என் எழுத்துகள் என்னைப்போலவே தோற்க தொடங்கிவிட்டன..
வெற்றியென்றால் என்னவென்றே தெறியாமல் யாரேனும் இருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் வேண்டுமெனில், அக்கம் பக்கம் பாராமல், அண்டை பதிவை நாடாமல் என் முகத்தை நினைத்து கொள்ளுங்கள்.
எனது தோல்வி எத்தகையது என்று கேட்டீர்களானால், என் முகத்தை நினைத்து கொள்ளுங்கள் என்றவுடன்; சற்றும் யோசனையின்றி உங்களால் என் முகத்தை நினைவு கொள்ள முடியும்.
ஏனெனில் என்னை தெரிந்தவர்களையன்றி யாரும் இப்பதிவை படிக்கப்போவது இல்லை.
(ஆனால், இப்பொழுது இந்த பொன்முறுவல் சற்று அவசியமற்றது என்று தோன்றுகிறது. இருந்தாலும் பரவாயில்லை, சற்று சிரித்து கொள்ளுங்கள்.)
தோல்வி எப்படி ஒரு மனிதனை புரட்டி எடுத்தாலும், அவனது வாழ்வை, வாழ்வியல் நிகழ்வுகளை அதனால் சற்று நிதான படுத்த மட்டுமே முடியும்.
அந்த நிதான நொடிகளில் அந்த தோல்வியின் காரணிகள் அவனை/அவளை மென்மேலும் துன்புறுத்தி மகிழும்.
பச்சை பட்டாணியில் பசியாரி, சந்தோஷமாய் அது தனது வீடு என நினைத்து வாழும் காய்ப் புழு, பட்டாணியை உரித்து சுண்டலாக்க முற்படும் எஜமானன் கையில் சிக்கி தவிக்கும் நிலையை ஒத்திருக்கும்.
மரத்தில் இருந்து தொங்கி இறங்க முயல்கையில், யார் கண்ணிலோ பட்டு, தனது கூட்டை காட்டி கொடுத்து, எமதர்மன் சோப்பு தண்ணி கரைத்து ஊற்ற, சாவின் விளிம்பில் தவிக்கும் மொசுக்கட்டையின் நான்கு தலைமுறையின் வலியை ஒத்திருக்கலாம்.
கர்ணன் திரைப்படம் போல இந்த காட்சிகள் 1990 களுக்கு முந்தையை காலத்தில் நடந்தது அல்ல.
(இந்த நொடியை 2010க்கு முன் கிராமத்தில் வளர்ந்த 90 சதவிகிதம் பேர் பார்த்திருக்கலாம், தயவு கூர்ந்து அதை நினைத்து பார்த்து ; தங்களின் வலது கையால் இடது கையை மயிர் கூச்செறிய சொரியாதீர்கள்)
இவ்வாறு பல வலிகளை நாம் ஒப்பிட்டாலும், அந்த குட்டி மொசுக்கட்டை கொண்ருன்னி மனிதர்கள் கடக்கும் வரை சற்று காத்திருந்திருக்கலாம்.
நாம் நமது கதைக்கு வருவோம்.
நீங்கள் ஒருத்தியை/ ஒருவனை உண்மையாக விரும்பும் பொழுது, எப்படி அவளை/அவனை வெறுப்பீர்கள் ?
காரணங்கள் கோடி சொன்னாலும், அவளை நீங்கள் விரும்பியதும்; அவள் உங்களை விரும்பியதும் மட்டுமே உண்மை.
எங்கிருந்தாலும் வாழ்க என்று கோடிப்பேர் கூறினாலும், நமக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது; என்று எண்ணும் சிலரும் வாழத்தான் செய்கிறார்கள்.
அவள் கூறிய காரணங்கள் தான் என்னென்ன ?
உனக்கு வேலை இல்லை : இச்சமூகத்தில் படிக்கிற அனைவருக்கும் வேலை இருந்தால்தான் காதலிக்க வேண்டும், வேலை இருந்தால் தான் ஒருத்தியின் மீது ஆசைப்பட வேண்டும் என்ற எண்ணம் எனோ அவனுக்கு படிக்கும் காலத்தில் வரத் தவறிவிட்டது.
Second
year போனான் முழு காலேஜும் அவன் controlக்கு வந்துச்சுன்னு; ஒரு மாஸ் பன்ச் போடலாம்னு ஆசையோட போனா, Class
notes எடுக்க வச்சு, அதுலயும் கேள்வி கேட்டு ; கொக்கி குமார் கொமட்டுல குத்தி வெளிய தள்ளிட்டாரு.
சேரி உள்ள ஒக்காந்து தூங்குறதுக்கு, வெளிய போயி இயற்கையை ரசிப்போம்னு செவுத்துல சாஞ்சி நின்ன ரெண்டா நிமிஷம் மாப்ள சலீமும் வெளிய வந்தான். (இன்ஷா அல்லா : உன் கருணையே கருணை - Why
Blood same blood)
அங்கேயும் இங்கேயும் வேடிக்கை பாக்கையில, Lateral entry பசங்களெல்லாம் induction
முடிச்சு, அவங்க அவங்க class
க்கு போறத பாத்து சலீமு சுட்டி காட்டுனான்.
அந்த கூடத்துல தான் அவளும் இருந்தா...
முதல் முதலில் அவளை பார்த்த பொழுதில் கூட, நான் பொறுப்பற்று வகுபறையின் வெளியில் தான் நின்று கொண்டிருந்தேன். (கொக்கி குமாரின் கோர தாக்குதலுக்கு பின்)
மஞ்சள் சுடிதார், கணகாம்பரப்பூ நீல நிற ஷூ என்று அவளது செலெக்ஷன் தான் எத்துனை வித்தியாசம் ! (அப்பொழுதே அவளது செலெக்ஷனில் எனது தரத்தை ஒப்பீடு செய்திருக்கலாம்)
காட்டுக்குள் காலேஜ் கட்டியது கவித்துவம் ஏற்றத்தான் என்று, பினாமியை திட்டும் பொழுது தோன்றவில்லை. (இயற்கையை இயற்கை எய்தாமல் வைத்தமைக்கு நன்றி)
கடுங்கூட்டத்திற்கு நடுவிலும் ஏய் துஷந்தா என்று Song போடாத சகுந்தலாவாக அவள் மட்டுமே அவன் கண்ணில் பட்டுக் கொண்டிருந்தாள்.
அதுக்கப்புறம் என்ன, எங்க போனாலும் அவ அங்கேயெல்லாம் இருக்குற மாதிரி ஒரு இனம்புரியாத மயக்கம். (இவரே தேடி போவாராம், ஆனா விதிப்படி அந்தபொண்ணும் அங்க வந்துச்சுன்னு நெனச்சுகுடுவாராம்)
உணவு இடைவேளையில் கூட்டமா நிக்கையில, கேன்டீன்ல வந்து ப்ரூட் பவுல் வாங்கயில, ஒரு Close up தரிசனம் தர.
FRUITY
குடிக்கிறப்போ, பன்னீர் சோடா குடிச்ச மாதிரி ஜிவ்வுன்னு ஒரு இனம் புரியாத அனுபவம்.
வயசு கோளாறு, இது காதலா இருக்குமோன்னு நினைக்க வச்சுது.
சாயங்காலம் எல்லாரும் கூட்டமா காலேஜ் பஸ்ஸை நோக்கி நடைபோட, search engine active ஆகிடுச்சு, filter yellow colour னு,
excel filter கணக்கா filter போட்டு அடுத்த மூனா நிமிஷத்துல அவளாண்ட வந்து நின்னுச்சு.
அதே 23 பஸ்.
NON
SYNC லே ரன் ஆகுற இந்த 19 வயசு OS க்கு இந்த UPDATE,
HANDLE பண்ண கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.
எல்லாத்தையும் ஆண்டவன் மேல பாரமா போட்டுட்டு, பக்கத்துல இருந்த பாலாஜி கிட்ட கேட்டான்;
மச்சி யாருடா அவன்னு...
நம்ம கூட காலேஜ் படிக்கிற பயலுகளுக்கே உள்ள அதுப்பு,
பொண்ணு யாருனு கேட்டா ;
ஆறு வருஷமா அரியர் எழுதுற செந்திலோட சொந்த கார பொண்ணு, அது மட்டும் இல்லாம நம்ம Final Year படிக்கிற சிவசந்திரனோட ஆளுன்னு எடுத்த ஒடனே; கும்பகோணம் - தஞ்சாவூர் வழியில உள்ள speed breaker மாதிரி ஒரு பத்து பன்னெண்ட அடுக்குனான்.
துயில் கொள் பாலாஜின்னு அவனை தோள்ள போட்டு தட்டி கொடுத்து தூங்க வச்சுட்டான்
பொதுவா 1 மணி நேரத்துல வீட்டுக்கு போற பஸ்ல அன்னைக்கு என்னமோ எட்டு மணி நேரம் பயணிக்கிற மாதிரியே ஒரு நெனப்பு
அம்புட்டு தான், அடுத்த ஒரு வாரம் தீவிரமா Class notes எடுக்க ஆரம்பிச்சாச்சு, அதே வேகத்துல போயிருந்தா,
second year லேர்ந்து அவன் university
topper ஆகிருப்பான்.
(இவிங்க பாடம் நடத்துற அழகுல)
ஆனாலும் அந்த வாரங்கள்ல நம்ம சகுந்தலா கண்ல படாம இல்ல,
மண்டைகுள்ள, பன்னிர் சோடா உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், பன்னிர் சோடா உயிரை கொல்லும் அப்டின்னு ஹஸ்கி வாய்ஸ் மட்டும் தான் கேக்கல ; அம்புட்டு சோடா குடிச்சுறுப்பான் நம்ம பய.
