து வரும் கல்யாண சுந்தரம் கத்தாரில் காதல் கசக்குகுறார், பால முருகனோ விவேகானந்தர் குறுக்கு தெருவில் அட்ரஸ் தேடுகிறார்... 

ஆனால் சில்லறைக்காக சண்டைபோடும் அதே கண்டக்டர், இம்முறை சற்று புன்முறுவலோடு சிலிர்த்துப்போய் சில்லறைகளை சிதற விடுகிறார்.

சற்று கண்மூடினால் அந்த நாட்களின் சகலமும் உணர முடிகிறது.

இதுவரை கடந்த கால்நூற்றாண்டின் காதலர் தினங்களில் என்னவெல்லாம் நிகழ்ந்தது !

ஒரு முன்னோட்டம்...

இன்றவள் நம்மை பார்ப்பாளா என்று,
பேருந்து நிலையத்தில்; அவள் விடுப்பென்றும், அறியாமல் நிதானமாய் காத்திருந்த சிலர்.

குறிப்பு 1 : தொண்ணூகளில் பிறந்த இளவட்டங்கள் இதை கடந்தது உண்டு, காதலர் தினமன்று பல அழகான பெண்கள் (அவனுக்கு அவள்) விடுப்பெடுத்து கடுப்பேத்துவார்கள்.

காலை முதல் காணாமல் நாட்கடத்தி, இரவு 10 மணிக்கு சிணுங்கும் சின்ன கருப்பு வெள்ளை ஸ்க்ரீனில், "நான் உன்னை காதலிக்கிறேன், இது என் அப்பா நம்பர்; இதுக்கு கால் பண்ணிடாத" என்ற எத்தனை குறுந்தகவல்கள் நான் சுவாசித்த காற்றலையில் கடந்திருக்கும் !

குறிப்பு 2 : இந்நூற்றாண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்று பெறுவதற்கு முன்னதாகவே இன்ஸ்டாகிராம் அக்வுண்ட் ஓப்பன் ஆகிறது, தனது வீட்டு பாடம் செய்ய எட்டாம் வயதில் தனக்கென ஒரு ஸ்மார்ட் போன் அலாட் ஆகிறது.

தொண்ணூகளில் பிறந்த பெண்களுக்கு ஆங்காங்கே இருந்த ஒரு ரூபாய் போன்களில் காதல் வளர்ந்தது, அப்பாவின் போனில் இருந்து மேல் கண்ட குறுந்தகவல் பத்தில் ஆறு பெண்கள் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.

வருகை பதிவேட்டில் அவள் தொடர்பு எண்ணை எடுத்து, அவளை அழைக்க முயன்று, தைரியம் இன்றி தொடர்பை துண்டித்து, மிஸ்ட் கால் ஆக, மீண்டும் அழைப்பு வரும் பட்சத்தில், சதீஷ் இல்லைங்களா என்று கேட்டு, தவறாக அழைத்து விட்டேன் என்று மண்ணிப்பு கேட்டு, மாமனார் கிட்ட பேசிட்டேன் என்று நண்பர்களிடம் பிதற்றிய பலரும் உண்டு.

குறிப்பு 3 : தொண்ணூகளில் படித்த பலரும் செய்த முதல் திருட்டு, அவன் விரும்பும் பெண்ணின் வகுப்பின் வருகை பதிவேடு.

அப்பதிவேட்டில் அவள் தொடர்பு எண்ணை இன்க் ரப்பர் கொண்டு அழித்து, போட்டியாளர்கள் குறைப்பும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மன்னியுங்கள் மாரியம்மா டீச்சர்

இவன் எண் அவள் கண் இருக்க, அவள் அழைப்பிற்காக காத்திருந்த நாட்கள்

குறிப்பு 4 : பிப்ரவரி மாதம் முதல் நாள் தொடங்கும் அந்த பரபரப்பு, அவளிடம் இவனது தொடர்பு எண் இருக்கும் பட்சத்தில், தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்த பொழுதெல்லாம் - 108 அவசர எண்ணில் பேசும் யாரென்றே தெரியாத அக்காவை விட பொறுமையானவனாய் இவன் பதில் அளிப்பான். (வாழ பழம் மாரி பேசுரியே ப்ரோ)

குடிகொண்ட இதயத்தை வண்ணச்சட்டையால் பிரசுரம் செய்த நாட்கள்

குறிப்பு 5 : வண்ணங்களில் தனது எண்ணங்களை வெளிப்படுத்துவதாக எண்ணி , கலர் சட்டையில் மோர்ஸ் கோடிங் மொழி பேச காத்திருக்க, எதிர்பாரா விதமாய் அவள் கருப்பு சுடிதார் அணிய, அவள் காதலை வெறுக்கும் தொண்ணூறுகளின் குடும்ப குத்துவிலக்கு என் ஆள் என்று பிதற்றிய சிலரும் உண்டு.