ஒரு பெண்ணின் பார்வைக்கு எத்தகைய சக்தி உண்டெனில் :
நீங்கள் காத்திருக்கும் பேருந்து நிறுத்தத்தில், நீங்கள் 3 வருடங்களாக கண்டுகொள்ளலாமலே இருந்த பெண் உங்களைத்தான் தினமும் பார்க்கிறாள் என்று உங்கள் நண்பன் உங்களிடம் கதைக்கையில்;
"உலக அழிகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி" என்று நீங்கள் அவளிடம் இல்லாத அழகை இருப்பதாக எண்ணிக்கவிழும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.
உங்களின் எழுத்துகளில் இரண்டு மூன்று வைரமுத்துகளும், கால் கிலோ கண்ணதாசனும், மூன்று வாலி; நா.முத்துக்குமாரும் எட்டி பார்க்க தவற மாட்டார்கள். (அங்கிருந்த அரைபுள்ளியை பாராமல், அதை மூன்று நீர் நிரப்பும் வாலி என்று படித்து; ரங்கராஜனை மறந்து விடாதீர்கள்)
சரி நாம் கதைக்குள் போவோம் :
பேருந்தில் ஏறியவுடன் பேச தொடங்கும் அவன் குரல், பேருந்து முழுக்க ஒலிக்கும்.
பேருந்தில் இருக்கும் ஆசிரியர்கள் திரும்பி பார்த்து, டேய் நான் இங்குதான் இருக்கிறேன் என்று கண்ணாலே விளக்கம் குடுக்க முயல்கையில்;
இருந்துட்டு போ ! என்பது போல இருக்கும் அவன் பேச்சு.
இதிலும் சூடான வாத்திக்கள், வா என் அருகில் அமரு என்று அழைத்து பக்கத்தில் அமர வைக்க அந்த வாத்தியிடமும் பேசி அவரையும் அரட்டைக்குள் இழுக்கும் திறம் வாய்ந்த அரட்டையாளன் அவன்.
வழக்கமாக வடிவேலு காமெடி போல பேருந்தின் வேகத்தை கூட்ட அழகிய பெண்கள் ஓட்டுனருக்கு அருகாமையில் அமர்வது வழக்கம். (அந்த இடத்தில் குறிப்பாக 6 பெண்கள் மட்டுமே அமர்வார்கள், மற்றவர்கள் தெரியாமல் கூட அங்கே செல்ல மாட்டார்கள் - Courtesy
: Terror லேடீஸ் கிளப்)
இதையெல்லாம் மீறி நம் சகுந்தலாவோ, ராமர் கோட்டிற்கு முதல் சீட்டில் தான் அமர்ந்தாள்.
(ஆமா அது என்ன ராமர் கோடு ? -
தனியார் கல்லூரிகளில் ஆண்களுக்கென தனி வழி பெண்களுக்கென தனி வழி ; இதை பிரிக்க ஒரு மஞ்சள் கோடு இருக்கும் - அதுவே ராமர் கோடு எனப்படும்.
பேருந்தில் ராமர் கோடு எப்படி இருக்குமானால், இடது புறம் உள்ள இருக்கைகளில் பெண்களுக்கு பின்னால் ஆண் ஆசிரியர்கள் அமர, வலது புறம் உள்ள இருக்கைகளில் பெண்பால் ஆசிரியர்கள் அமருவார்கள்.
பேருந்துகளில் ராமர் கோடு உயிர் பெறுகிறது.
வாழ்க ராம நாமம், வளர்க இந்துத்து.)
இப்படியாக இவனது குரல் கேட்க, ஒரு நாளில் ஒருமுறையாவது அவளை திரும்பி வைக்க வேண்டும் என்ற கொள்கையோடு அவனும் பேச, அவளும் அந்த target அடைய அவனுக்கு உதவி செய்தாள்.
இவ்வாறாக ஒரு செமஸ்டர் ஓட,
Practical exam வந்து சேர்ந்தது.
Practical
examகளின் பொழுது, கூட்டம் அவ்வளவாக இருக்காது, ராமர் கோடும் இருக்காது.
பேருந்துகள் 3 மணிக்கு தயாராகி,
5.15க்கு ஏவப்பட ஏதுவாக காத்திருந்தது.
அன்று முதன் முதலாக அவன் பேச ஆலற்று, அந்த பேருந்து அனாதையாகி இருந்தது.
அவன் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவளும் அந்த பேருந்தில் ஏறி, சித்திகரிக்கப்பட்ட ராமர் கோட்டின் அருகில் வந்தமர்ந்தாள்.
சற்றும் எதிர்பாராத நேரத்தில் திரும்பி, நீங்க தான அது, கத்திக்கிட்டே வருவீங்க என்றாள்.
இவனுக்கோ, என்னது கத்திக்கிட்டு வருவேனா; கிருஞ்சு (Cringe)
குவியலாகிட்டோமோ என்ற எண்ணத்துடன்.... ஆமாம் என்றான்.
கன்னத்தில் குழி விழும் சிரிப்புடன் (அதுவரை அப்படியொரு கன்னகுழியை அவன் பார்த்ததில்லை) , முன்னாள் படர்ந்த முடியை ஒதுக்கியவாறு, actually நீங்க நல்லா பேசுறீங்க என்றாள்...
பஸ்ஸுக்குள் butterscotch வாசம் நிரம்பியது, (ஏன் Butter fly தான் இருக்கனுமா) மாலை வெயில் கண் கட்டச்செய்தது... அதை எல்லாம் மீறி அவன் அவளிடம் Thanks
என்று கூறி அவனுக்கே உரிதான பாணியில் பேச தொடங்கினான் .
எதுவுமே இல்லனா கூட பேச ஆள் இருந்தா போதும் நல்லா சந்தோசமா இருப்பேன், ஆனால் இன்னக்கி தான் இந்த தனிமை என்றான்.
அதான் நான் இருக்கிறேனே என்றாள் அவள்.
இது போதும் எனக்கு, இதுபோதுமே என்ற பாடல் bgm கேட்காத குறையாக இவன் பேச தொடங்கினான்.
பிறகென்ன ஜாதக பரிமாற்றம் தவிற மற்ற அனைத்தும் நடந்தது.
ராமர் கோட்டின் அழிவு ஆரம்பமானது, இதையெல்லாம் கண்ணாடியில் பார்த்த பேருந்து ஓட்டுநர் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தார்.
எல்லாம் வல்ல ஆண்டவன் அருளால் அன்று வேறு யாருமே பேருந்தில் வராதது, கூடுதல் சிறப்பாக அமைந்தது. (3 மணிக்கு பரிட்சை முடிய, 6
ரூபாய் டிக்கெட்டுக்கு கஞ்சத்தனம் காட்டியது எவ்வளவு நல்லதாக அமைந்தது)
இது போன்ற இடங்களில் "கஞ்சனுக்கு காலனாவும் ஆயுதம்" என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
அன்றைய பேச்சுவார்த்தையில், பொன்னியின் செல்வன் இடம்பெற்றுவிட்டார், கல்கியின் வாசகர்கள் பேசும் பொழுது ; வேறென்ன வேண்டும் ?
அவன் பூங்குழலியின் காதலன் என்றான், அவளோ அருள்மொழி வர்மன் என்றாள்.
அவ்வளவு நேரம் அருள்மொழி மீது அவன் கொண்டிருந்த மதிப்பு ஒரு நொடியில் வெறுப்பாய் மாறியது.
பிறகு சங்கதாராவை உள்ளிழுத்து அவள் அதை படித்திருக்க மாட்டாள் என்ற எண்ணத்தோடு, சங்கதாராவை மையாமாக வைத்து கதைக்க தொடங்கினான்.
(நன்றாக நினைவில் கொள்ளுங்கள், பொன்னியின் செல்வன் காதலர்களுக்கு, சங்கதாரா ஒரு பிரமாஸ்திரம். உங்களின் விருப்பமான நபர் பொன்னியின் செல்வன் பிரியனானால், சங்கதாரா கொண்டு தாக்குங்கள், உங்கள் வெற்றி உறுதி.)
அவள் கண்ணில் அந்த ஆர்வம் தெரிந்தது, அவனும் அதை குறைக்காமல் கதைக்க தொடங்கினான்.
இவ்வாறாக முதல் சந்திப்பில் பல சுவைகள் ஒத்து போக, எப்பொழுதும் போகும் 1 மணி நேர பேருந்து பயணம் அன்று 2 நிமிடங்களாக சுருங்கி முடிந்தது.
காதலின் உத்வேகம் எத்தகையது என்று ஆராய தொடங்குங்கள், நீங்கள் உங்கள் வாழ்வியல் பயணத்தில் எங்கோ எப்படியோ; உங்கள் குடும்பம், சூழ்நிலை என்று பலவாறாக முதல் காதலை தொலைத்து இருப்பீர்கள் / இருக்கலாம்.
ஒருதலை காதலோ, இருமுனை ஈர்ப்போ ; நீங்களே நினைத்தாலும் அந்த காதலை மீட்டெடுத்து உங்கள் முன்னாள் காதலனை/காதலியை அதே உள்ளன்போடு பார்க்க முடியாது.
ஆனால் யாரென்றே தெறியாத என் போன்ற ஒருவன் அல்லது எவளோ ஒருத்தி உங்களின் காதலுக்கு கண்மூடித்தனமாய் உதவி செய்திருக்கலாம்.
அவர்களை இப்பொழுதே அழைத்து பேசுங்கள், உங்களுக்கு 45 வயது ஆனாலும் உங்களின் இளமைக்கு இழுத்து செல்லும் வல்லமை வாய்ந்த அந்த நட்பை வீனடிக்காதீர்கள்
இப்படி அவ்வப்பொழுது கருத்து கரப்பான் பூச்சிகள் எட்டி பார்க்கும், அதை ஹிட் அடித்து ஜட்டியுடன் படுக்க வைக்க முயலாமல், சற்று அன்புடன் அரவனைத்து; விளக்கமாற்றால் (விளக்கம் என்ற மத்தால்) அடியுங்கள், சாகும் வரை புலம்பிவிட்டு போகட்டும்...
கரப்பான் பூச்சிகள் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையோடு நம் கதைக்கு போவோம்...
என்னதான் ஒரு மணி நேரம் பேசினாலும், அவ்விடத்தில் இங்கிதமின்றி அலைபேசி எண்ணை கேட்பது அவனுக்கு உசிதமாக படவில்லை.
பிறகென்ன, வழக்கம் போல தான் ; சமூக வலைதளங்களில் தேடி பிடித்து பறந்தது facebook friend request.
அதை அவள் accept செய்வாளா மாட்டாளா என்ற பெரும் புலம்பல்களோடு ஓடியது 4 நாட்கள்.
இன்றைய காலகட்ட கல்லூரி மாணவர்கள் போலல்லாமல் அப்போது படித்தவர்களுக்கே என ஒரு formula இருந்தது.
செமஸ்டர் நெருங்கினால், இன்டர்நெட்டுக்கு bye bye
அந்த 50mb Pocket இன்டர்நெட் தான் ஒருவனின் Arrear எண்ணிக்கையை கணக்கிடுவது போன்ற ஒரு எண்ணம்.
அந்த ஒரு வாரத்தில்; பரிட்சை அட்டவனை, Practical என்று பல குழப்பங்கள் அவனை நிலைகுலைய செய்தாலும், பரிட்சையற்ற நாட்களில் அவள் வருகைக்காக நூலகம் சென்று வந்தான்.
அங்கு சென்று, இவன் எடுத்துவந்த நாவல்களை சுவாரஸ்யமாக படித்து கொண்டிருப்பான்.
அங்கே வரும் பெண்களெல்லாம், சரியான பொங்கல் சோறு, தயிர்சாதம் என நினைத்திருக்கலாம்.
ஆசிரியர்களோ; இந்த காலத்தில் இப்படி ஒரு பையனா என்று கூட நினைத்து இருக்கலாம்.
ஆனால் அவன் நினைப்பனைத்தும், அடுத்த சந்திப்பில் அலைபேசி எண்ணை வாங்க என்ன வழி என தேடியது.
ஒரு வழியாக அவன் எதிர்பார்த்த அந்த தருணம் அந்த அயோத்தியில் நடந்தது.
ஒருநாள் காலை இவன் நூலகத்தில் நேரம் கழித்து, சோம்பல் தீர்க்க கேன்டீன் டீயை குடிக்கலாம் என்று, தற்கொலை முயற்சி செய்ய முன்வந்த தருணத்தில்;
நம் சகுந்தலாவோ LAB COAT போட்டுகிட்டு, வராண்டாவில் CATWALK செய்து கொண்டிருந்தாள்.
இவன் அவள் LAB குள் நுழைவதை பார்த்து, அடடா என்று தலை முடியை வார முற்படுவதற்குள், RECORD நோட்டில் கை மறைத்து ஒரு HI காட்டி, அதே கன்னக்குழி சிரிப்பில் இவனை கண்காட்சி பொருளாக்கி போனாள்.
அன்று என்ன ஆனதோ தெறியவில்லை, கேன்டீன் தேநீர், தேனில் போட்டிருந்த ஒரு சுவை.
அன்று பல முறை அந்த வராண்டாவில், கஜா வராண்டா கஜா வராண்டா என்று bgm போடாத குறையாக நமது குட்டி போட்ட பூனை நடந்தது.
அன்று மாலையும் பேருந்தில் காலம் கைகூடும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்க, அங்கு ஆப்பு வைக்க அற்புதமாய் கூடவே வந்தாள் மணிமேகலை. (ஒரு பெண்ணை correct செய்ய முயல்பவனுக்கே தெறியும், பெண்களின் பெஸ்ட்டீக்கள் எத்தகைய கிருஞ்சு (CRINGE) என்று... மன்னிக்கவும் டோலிகளே)
இந்த பெண்களுக்கு மட்டும் எங்கிருந்து தான் இப்படி பட்ட நட்பு ஏற்படுகிறதோ தெறியவில்லை.
பேருந்தில் ஏறும் பொழுதே, கம்மல் கரகாட்டம் ஆட, முகம் சிவக்க சிரித்தபடி ஏறி ராமர் கோட்டருகில் அமர்ந்தாள் சீதை, மாலை வெயில் இவள் கம்மலில் ஒளிச்சிதர்வுற்று, இவனுக்கு ராமன் விளைவை விளக்கி கொண்டிருந்தது.
குளிக்காத காற்று இவள் கூந்தலில் நுழைந்து, மல்லிகை மனமேற்றம் செய்து, குளிர்காற்றாய் பூப்பெய்தி கொண்டிருந்தது.
மயிரிழைகள் காற்றின் கண்ணாமூச்சி ஆட்டத்தில், அவள் புரடியில் இருந்த மச்சத்தை மானபங்கம் செய்துகொண்டிருந்தது.
சுடிதார் துப்பட்டாவோ, இவள் அழகிற்கு இங்கு ஏதேனும் ஈடுண்டா என, வழிபோக்கர்களிடம் துப்பு கேட்டு கொண்டிருந்தது.
இவனோ, பேருந்து ஜன்னல் கம்பியில் சாய்ந்தவாறு; அவள் அழகின் வர்ணனையில் கம்பனிடம் போட்டி போட்டு கொண்டிருந்தான்.
இப்படியே கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக அவன் வீட்டை அடைந்தான்.
அடைந்து அலைபேசியை எடுத்து இன்டர்நெட்டை சொடுக்க, அவனுக்கு வந்த முதல் தகவல் ஒலி,
"Ilanthenral accepted your friend request. Say Hi "
Mark zuckerburg
சொன்னா கேக்காம இருப்போமா.
Hi என்ற message தட்டப்பட்டது.
(சற்று முன்னமே அவள் பெயரை சொல்லி இருக்கலாம், இது என்னை அறியாது உங்களிடம் அவள் பெயரை சொன்னதாக இருக்கட்டும். தயவு கூர்ந்து யாரும் facebook search செய்ய வேண்டாம்.)
பிறகென்ன, எல்லா கதைகளும் அரங்கேற்றம் பெற்றது.
பல கதைகள், பல புத்தகங்கள் அவர்களின் தட்டச்சில் இடம் பெற்றது. எல்லாம் மீறி அவன் அவளிடம் அவளது அலைபேசியின் எண்ணை கேட்டான். (ஆண்கள் எங்கு நேரடியாக கேட்டு இருக்கிறோம், சங்கதாராவின் pdf என்னிடம் உள்ளது, அனுப்புகிறேன் என்று கேட்டான்)
அதன் பின் மீண்டும் ஒரு அமைதி, ஒரு 14 மணி நேர மௌன அஞ்சலிக்கு பின், அவள் ஒரு எண்ணை share செய்ய.
சங்கதாரா பரிமாற்றம் அடைந்தது.
(நன்றி காலச்சக்கரம் நரசிம்மா)
பிறகு தினம் ஒரு கதை என்று அவளை அவனும், அவனை அவளும் நன்றாக தெரிந்து கொண்டார்கள்.
கல்லூரி நான்காம் ஆண்டு வரை நல்ல நட்பாக இருந்த இந்த உறவு, பிரிய போகிறோம் என்ற ஏக்கத்தில் காதலானது.
அதுவும் அவ்வளவு சாதாரணமாக இல்லை, கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா முடிந்து அன்று வழக்கத்திற்கு மாறாக இரவு 9 மணி ஆனது பேருந்துகள் புறப்பட.
அன்று அதே ராமர் கோட்டின் அருகில் அவள் அமர்ந்திருக்க இவன் இரண்டு சீட்டுகள் தள்ளி இருக்க, அவன் அலைபேசியில் இருந்து "நான் உன்னை காதலிக்கிறேன்" என்ற குறுந்தகவல் இரண்டாம் அலைகற்றையில் இடைமறித்து, மெதுவியக்கத்தில் பயணித்து அவளிடம் சென்றடைந்தது.
சாதி.. மதம்.. இனம்.. பாகுபாடு..
நீங்கள் படித்தவர்கள், சாதியியத்திற்கு அடிபணிய விருப்பமற்றவராக இருக்கும் பட்சத்தில்..
நீங்கள் ஒருவனின் /ஒருத்தியின் காதலை, எங்க அப்பா அம்மா ஏத்துக்க மாட்டாங்க என்று காரணம் சொல்லி உடைத்தெறிய முன்வரும் பட்சத்தில்.
சற்று யோசியுங்கள்......
உங்கள் பெற்றோர் ஏற்று கொள்ளாமைக்கு காரணம் என்ன ?
அந்த பெண் அல்லது ஆண், வேற்று சாதி, மதம், கோத்திரம் என்று பல காரணம் இருக்கலாம்.
அவ்வாறு அந்த வேற்றானை தங்களது பிள்ளை திருமணம் செய்யும் பட்சத்தில், சுற்றம் என்ன பேசும் ? சொந்த பந்தம் என்ன பேசும் என்ற எண்ணம் தானெனில்.
மறைமுகமாக நீங்களும் சாதியியத்திற்கு கட்டுப்பட்டு போகிறீர்கள் என்பது தான் உண்மை.
இந்த சங்கிலி, உங்கள் பெற்றோருக்காக நீங்கள்; உங்களுக்காக உங்கள் பிள்ளைகள் என்று தொடரும்.