சிவப்பு - நான் ஏற்கனவே ஒருத்தியை / ஒருவனை காதலிக்கிறேன் - அவள் / அவன் என்னை காதலிக்கலாம் ( மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி துணை)

நீலம் - காதலிக்கிறீங்களா என்கிட்ட சொல்லிடுங்க - வீடு காலியாதான் இருக்கு ( வாழ்கிறார்கள் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் நடத்துணர்கள் - TNSTC துணை)

பச்சை - உனக்காக நான் காத்திருக்கிறேன் (கீழ்ப்பாக்கம் மருத்துவமனை ஜாக்கிரதை)

மஞ்சள் - மனமுடைந்த நிலையில் உள்ளேன் (CSK வெறியன் துணை) 

வெள்ளை - நான் ஏற்கனவே ஒருத்தியை / ஒருவனை காதலிக்கிறேன் - அவளும் / அவனும் என்னை காதலிக்கிறான் / காதலிக்கிறான் ( செவிலியர்கள் / மருத்துவர்கள் துணை)

கருப்பு - ஆணியே புடுங்க வேணாம் (No comments simply waste)

இளஞ்சிவப்பு - உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ள படுகிறது (நன்றி மீண்டும் வருக)

ஆரஞ்சு - இப்போது தான் காதலை சொல்ல போகிறேன் (தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்)

இன்றைக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் என்றெண்ணிய சிலர்

குறிப்பு 6 : அப்போது அப்படி சுத்திய பலரும் வாழ்வில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று எண்ணுவது இழுக்கு.

இருசக்கர வாகனத்தில் இருக்கியமர்ந்து பயணப்பட்ட காதலர்களை கண்டு பொறாமையால் பொசுங்கிய சிலர்

குறிப்பு 7: பாத்து பத்திரமா போங்க, உங்களை பார்க்கும் பத்தில் ஒன்பது பேர்; உங்களை சபிக்கிறார்கள். 

பின் குறிப்பு : அடுத்த காதலர் தினத்தில் யாரையும் சபிக்காமல் ரோட்டில் நிம்மதியாக நடக்க வாழ்த்துகள்.

இவ்வாறாக காதலுக்கும் பல கண்ணோட்டம் இருக்க, காதலிப்பவர்களுக்கென சில கண்ணோட்டம் உண்டு.

காதலிக்க படும்பொழுதுதான் ஒருவன் அல்லது ஒருத்தி முழுமையடைகிறாள். 
(ஒருவனுக்கு ஒருத்தியாக இருக்கும் பட்சத்தில்)

உங்களிடம் அன்பு இருக்கிறது என்று அதை திணிக்க ஒருவரை தேடாதீர்கள். 

உண்மையான அன்பை உணர உங்களுக்கானவன் எங்கோ பிறந்து இவ்வாறு கிறுக்கி கொண்டு இருக்கலாம்.

ஈரமான மண் எப்போதும் நீரை உறிவதில்லை, 
தேக்கி மட்டுமே வைக்கும்...

இந்த இயந்திர வாழ்வில், ஓட்டம் மட்டுமே முக்கியமல்ல, தேக்கமும் முக்கியம் என்று உணர்வீர்களாக....

கடைசீயாக ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள், நாம் காதலுக்காக தான் போராட வேண்டும் காதலியுடன் அல்ல.. 

இனிய காதலர் தின வாழ்த்துகள்...

#வினித் மணிமாறன்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

மரணத்துக்கு அப்பால் - அதிகாரம் 7 - வீரா

மரணத்துக்கு அப்பால் - அதிகாரம் 7

மரணம் - பலவாறாக பலரை அணுகுகிறது.

அமைதியாக சிலர், போராடாமல் சிலர், பல ஆண்டு போராடி சிலர், நொடி பொழுதில் சிலர் என மரணம் ஆட்கொள்ளும் விதங்கள் பலவாறாக இருக்கலாம்.

முடிவில் நாம் ஒரு மனிதரை அல்லது ஒரு உயிரை இழக்கிறோம் என்பதே உண்மை.

ஆறு அதிகாரங்களாக பல இழப்புகளை பார்த்திருக்கிறோம். ஆனால் ஏழு என்ற இந்த எண், எனது தம்பியின் இழப்பை சுமக்கும் என்று சென்ற வாரம் வரை எண்ணியதுகூட இல்லை.

சில நாட்களாக எழுத ஒரு மனநிலை அமையவில்லை, தொடர்ந்து யூட்டியூப் லைவ், வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கான தேடல் என்று பல விஷயங்கள் மனதில் ஓட்டம் பிடித்து, மனதை எழுத முற்படுத்தாமல் வைத்திருந்தது.

ஆனால் இப்பொழுது மயிலை ரயில் நிலையத்தில் அமர்ந்து எழுதுகிறேன்.. 

ஜானி வாலி அக்லி காடி என கீச்சிடும் குரலுக்கும், டீ காப்பி சமோசா என்ற கட்டை குரலுக்கும் நடுவில்.

வீரா - என் தம்பி

வீரனார் நமது குலதெய்வம் நாய் வளர்க்க கூடாது என்று கிழவி பிதற்ற, குலதெய்வத்தின் பெயரையே சூட்டுவோம், அவர் வீரனாய் இருந்து நம்மை காக்கட்டும் என்று பல வசனங்கள் பேசி, ராசம்மாளை வென்று வீராவோடு வாழ தொடங்கினோம்.

வீரா வீட்டிற்கு எடுத்து வர, ஸ்லீப்பர் பஸ்ஸில் மறைத்து வைத்து சென்னையில் இருந்து வீடு வரும் வழியில் பயண பயத்தில் அவன் பல முறை சிறுநீர் கழிக்க, தம்பியை வளர்க்கும் பொறுப்பான அண்ணன் ஆனேன் - ஒரே இரவில்.

காலையில் வீட்டு வாசல் அடைய, 

"இதை ஏன் வாங்கிட்டு வந்த, நானே வீட்டுல தனியா இருக்கேன், இதை எப்படி பாத்துப்பேன்.. கொண்டு போயி எங்கயாச்சும் விட்டுடு" என்றாள் ராசம்..

அன்று.. "வீரா பெரியாயி வீட்டுக்கு போயிட்டு வந்தியா என்று அவள் வீராவிடம் கேட்ட வீடியோவை 1000 முறை பார்திருப்பேன் - ராசத்தின் மறைவிற்கு பிறகு"

ராசம் இறந்த செய்தி அறிந்து சென்னையில் இருந்து லாக்டவுன்க்கு இடையில் ஈபாஸ் வாங்கி நான் வந்து சேரும் முன், அவளை வைத்திருந்த ஐஸ் பெட்டிக்கு அருகில் அமர்ந்திருந்தான் வீரா.

ராசத்தின் இறுதி சடங்கு முடிந்து, உறவினர் அனைவரும் வீடு திரும்ப, தனிமையில் ராசாத்தின் கேள்விக் கனைகளற்ற அமைதியில் அழுத ஐவரில் வீராவும் இருந்தான்.

பாட்டியை சாப்பிட கூப்பிடு என்று மேகலை சொன்னா போதும், நான் சிறுவயதில் சென்று அழைத்த வேகத்தை விட வீராவின் வேகம் ஒப்பிடமுடியாதது.

சனி ஞாயிறு ரெண்டு நாள் தான் லீவுனு வீட்டுக்கு வந்தா, இரவு தூங்கையில வீரா எனக்கும் என் அண்ணனுக்கும் நடுவில் சோம்பல் முறித்து தூங்குவான்.


அண்ணன எழுப்பு என்று மேகலை சொல்லும் ஒரு சொல் தான் வீராவுக்கு கட்டளை;  போர்வையில் முக்காடு போட்டாலும், ஏறி நின்று கடித்து புரட்டி எழுப்புவான்.