எனவே இதை படிக்கும் பெற்றோரோ, பிள்ளைகளோ, சற்று யோசியுங்கள்...
சாதி ஒழிப்பு என்பது பரியேறும் பெருமாள் நல்ல படம், அசுரன் அருமையான படம், கர்ணன் வெறித்தனம் என்று சொல்வதில் இல்லை.
அங்கு உங்களின் எண்ண ஓட்டங்கள் விலைபோகின்றது.
மத்த சிந்தனைகளை உங்கள் கையில்விட்டு,
மேல் சொன்னவாறு பல இடங்களில் என் பெற்றோரை காரணமாக காட்டி சாதியியம் பார்த்த நான் என் கதைக்குள் போகிறேன்.
சொடுக்கிய குறுந்தகவல் அவளிடம் சேர எப்படியும் அந்த பேருந்து ஒரு நான்கைந்து திருப்பங்கள் தான் எடுத்திருக்கும்.
வழக்கமாக அந்த கல்லூரி பேருந்துகள், வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக புறப்படும்.
அதனால் பின்னால் வரும் பேருந்தின் ஒளி எப்பொழுதும் முன்னாள் செல்லும் பேருந்தினை ஒளியேற்றம் செய்து கொண்டிருந்தது.
திருப்பங்களில் சற்று ஒளி மங்கி மீண்டும் நேர்கோட்டில் ஒளியேற்றி,
கண் மூடி திறந்தால், கலங்கரை விளக்க ஒளியை ஒத்திருந்தது
அவ்வாறு ஒரு திருப்பத்தில் மங்கி, அடுத்த நேர் கோட்டில் ஒளியேற்ற அவள் திரும்பி அவனை ஒரு நொடி பார்த்தாள்.
கண்ணில் காதல் வழிந்தோடும் என்ற எதிர்பார்ப்பு, இமைப்பதற்குள் பதற்றமேற்றியது.
பின்னால் வந்த பேருந்தின் வெளிச்சம் அவள் கண்ணீரில் பிரதிபலித்து, மறுநொடியில் அவன் இதயத்தில் எரியூட்டம் செய்தது
80 கி.மீ. வேகத்தில் செல்லும் பேருந்தின் திறந்த சன்னல் காற்றிலும் அவனுக்கு வியர்த்தது.
அடுத்த நொடி, மணிமேகலை தென்றலின் கன்னத்தை தொட்டு என்னாச்சுடீ என்ற பெண் டோலிகளுக்கே (தோழிகளுக்கே) உரிதான டோனில் (தோணியில்) அவளை அணைத்து தேத்த முயன்றாள்
அவனுக்கு அப்பொழுதுதான் தோன்றியது, முதலில் மணிமேகலையை தூண்டிலிட்டுருக்க வேண்டும் என்று.
அப்படி ஒரு வேகமான ஒரு பயணத்தை அந்த நான்காண்டுகளில் அவன் அனுபவித்ததே இல்லை.
அன்றிரவு சற்று அவசர பட்டுவிட்டோமோ, அவள் அந்த நோக்கத்தில் பழகவில்லையோ என்றெல்லாம் எண்ண ஓட்டங்கள் அவன் மண்டைக்குள் மீண்டும் மீண்டும் ஓடி, விடியலே வந்துவிட்டது.
இரண்டாண்டுகளாக அவளது Good morning இல்லாமல் இவன் வானம் விடிந்ததே இல்லை.
அவளுக்கு good morning அனுப்பி கூல் செய்யலாம் என்று அலைபேசியை எடுத்தான், சார்ஜ் இல்லை.
சற்று சார்ஜ் போட்டுவிட்டு, பல் துலக்கி குளித்து இளைப்பாறி, அலைபேசிக்கு உயிர் கொடுத்தான்
பதட்டத்துடன் பகிரியில் நுழைந்தான், அவளது DP நீக்கம் பெற்றிருந்தது, last seen மறைக்க பட்டிருந்தது.
தான் Block செய்யப்பட்டதாக எண்ணிக்கொண்டு, சோக கீதம் பாடாத குறையாக சனி ஞாயிறு என்று இரண்டு விடுப்பு நாட்களை ஓட்டினான். (Caller tune : கனவே கனவே என்று மாற்றம் பெற்றது, கூடுதல் சிறப்பு
நாட்கள் யுகங்களாக காட்சியளித்தன, எதிலும் கவனம் செலுத்த முடியாமல், முதலில் கிறுக்கப்பட்ட காய்ப் புழுவின் வேதனையை உணர்ந்தான்.
திங்கள் காலை வந்தது, ஒரு தோசையை பிச்சி வாயில் போட்டு கொண்டு கல்லூரி பேருந்தை பிடிக்க பேருந்து நிறுத்தம் சென்றடைந்தான்.
பேருந்திலாவது அவள் முகம் பார்ப்போம், செய்கையிலேனும் மன்னிப்பு கேட்கலாம் என்ற எண்ணத்தோடு காத்திருந்தான்
ராமர் கோட்டருகில் சீதையை காணோம்.
அவளும் அழகிய பதுமைகளோடு கைகோர்த்து வாகனத்தை வேகப்படுத்த முற்பட்டு முன்னாள் இருக்கையில் அமர்ந்தாள் போலும்.
மூன்றாண்டுகளில் நடக்காத விடயங்கள் எல்லாம் அன்று நடந்தேறியது.
அவன் முதல் முதலில் பார்த்த அதே மஞ்சள் சுடிதார், நீல நிற ஷூ, கேரளத்து கதகளியாடும் கலைஞர்களின் கீழாடையை ஒத்த ஒரு தோடு.
அவளுக்கே உரிதான குதிரைவால் சடை, கூறிய வாள் தோற்கும் அளவிற்கு கூர்மையான புருவ மை,
அகில அண்டத்தையும் உள்ளடக்கும் வல்லமை கொண்ட ஒரு லேடீஸ் ஸ்லிங் பேக், என அவளை பார்த்தும் பார்க்காததுமாய் குறிப்பெடுப்பதற்குள், பேருந்து இரயில் நிலையம் கடந்திருந்தது.
இவள் ஏதோ கை நீட்டி பேச, ஓட்டுனர் அங்கே பேருந்தை நிறுத்தினார்
அவளும் மேகலையும் அங்கே இறங்கி கொண்டார்கள்.
அவனும் அங்கேயே இறங்கி அப்படியே சென்றிடலாம் என்றிருந்தான்.
ஆனால் அந்த எண்ணம் வருவதற்குள், அந்த சாரதி (சூரரை போற்று சூர்யாவின் சித்தப்பா பையன்), என்னத்த பாத்தானோ தெறியல, ஒரே அழுத்து அடுத்த ஐந்தாம் நொடி பேருந்து அவ்விடத்தில் இல்லை.
அவள் இறங்கியவுடன் அவள் விழி வழியில் ஒரு வழிபோக்கனாய் நாம் இருப்போமா என்று அவளை பார்க்க முயல்கையில், மேகலை மட்டும் இவன் நோட்டம் விடுவதை பார்த்து தென்றலிடம் ஏதோ சொல்லி சிரித்து அவள் தோள்களை பற்றினாள்.
இவனது எண்ணஓட்டங்களுக்கு அந்த தீனி சற்று தேவையற்றது தான், ஆனால் என்ன செய்வது ? விதி வலியது.
பிறகென்ன மாலை பேருந்தில் அவள் வரவில்லை, இரயில் நிலையத்தில் பேருந்து எந்த சம்மந்தமும் இல்லாமல் கடந்தோடியது.
மறுநாள் முதல் அவள் இவன்கண் படவே இல்லை..
எங்கிருந்து வந்ததோ தெறியவில்லை அந்த தைரியம், தனது Splender பைக்கை எடுத்து கொண்டு, பயணமானான் ; யாரையுமே தெரியாத ஊருக்கு, அவளை தேடி..
அந்த ஊரை அடைந்து, அங்கிருந்த டீ கடையில், அய்யா இங்க சீனிவாசன் sir வீடு எங்க இருக்கு ?
ஊர் காரங்களுக்கே உள்ள திமிரோடு, உங்களுக்கு எதுக்கு தம்பி
சற்று தயக்கத்தோடு அவன், இல்லங்கய்யா அவங்க எங்களுக்கு வேண்ட பட்டவங்க தான், அவங்கள நேர்ல பாத்து கொஞ்சம் பேசனும்னு வந்தேன் என்று சொல்ல
பத்து நிமிஷம் பொறுங்க அய்யா இப்படித்தான் போவாரு பாத்து பேசிக்கிடலாம் என்றான் டீ கடை காரன்.
டீ கடை காரனின் நோக்கம் புரிந்தவனாய், டீ கடை வச்சா பெரிய பிரதம மந்திரினு நெனப்பு என்று நினைத்து கொண்டு (இதில் எந்த உள் குத்தும் இல்லை), வண்டியை எடுத்து கொண்டு வீடு திரும்பினான்.
பொறுத்து பொறுத்து பார்த்து, அலைபேசியில் தொடர்ப்பு கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு சற்று தைரியம் ஏற்றி, அடுத்த வெள்ளிக்கிழமையில் தொடர்பும் கொண்டான்
ஏதோ ஒரு பெண் எடுத்து, சொல்லுங்க யார் வேண்டும் என்று கேட்க ; துண்டித்து அட்ரெநெல்லின் ஏற்றம் பெற்றான்.
ஆனால் அவனது முயற்சி வீண்போகவில்லை
சனி கிழமை காலை ஒரு text message வந்தது...
"why did
you call me ?" என்று.
அவன் : why didn't you text me ?
அவள் : why should I ? (அகம் புடிச்ச கழுதை)
சிறிது நேரம் கழித்து...
அவன் : Antha alavuku pocha..
மாலையில்...
அவள் : entha alavuku, onnum puriyala..
அவன் : Call ?
அவள் : Not now, veetla ellaarum irukaanga..
கரையை கடக்கும் புயலென, பல வகையான ஒரு வரி கேள்வி பதில்கள் text மெசேஜில் இடம் பெயர்ந்தது.
TRAI நெறிமுறைபடி இன்றைய 100 text message களை நீங்கள் பயன்படுத்திவிட்டீர்கள் என்ற தகவல் வரும் வரை தொடர்ந்தது.
வாழ்க TRAI ... (ஒரு நாளைக்கு 100 MESSAGE என்ற கணக்கு இன்னக்கி வரைக்கும் புரியல எனக்கு)
ஆனால் அந்த மூன்றெழுத்து வார்த்தையை அவனும் இழுக்க வில்லை, அவளும் சொடுக்க இடம் கொடுக்க வில்லை.
இப்படியாக அந்த இரண்டு நாட்கள் விரைந்தோட, திங்கள் வந்தது ; கல்லூரிக்கு அவ்வளவு மகிழ்ச்சியோடு அவன் தயாரானதே இல்லை.
200 text மெசேஜ்களுக்கு அவ்வளவு சக்தியுண்டா என்றெண்ணும் அளவுக்கு ஒரு மாற்றம்.
பேருந்தில் ஏறி அமர்ந்து அவளை தேட தேவையே இல்லை என்பது போல, மணியும் அவளும் ராமர் கோட்டின் அருகில் அமர்ந்திருந்தார்கள்
இவனும் சென்று பின்னால் சீட்டில் பலாஜியுடன் அமர்ந்து கொண்டான்.
என்னவென்று தெறியாத அளவுக்கு அன்று அவள் சற்று கூடுதல் அழகாக இருந்தாள்
அவள் கம்மலாடும் அழகை ஸ்லோ மோஷனில் ரசித்தபடி அமர்ந்திருந்தான்.
அவ்வப்போது காற்றில் வளைந்த முன்முடி, கம்மலை வம்பிழுத்தும், கம்மல் கற்களில் சிக்கி புரண்டு தப்பித்து கொண்டிருந்தது - இவனைப்போல்.
இதை ரசித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், எதிரே வந்த லாரி சற்றும் எதிர் பாராத நேரத்தில் இவர்களின் பேருந்தில் உரசி, பேருந்தை நிலைகுலைய செய்ய, ஓடும் பாதையில் இருந்து தடுமாறிய பேருந்து அருகாமையில் இருந்த மதுக்கட்டையில் முட்டி மோதி நிறுத்தப்பட,
பேருந்தில் இருந்த பெண் குரல்கள் எல்லாம் ஒன்று கூடி, சூப்பர் சிங்கர் கோரஸ் தோற்கும் அளவிற்கு சத்தம் எழுப்பி முனுமுனுப்புடன் என்ன நேர்ந்தது என்று எல்லோரும் இயல்பு நிலை திரும்ப சிறு நேரம் எடுத்திருக்கலாம்.
ஆனால் இவையனைத்தும் கனநேரத்தில் நடந்தேறியது.
அருகில் இருந்த ஊரார் அனைவரும் அவ்விடம் வந்து சேர்ந்து, சிறு அடி பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்க முயன்ற தருணம்
இவனுக்கு கேட்டதெல்லாம் அவள் ஒருத்தியின் குரல் மட்டும் தான்.
அப்பா ! அம்மா ! வலிக்குதே, என் தல, கை, என்றவள் குரல் எழுப்பி கொண்டிருக்க.
இவன் தனது தலையில் இருந்து வழியும் இரத்தத்தை பொருட்படுத்தாமல், தென்றல் ஒண்ணும் இல்ல, எழுந்திரி, வெளிய போயிடலாம் என்று சொல்ல...
அவளும் மத்திரிக்க பட்ட கோழியாய், அவன் சொன்ன சொல் கேட்டு, எழுந்து நடந்தாள்.
மணிமேகலையும் அவளை தொடர்ந்து எழுந்து நடக்கலானாள்.
சன்னலோரம் இருந்தபடியால் அவளுக்கு பட்ட அடியை விட, அங்கு நடந்த சம்பவத்தை தெளிவாக பார்த்தமையால், பயமிகுதி அவளை மேலும் வலுவிழக்க செய்திருந்தது.
இவன் அங்கும் இங்கும் ஓடி ஒரு பருத்தி துண்டை எடுத்து வந்து தலையில் வழியும் இரத்தத்தை துடைக்க முயல்வதற்குள், அங்கிருந்த பெண் ஆசிரியை அதை வாங்கி துடைக்க முற்பட, மற்றவர்கள் இவர்களை சுற்றி நின்று என்ன நடக்கிறது என்று பார்க்க தொடங்கினார்கள்.
தென்றல் கிட்டத்தட்ட நிதானம் இழந்திருந்தாள்..
தென்றலுக்கு கூட தென்றலின் தீண்டல் தேவை பட்டதாக தோன்றியது.
உடனடியாக காட்டுத்தனமாக கத்தினான், எல்லாரும் கொஞ்சம் நகருங்க..
இவங்களுக்கு கொஞ்சம் காத்து வரட்டும்...
அனைவரும் சற்று நகர்வதற்குள் 108 அவசர ஊர்தி அங்கே வந்து சேர்ந்தது, உடனே மாற்று பேருந்தும் வந்து சேர்ந்தது.
தென்றல் மற்றும் லேசான காயத்துடன் இருந்த இருவரை அழைத்துக்கொண்டு ஆசிரியை ஒருவர் 108 அவசர ஊர்தியில் ஏற, அவனையும் அவளுடன் அவசர ஊர்தியில் சிறையிட்டனர்.
மற்றவர்கள் மாற்று பேருந்தில், கல்லூரிக்கு செல்ல முடிவெடுத்து அங்கிருந்து புறப்பட்டனர்.
ஆங்காங்கே இரத்த துளிகளுடன், அவ்விடம் போர்கலமாய் காட்சியளித்தது.
இவர்கள் ஐவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டு, தேவையான முதலுதவி செய்யப்பட்டு, ஓய்வறையில் படுக்க வைக்க பட்டனர்.
இவனுக்கு அடுத்த படுக்கையில் அவள் இருந்தாள், தலையில் இருவருக்கும் ஜோடியாக கட்டப்பட்ட வெள்ளை துணி அவர்களை ஒருமை படுத்தியதாக நினைத்து சற்று பம்மாத்தடைந்தான்.
அவள் சற்று திரும்பி சற்றும் முற்றும் பார்க்க முயல, அவளும் அவனும் நேருக்கு நேர் கண்ணோடு கண் பார்த்தார்கள்.
ஏதும் பிரச்சனை இல்லையே என்று இவன் கேட்க விரைய, அவளோ ; எனக்கு ஒன்னுமில்ல, நீ okey தான என்றாள்.
இவன் சற்று தலையசைத்து, அவளை பார்த்தபடி கதைக்கலாம் என்று சற்று திரும்ப முயல, தென்றலின் பெற்றோர் அங்கே வந்தடைந்தனர்.
அவளது தாய், பொறந்தநாளும் அதுமா என் புள்ளைக்கு இப்டி ஆகி போச்சே என்றவுடன் இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
இது தெரியாமல் போயிற்றே என்று அவன் தன்னை தானே காரித்துப்பாத குறையாக நினைத்து சற்று நிமிரும் நேரம், அவனது பெற்றோரும் அவ்விடம் வந்து சேர்ந்தார்கள்.
விபத்துகள் நேரும் பொழுது, நமக்கு என்ன நேர்ந்தது என்பதை சற்றும் பொருட்படுத்தாமல், தங்களை சார்ந்தவர்க்கு என்ன ஆயிற்று என்று நீங்கள் சிந்திக்கும் பொருட்டு, உங்களுக்கு அவர்களின் மீதுள்ள அலாதியான அன்பு தெரிகிறது.
வேலனுக்கு இவ்வாறு நடப்பது முதல்முறையன்று, அவனது பதினான்காம் அகவையில், தந்தையுடன் தீபாவளிக்கு துணி எடுக்க சென்று வீடு திரும்பும் வழியில் பேருந்து விபத்துக்குள்ளாகி, தலைகீழாக கவிழ, இருளில், அப்பேருந்திலிருந்து வெளி வந்து, அவன் தனது தந்தையை தேட, அவர் இவனை தேட ; அந்த கோர சம்பவம் இவர்களை நாட்கணக்கில் வருத்தியது.
அந்த விபத்தில் ஏற்பட்ட காயத்தால் பல வருடங்கள் அவனுக்கு தலைவலி இருந்ததும் உண்டு.
அதே போல ஒரு சூழலைதான் வேலன் இப்பொழுதும் கடந்திருந்தான்.
அதே தலைவலி இவனை அன்று பற்றிக்கொண்டது, ஆனாலும் வீட்டை அடைந்த உடன் தனது கைபேசியை தேடி அவளிடம் பிறந்தநாள் வாழ்த்து கூற முற்பட்டான்.
பதிலளிக்காத காரணத்தால் குறுந்தகவலில் வாழ்த்துகளை பின்வருமாறு ஏவினான்
"வாழ்வில், எனது அன்னைக்கு பிறகு நான் மதிக்கும் பெண்ணாய், என் வாழ்வில் வந்தவளே. இதுவரை பெறாத இன்பமனைத்தும் இவ்வகவையிலே பெற்று வாழ வாழ்த்துகள்."