நான் ஊருக்கு போகாத நாட்களில், அர்ஜுன், சுரேந்தர், ஐயப்பன் என்று "வீரா சொன்ன பேச்சுலாம் கேக்குது மாமா சொன்னா போதும் அமைதியா போகுது" அப்படின்னு அவனை புகழையில, நாம அங்க இல்லாம போயிட்டோமோன்னு ஒரு பொறாமை இல்லாமல் இருந்ததே இல்லை.

மேகலைக்கும், மணிமாறனுக்கும் இந்த லாக்டவுன்ல வீரா இல்லைனா நாட்கள் கொஞ்சம் கடினமாதான் போயிருக்கும்.

நான் ரெண்டு புள்ள பெத்தன் - ரெண்டும் நாயும் சென்னைய பாக்க போயிடுச்சு, ஆனா என் புள்ள வீராதான் என் கூட இருக்கான்னு மணிமாறன் ரொம்ப கொழுப்பா சொல்லுவாறு, அப்போ வீரா மேல பொறாமை மேலும் ஒரு ஸ்பூன் கூடும்.

அம்மா அப்பாவிடம் ஒரு பாசம், எப்போதாவது நான் வந்தால் என்னிடம் தனி பாசம் என்று, இரண்டு நாட்கள் என் காலையே சுற்றி வருவான்.

ஒரு வருஷம் தான் ஆகுது ஆனா அதுக்குள்ள அவனை பத்தி எழுத நிறைய கதைகள், அவனுக்கு உடம்பு சரி இல்லாமா போனப்போ விக்ணேஷும் அம்மாவும் கண்கலங்க சோகமாய் அமர்வதும், நான் என்னமோ விலங்கியல் மருத்துவன் போல, தைரியமாக சொல்லும் சொல்லை உண்மை என்று நம்பி கண் துடைத்த நாட்களும் உண்டு.

இதையெல்லாம் தாண்டி அவர்கள் அழுவதை நான் பார்க்க விரும்பியதும் இல்லை என்பதே எதார்த்தமான உண்மை.

ஆனால் சென்ற வாரம் காலையில் ஐயப்பன் போன் செய்து, வீரா கேட்டை உடைத்து கொண்டு வெளியே வந்துடுச்சுன்னு சொன்னப்போ; அது சாதாரணமாக தெரிந்தது, அடுத்த 10 நிமிஷத்தில் வீரா வாகனத்தில் அடிபட்டு விட்டது, நிறைய இரத்தம் போயிடுச்சாம் அப்டின்னு விக்னேஷ் போன் பண்ண, நான் நிதானத்தில் இல்லை.

அம்மா அப்பா அங்க இல்லை என்பதை உறுதி படுத்தி கொண்டேன், எனக்கே இப்படி இருக்க அவர்கள் அவ்விடத்தில் இருந்து வீராவின் போராட்டத்தை பார்த்தால் ; அவர்களின் நிலையை என்னால் யோசிக்க கூட முடியவுல்லை.

வீராவின் மறைவை ஜவ்வாய் இழுக்கும் பட்சத்தில், மயிலை இரயில் நிலையத்தில் நான் அழுவது போல மேகலையும் அழலாம், மாறனும் அழலாம், விக்னேஷும் அழலாம்..

இருந்தாலும் வீரா என் வீட்டின் கொள்ளைப்புறத்தில் துயில்கொள்ளட்டும்...


மரணம் யார் யாராயோ தழுவுகிறது,  வெற்றி என்றால் என்னவென்றே தெரியாத நம்மையும்
தழுவினால் தான் என்ன என்ற அலட்சியம் என்னுள் நிறைய இருந்ததுண்டு.

ஆனால் இப்போது வீரா இல்லாமல் போன பிறகு, இந்த ஒரு வாரத்தில் என்னுள் எவ்வளவு குற்ற உணர்ச்சி உள்ளதோ; அதே குற்ற உணர்ச்சி என் குடும்பத்தினருக்கும் என் மறைவில் வரலாம் என்ற பயத்தால் வாழ்வை எதிர்கொள்கிறேன்.

தனக்கு சொர்கத்தில் தனிமை என்று ராசம்மா வீராவை அழைத்துக்கொண்டாள் போலும்.

ஆனாலும் வீரா - நீ வாழ்ந்திருக்கலாம்.. 

கண்ணீருடன் வினித் மணிமாறன்