அடுத்த 5 நிமிடத்தில்... அடுத்த ஏவுகணை
"என்னால் இயன்ற மட்டும் உனது முகத்தில் புன்னகை விதைக்க முயன்றேன்,முயல்கிறேன், முயல்வேன்..
மணிக்கணக்கான பேச்சு, இதைதான் பேச வேண்டும் இதை பேச கூடாது என்றெல்லாம் நமக்குள் எந்த வரைமுறையும் இல்லாத பொறுப்பு திறப்பை, நான் காதலென்றெண்ணி உன்னிடம் அதை பகிர்ந்தேன்."
"உனது விருப்பம் என்ன என்பதை, என் காதலை பகிர்ந்தவுடன் உன் கண்ணில் கண்டேன், இனி அப்படி ஒரு வார்த்தையை சொல்லி, நமது நட்பை கொச்சை படுத்த விரும்பவில்லை.
மூன்றாம் ஏவுகணை !
என்னால் முடிந்த ஒரே பிறந்தநாள் பரிசு, உன்னிடம் காதல் என்ற சொல்லை பயன்படுத்தி வற்புறுத்தாமல் இருப்பதே"
"Happy
Birthday Ilanthenral Srinivasan"
"அதே குழிந்த சிரிப்போடு என்னிடம் பேசும் தென்றல், மீள்வாள் என்ற நம்பிக்கையுடன் உனது நண்பன் வேலன்"
இவ்வாறாக பல குறுந்தகவல் ஏவுகணைகளை தட்டி, தான் உட்கொண்ட வலிமரக்கும் மாத்திரைகளின் மாயத்தில், விழி மூடினான்.
மூடி மூன்றாம் நொடி, தனது கைபேசி சிணுங்குவதை உணர்ந்தான்.
ஆனால் அதை கையிலெடுத்து, யாரென்று பார்க்காமல் On செய்து காதில் வைத்தான்.
(உங்களது ஆர்வம் புரிகிறது... சற்று பொறுமை கொள்ளுங்கள்)
மற்றொரு முனையில், பாலாஜி - மச்சான் எப்படி இருக்க, தலைல ரொம்ப இரத்தம் வந்துச்சே டாக்டர் என்ன சொன்னாங்க ?
நாளைக்கு காலேஜ் வந்துடுவியா என்றான், இவனோ, என்னால முடியல மச்சான்.
Tablets
போட்டுட்டேன், தூங்க போறேன் அப்புறம் பேசவா என்றான்.
Sorry
மச்சான், நீ தூங்கு நாளைக்கு பேசலாம் என்றான் பாலாஜி.
கையோடு alert slide பட்டனை தள்ள, கைபேசி Silent mode சென்றடைந்தது.
நிம்மதியான உறக்க நிலையை அடைந்தான் வேலன்.
இவன் இருளடைய, தென்றல் விடியல் கொண்டாள் போலும்.
இவனது குறுந்தகவல்களை பார்த்து, இவனை தொடர்பு கொள்ள முயன்றாள்.
அவனிடம் இருந்து பதில் இல்லை.
பிறகு புலனத்திலும் முயன்றாள்..
Ringing
என்றே வந்தும், பதில் ஏதும் இல்லை.
நான்கு முயற்சிக்கு பின், முயல்வதை நிறுத்தி.. அவன் அனுப்பிய குறுந்தகவல்களை மீண்டும் படித்து, உறக்கம் கொண்டாள்.
(யாரிடமேனும் ஏதேனும் சொல்ல முயன்று, அதை அவர்களிடத்தில் சொல்ல சந்தர்ப்பம் அமையாமல் போகும் தருவாயில், மீண்டும் அவர்களை பார்க்கும் பொழுது ; நீங்கள் சொல்ல விரும்பிய வார்த்தைகளின் வீரியம் குறையதான் செய்கிறது.
உங்களது ஒருதலை காதலனிடம்/ காதலியிடம் அல்லது crush இடம், சொல்ல முயன்று பல முறை தட்டச்சில் type
செய்து, delete செய்யப்பட்ட பல கவிதைகளை போல.)
நம்பகத்தன்மை.
ஒரு பெண் நட்பென நினைக்கும் உறவு, காதலாகும் பொழுது அவன் மீது அவள் கொண்ட நம்பகத்தன்மை உடைகிறது...
ஒரு பெண் உங்களிடத்தில் மனம் விட்டு பேச எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட, உங்கள் மீதான நம்பகத்தன்மையை வியாபார படுத்த, பல பரமபத (சைன் வேவ் யோசனைகள்) யோசனைகளை சிந்தித்து, அதை அவள் மனதில் netflix
series போல மீண்டும் மீண்டும் ஓட்டி Binge Watching செய்திருக்கலாம்.
ஆனால் அவள் Binge
வாட்சிங் பொழுதில், முடிவற்ற அந்த தொடரை மீண்டும் மீண்டும் ஓட்டினாலும், அதன் வேகம், Dairy Milk Silk ஒன்றை kiss
me bgm உடன் உண்ணும் வேகத்தில் உணர்ந்து நம்பகத்தன்மை பெறுகிறாள்.
(இது காதல் வயப்பட்ட பெண்களுக்கு மட்டும் புரியலாம் - புரியவில்லை என்றால் கவலை வேண்டாம் - உங்களவனது Series
விரைவில் Release செய்யப்படும்)
தென்றல் உறங்கட்டும் என்று நாம் ஒதுங்கிய நேரத்தில், தென்றல் தூங்கி இருந்தால்; அதில் என்ன பிரமாதம் இருக்க போகிறது !
Universal
truth நிகழ்ந்தது, நான் இங்கே தூக்கம் கெட்டு கெடக்கன், உனக்கென்னடி தூக்கம் என்பார்ப்போல; அடுத்த நொடி மேகலை நோக்கி பறந்தது அழைப்பு.
இந்த பாடலை காப்பி செய்ய ஸ்டார் மற்றும் ஒன்பதை அழுத்தவும். கட்டனங்களுக்கு உட்பட்டது...
ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்று நா.முவின் வரிகள், அதை கேட்க தொடங்கிய அடுத்த வினாடி; தென்றல் அழைப்பை மேகலை ஏற்று "சொல்லுடி, எப்படி இருக்கே இப்போ" என்றாள் மேகலை.
"நல்லா இருக்கேன் டி "
Tablets
போட்டாச்சு தூங்கி எழுந்தா okey ஆயுடுவேன்.
உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.. உனக்கு ஒரு Screenshot
அனுப்புறேன் அதை பாரு சொல்றேன் என்று தென்றல் முடிப்பதற்குள், யாரு வேலனா என்றால் மேகலை...
தென்றல் நினைத்தும் பார்க்கவில்லை, மேகலை இப்படி ஒரு கற்பூரமாய் இருப்பாள் என்று.
(இந்த இடத்தில் ஒரு வேண்டுகோள்; ஒருவர் எந்த நம்பிக்கையோடு வேண்டுமானாலும் ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை உங்களிடம் பகிர்ந்திருக்கலாம், நீங்கள் மற்றவர்களுக்கு உங்கள் மீது உள்ள நம்பிக்கையை சம்பாரிக்கவோ, அல்லது அவர்களின் ஆறுதல் வார்த்தைகளை உங்களுக்கு ஏற்றார் போல மாற்று ஒப்புதலுடன் வாங்கவேண்டும் என்ற நோக்கதிலோ; தயவு செய்து அந்த செய்தியை screenshot
எடுத்து அனுப்பாதீர்கள். அவ்வாறு நீங்கள் அனுப்பும் நேரத்தில் உங்களை போலவே வேர் ஒருவனும் அவர்களின் நம்பிக்கையை சம்பாரிக்க நீங்கள் அவரை பற்றி என்ன பேசினீர்கள் என்ற screenshot பறக்கவிடலாம்.)
#நினைவில் கொள்ளுங்கள் இவ்வுலகம் மிக சிறியது
#screenshot
is injurious to friendship
#screenshot
kills privacy
அந்த பகீர் படபடப்பு தென்றலை சற்று திக்குமுக்காட செய்திருந்தது,
ஒரு நிமிஷம் இருடி என்று மேகளையிடம் கூறிவிட்டு, உடனடியாக அலைபேசியுடன் மொட்டைமாடியை
அடைந்தாள்.
Water
tank இருந்த மூலையை அடைந்தாள், அந்த குளிர்ந்த சுவற்றில் சாய்ந்து அமர்ந்து, வானத்தை பார்த்தாள்; ஒளிர்ந்த வெண்ணிலவை வெள்ளை மேகம் மறைக்க, நிலவு தனது வெண்மை இழந்து ஒளிமங்கி காட்சியளித்தது.
(தென்றலை வேலன் மங்க வைத்தது போல)
ஆனாலும் கருவானம் விடவில்லை, தனது கருமையால் நிலவை வெண்மையாக காட்ட முயற்சி செய்து கொண்டுதான் இருந்தது. (மேகலையை போல)
இரண்டு மாடி ஏறியதன் பயனால்,
200 மீட்டர் ஓட்டம் ஓடிய பெண்ணாக தனது சூடான மூச்சிகாற்றை, குளிர்ந்த காற்றில் பாய்ச்சி ; சொல்லுடி இப்போ என்றாள் .
மேகலையை இப்பொழுது பதற்றம் பற்றி கொண்டது, ஆனாலும் தோழிகளுக்கே உரிய பாவனையில், என்னடி வேலன்னு சொன்ன உடனே இப்டி மூச்சு வாங்குது என்று ஒரு கீச் சிரிப்பை சிதற செய்தாள்.
எருமை அதெல்லாம்
ஒன்னும் இல்ல, வீட்ல யாராச்சும் என்ன பேசுறேன்னு கேட்டுட்டா என்ன பண்றது அதான் மொட்டை மாடிக்கு வந்தேன் என்றாள் தென்றல் .
பாருடா ; புள்ளைக்கு பயத்தை - மறுபடி மறுபடி வம்பிழத்தாள் மேகலை.
அதெல்லாம் இருக்கட்டும் வேலணை பற்றி நீ என்ன நினைக்குற என்றாள் தென்றல் .
"அட நாயே, நான் கேக்க வேண்டியத எல்லாம் நீ கேக்குற ?"
என்றாள் மேகலை.
"Eeee..
என்று சிரித்தவாறு, அவன் கூட பேசாம இருந்தப்போ எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சுன்னு உனக்கே நல்லா தெரியும்"
அவன் சாதாரண பசங்க மாதிரி இல்லடி, அவன் ஏதோ ஒரு விதத்துல சாதாரண பசங்க கிட்ட இருந்து
வித்யாசமா இருக்கான் டி.
அவன் அப்டி இப்டின்னு, விஜய் tv ல கும்கி
படத்துக்கு கோபி நாயர் பேசுற வரையறை மாதிரி ஓடியது.
இதையெல்லாம் சளிபில்லாமல் கேட்ட மேகலை, தென்றலை நோக்கி ஒரே ஒரு கேள்வியை கேட்டாள்.
இப்போ வேலன் கிட்ட என்ன சொல்ல போற ?
அவன் கிட்ட நீ அவன
காதலிக்கிறேன்னா ?
Final
year வந்தாச்சு, மிஞ்சி மிஞ்சி போனா ஒரு 90 நாள் நாமெல்லாம் இப்டி bus
ல ஒன்னா போகலாம். அதுக்கு அப்புறம் ?
நீ அனுப்புன,
screenshot பார்த்தேன்; அவனே எல்லாதுக்கும் முற்று புள்ளி வைக்கிறான். நீ தேவை இல்லாமல் அரைபுள்ளி போட்டு எல்லாதாயும் தொடங்கி வைக்காத.
இதையெல்லாம் உங்க வீட்ல எப்படியும் ஒத்துக்க
மாட்டாங்க, அப்புறம் எதுக்கு தென்றல் இப்டி complicate
பண்ணிக்கிற உன்னோட life
ah என்றாள் மேகலை .
ஏண்டா இவளுக்கு இந்த screenshot அனுப்பினோம் என்று தென்றலுக்கு தோன்றியது.
ஆனாலும் மணிமேகலையின் எண்ணங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவள் இழந்திருந்தாள்.
(காதல் வயபட்ட பலருக்கு இதுதான் பிரட்சனை ; உங்கள் எண்ணங்களுக்கு தோழமை தலையசைக்க வேண்டும் என்றே அவர்களிடம் பேசுகிறீர்கள். அவர்கள் கூற வரும் உண்மையான கருத்துகளுக்கு உங்கள் முக்கியத்துவம் செவிசாய்ப்பதில்லை - உங்களுக்கு ஆமா சாமி போடும் தோழமை தான் அப்பொழுது தேவை படுகிறார்கள் - இங்குதான் காதலுக்கு கண் குருடோடு, செவியும் பழுதாகிறது)
இதுவரை வராத தலைவலி தென்றலுக்கு வந்ததாக மேகலையிடம் கூறினாள்.
இங்குதான் மேகலை திறம்பட ஒரு விஷயத்தை கூறினாள்,
" இங்க பாரு புள்ள,
உனக்கு வேலன் தான் வேணும்னா உனக்கு முழுசா உதவி செய்ய நான் தயார். ஆனா எனக்கு உன்னையும் , உன் குடும்பத்தையும் ரொம்ப நல்லா தெரியும்.
நான் இதுவரைக்கும் எது சொல்லி இருந்தாலும் உன்னோட நல்லத்துக்காக மட்டும் தான் சொன்னேன்.
இதயெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காம, இப்போ நல்லா தூங்கு.
எடுத்தோம் கவுத்தோம்னு இதெல்லாம் முடிவு செய்ய கூடாது.
நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடு.
எனக்கு தெரிஞ்ச தென்றல், ரொம்ப தைரியமான, எதார்த்தமான ஒருத்தி.
சொல்லப்போனா என்ன மாதிரி கிராமத்து புள்ளைங்களுக்கு உத்வேகமே தென்றல் மாதிரி ஆளுங்க தான்."
அப்டின்னு சொல்லிட்டு, நான் ஏதாச்சும் தப்பா சொல்லிருந்தா என்னய்ய மன்னிச்சுக்க புள்ள என்றாள் மேகலை.
தென்றலுக்கு மணிமேகலையின் மீதிருந்த நம்பிக்கை மேலும் உயர்ந்தது, எந்த screenshot um பகிறாமல்.
(மன்னிப்பு என்ற வார்த்தைக்கு, அவ்வளவு மதிப்பு உண்டு.. என்னதான்
friends குள்ள sorry thanks லாம் வேணாம்னு சொன்னாலும் , உங்ககிட்ட மன்னிப்பு கேக்கும்
நண்பர்களை இழக்காதீர்கள் - இது போன்ற ஒரு நண்பனை இழப்பது, ஆயிரம் க்ரோத நட்புகளை சம்பாரிப்பதற்கு சமம்.)
நீ எதயுமே தப்பா சொல்லல மணி, இப்டி ஒரு தெளிவு பிறக்கும்னு தான் இந்த நேரத்துலயும், உனக்கு போன்
பண்ணினேன் என்றாள் தென்றல்.
நான் இப்போ நிம்மதியா தூங்க போறேன், நீ என்ன சொன்னாலும் கண்டிப்பா நான் அத
தப்பா நினைக்க மாட்டேன் மணி என்று கூறி அழைப்பை துண்டித்து, வானத்தை பார்த்தாள்..
மேகம் கலைந்து, நிலவு பிரகாசித்தது.
ஆனால் வானத்தின் கருமை மட்டும் ; நிலவின் வெண்மையை எடுதுயம்பி கொண்டுதான் இருந்தது.
(மேகலையையும் சற்று விரும்புங்கள்.. இந்த நேரத்தில், உங்கள் பள்ளி பருவ மேகலையை தொடர்பு கொள்ளலாம். அவர்களிடம் இந்த பதிவு அவர்களை நினைவு கொள்ள செய்தது என்று பகிறலாம்)
எனக்கென யாரும் இல்லை - என்று பலரும் வாழ்வின் பல நிலைகளில் நினைத்து வருத்தமுற்று, முடங்கி யாரின் செயலையும் கண்டுகொள்ளாமல் தனது வட்டத்தை சுருக்கி கொண்டு, தன்னியல்பு துறந்து அமர்ந்திருக்கலாம்.
அப்படியொரு நிலையில்தான் வேலன் அன்று இருந்தான் .
இப்படியொரு நிலையில் எப்படிதான் அவனால் தூங்க முடிகிறது என்று பலரும் கேட்கலாம்.
வேலனின் நிலையில், உடலுக்கு தூக்கம் வேண்டும், மனதுக்கு தென்றல் வேண்டும் என்ற இழுப்பரிக்கு நடுவில்; மருத்துவம் வென்றது.
அவனே தென்றலின் பதிலுக்கு காத்திருக்க நினைத்தாலும், அவன் விழி வறண்டு, இமைகள் கட்டி பிடித்து புணர்ந்தன.
உடலின் சோர்வை ஆங்கில மருந்து பார்த்துக்கொண்டாலும் , மனம் சோர்வு அவனது மனதை தூங்க விடாமல் பலவாறு வருத்தி அங்கும் இங்கும் ஊசலாட செய்து
கொண்டிருந்தது,
அந்நேரதில் தென்றல் இவனுக்கு அலைபேசியில் அழைத்து , "நான் உன்னை காதலிக்கிறேன் வேலா; ஆனா நமக்கு இப்போதைக்கு படிப்பு தான் முக்கியம், இப்போதைக்கு நல்லா படிப்போம், நல்ல வேலைக்கு போயிட்டு நம்ம வீட்ல பேசலாம், கண்டிப்பா வீட்ல ஒத்துக்குவாங்க. " என்றாள்.
பிறகு வேலன் மகிழ்ச்சியுற்று, வேகமான இதயத்துடிப்புடன், எனக்கு உன்ன இப்போவே பாக்கணும் தென்றல் என்று சொல்லி உங்க வீட்டு பால்கனிக்கு வந்துடு நான் தூரமா நின்னு உன்ன பாத்துட்டு போயிடுறேன் என்றான்.
அந்த அதிகாலையில், தனது வண்டியை எடுத்துக்கொண்டு தென்றலின் ஊரை சென்றடைகிறான், அங்கு அவளது வீடு இருந்த இடத்தில் வேலனின் வீடு இருந்தது, வேலனின் அப்பா அருகில் இவன் முதல் முறை மொக்கை வாங்கிய டீக்கடைக்காரண் இருந்தான்.
வேலன் வண்டியில் அங்கு வந்ததும், அந்த டீக்கடைக்காரண் " இவன் தான் அய்யா நான் சொன்ன பொறுக்கி பய" என்று கை
நீட்ட.
வேலன் வேர்வை மழையில் போர்வை நனைத்து எழுந்து அமர்ந்தான்.
(இது போன்ற Teleport கனவுகள் நம்மில் பலருக்கு வந்திருக்கும், ஆனாலும் நான் உங்களின் ஆசைகளை இங்கு இவ்வாறு கொலை செய்திருக்கக்கூடாது மன்னியுங்கள்.
courtesy
: தமிழில் கலசம் சீரியல் - Directed by ரம்யா கிருஷ்ணன்
if
you want it in international way : நன்றி கிறிஸ்டோபர் நோலன்)
கருவானத்தின் விடியலை நோக்கிய பயணத்தில், அதிகாலை நேரம் 3.30
இருக்கலாம் , அதை confirm செய்ய தன் அலைபேசியாய் on செய்ய mobile
screen ஐ double
tap செய்தான் வேலன்.
5
missed calls என்றிருக்க, Lockscreen இல் இருந்த ஏஞ்சலினா ஜொலியை ஓரம் தள்ளி, 8436725 என்று 90s
காதலர்களுக்கே உரிய விதத்தில் தென்றலின் பெயரை password ஆக enter
செய்து உள்நுழைந்தான்.
தென்றல்தான் அழைத்தது என்று தெரிந்த உடன் மேலும் குதூகலம் அடைந்தான்.
தான் அனுப்பிய குறுந்தகவல்களுக்கு ஏதேனும் பதில் வந்துள்ளதா என்று பார்த்தான்.
அதில் எந்த பதிலும் இல்லை..
"புலனத்தை சென்றடைந்தான், அங்கும் பதில் இல்லை..
ஆனால் அங்கும் அவளது அழைப்பு வந்திருந்ததை பார்த்தான்.
பிறகு அவளது Last
seen பார்த்தான் " இரவு 12.38
என்றிருக்க, தூங்காம என்ன பண்ணிருப்பா என்று எண்ணிக்கொண்டு;
அவளை இந்நேரதில் தொடர்பு கொள்ளலாமா வேண்டாமா என்ற ஒரு குழப்பத்தில், கையில் செவிக்கூவியுடன் (headphones)
பால்கனியை அடைந்தான்.
அதுவரை இல்லாத குழப்பங்கள் அனைத்தும் அவனை பற்றிகொண்டது.
இதுபோன்ற மனநிலையில், பாடல்களின் இசை நம்மை அமைதிக்கொள்ள வைக்கும், ஆனால் பாடல் வரிகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும்.
பையா திரைப்படத்தில் வரும்
"என் காதல் சொல்ல நேரமில்லை உன் காதல் சொல்ல தேவை இல்லை என்ற பாடல்" யுவனின் இசையில் அவனை அமைதி கொள்ள செய்தாலும் ; ஆனால் நா.மு விடவில்லை
"
ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி, அந்த நிமிடங்கள் நீளட்டுமே ;
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி, எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே;
யாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன், என்னை அறியாமல் உனை பார்க்கிறேன்;
சிறு பிள்ளை என, எந்தன் இமைகள் அது , உன்னை கண்டாலே குதிக்கின்றதே .. " என்று வேலனை உருக்கிவிட்டார்.
(நா. முத்து குமாருக்கு நிகரேது
? சொற்கத்தில் எழுதி தீருங்கள் ஆசானே)
இந்நேரதில் அழைப்பதா வேண்டாமா என்றிருந்த மனநிலையை இந்த பாடல் வரிகள் ஊக்குவித்து அவனை தென்றலை அழைக்க வைத்தது.
பற பற பற பறவையொன்று, என்ற வைரமுத்து வரிகள் caller tune ஆக ஒளிக்க..
மருந்துகளின் பயனாய் கண் திறக்க முடியாமல், தட்டி தடவி தனது அலைபேசியை எடுத்து
"Hello
யாரு" என்ற தென்றலின் குறல் அவன் காதில் ஒளித்தது.
அந்த கோடையின் காலை குளிரில் வேலன் நடுக்கத்தை உணர்ந்தான்.
முதல் முறை தென்றலிடம் பேச துடித்த பொழுது எந்த நிலையில் இருந்தானோ அதே நிலையை 100 மடங்கு கூட்டிய ஒரு உணர்வை உணர்ந்து, வாயில் வார்த்தைகளை வெளியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு,
கண் இருட்ட தொடங்கி மெல்ல மயக்க நிலையாய் அடைந்தான்.
வேலன் கண் விழித்தானா ? சற்று காத்திருப்போம் !
இடைப்பட்ட காலத்தில் இக்கதையை தொடராமைக்கு மன்னிக்கவும்.
இக்கதையின் தொடர்ச்சி என் வாழ்வியலில் இணைந்திருப்பதால் வந்த தாமதம் !
பல முடிவுகளை
நான் கடந்தமையால், இனி இதுபோன்ற தாமதம் வரப்போவதில்லை என்ற நம்பிக்கையோடு தொடர்வோம் !
காதல் மிக அழகானது, அது யாருக்கு வேண்டுமானாலும் ; யார் மீதேனும் ; எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்.
காதலர்களுக்கு அவர்களின் காதலும் காதலியும் மிதமிஞ்சிய அழகாக தெரிகிறார்கள் !
சாலையில் கடக்கும் காதலர்களை பார்த்து பலரும் விமர்சிப்பது உண்டு. (இது எங்க உருப்புட போகுது, ஆளும் மூஞ்சியும் மண்டையும், எப்படி போகுது பாரு, இதுங்கள சொல்லி தப்பில்ல; இதுங்க வளர்ப்பு அப்படி)
இவ்வாறு காதலிப்பவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் விமர்சித்து தங்களின் செல்வ மகளை யாரென்றே தெரியாத (நன்றாக சம்பாரிக்கும் பொறுப்புள்ளவன் என்ற ஒரே காரணத்தால்) ஒருவனின் கரம் பிடித்து அவனோடு தேன் நிலவுக்கு அனுப்பி வைக்கும் உங்களை விட அவர்கள் பன்மடங்கு சிறந்தவர்கள்.
(மேல் கண்ட வரிகள், திருமணத்தின் முடிவுகளை தனது மகளுடன் கலந்து ஆலோசித்து, அவளது வாழ்வின் முடிவுகளை அவளை சுதந்திரமாக எடுக்க செய்த பெற்றோர்களுக்கானது அல்ல)
அது போன்ற விமர்சனங்கள் அவர்களை எவ்விததிலும் சென்றடைய போவதில்லை. காதலில் லயித்த அவர்கள் உங்களை ஒருபொழுதும் பொருட்படுத்த போவதில்லை.
அவர்கள் உங்களை நோக்கும் தருவாயில், உங்கள் மீதான அவர்களின் விமர்சனம் என்னவாக இருக்கும் என்று மட்டும் சற்று யோசிக்கலாம்.
(தெருவில் தெரியும் நாய்களுக்கு சிலர் பெயர் வைக்க, அந்த நாய்கள் அவர்களுக்குள் என்ன பெயர் வைதிருக்கும் என்று நினைத்து பார்ப்பது போல)
அதை விடுங்கள் .. நாம் வேலனை எழுப்புவோம் !
மயங்கிய அன்றிரவு பால்கனியில் முடிய, சில மணி நேர தூக்கதிற்க்கு பிறகு வேலன் எழுந்தான்.
அவன் அருகில் அவன் அம்மாவும் அப்பாவும் நின்று கொண்டிருந்தார்கள்; என்னடா ஆச்சு உனக்கு, பால்கனில ஏன் போயி படுப்ப ? அதும் ஹெட்போனோட ?
யாரோ தென்றலாம், அந்த புள்ள இதுவரைக்கும் 5 - 6 தடவ போன் பண்ணிட்டு ; நீ எப்படி இருக்க; எழுந்தாச்சான்னு கேட்டுச்சு !
நீ எதுக்குமா
எனக்கு வர்ற போன்லாம் எடுக்குற !
ஆமா அது பாட்டுக்கும் அடிச்சுட்டே கடந்துச்சேன்னு எடுத்தேன் பாரு எனக்கிது தேவதான்டா !
இதை காதில் வாங்கியவாறு, தனது அலைபேசியின் இன்பாக்ஸை நோண்டினான்,
3
messages from தென்றல், என்றிருக்க அதை திறக்கலானான்.
தென்றல் : Sorry vela, I was in a deep sleep
then when you called me. Hope you are fine !
தென்றல் : Extremely sorry, I don't even
remember what we spoke over phone last night. This is may be due to the pills I
consumed. Call me if urgent.
தென்றல் : Forgot to tell, Sorry ! Good morning Da !
Meet you in college 😊
இதை பார்த்து
முடிப்பதற்குள், வேலனின் அம்மா, "நீ இன்னக்கி காலேஜ் போக வேண்டாம்" ஒழுங்கா போன் நோண்டாம படுத்து தூங்கி எழு, நாளக்கி எல்லாம் சரி ஆகிடும் என்றாள்.
அதெல்லாம் இல்லம்மா நான் இன்னக்கி
காலேஜ் போயி ஆகனும், Lab இருக்கு அப்புறம் practicals ல internal marks இல்லாம போயிடும் என்று கூறி எழ முயன்றான்.
எழ முயன்ற அடுத்த நொடி, ஒரு low sugar மயக்கம் வர, மீண்டும்
படுக்கையில் மல்லாந்தான்.
இதை கண்டவுடன், வேலா அம்மா சொன்னா கேளு, உனக்கு ரொம்ப Tired ஆஹ் இருக்கு.
இன்னைக்கு ஒழுங்கா rest எடு அப்போதான் நாளைக்காச்சும் காலேஜ் போக முடியும் என்று சொல்ல, மறுப்பு தெரிவிக்கும் சக்தியை கூட வேலன் இழந்திருந்தான்.
அம்மா போயி வெந்தய கஞ்சி போட்டு எடுத்துட்டு வரேன், அது வரைக்கும் படுத்திரு ; அப்பா இங்க இருப்பாரு.
கஞ்சிலாம் அப்பறம் வைக்கலாம், மொதல்ல அவனுக்கு ஒரு boost போட்டு குடு என்றார் வேலனின் அப்பா.
Boost போட அம்மா நகர, அறையில் ஒரு அமைதி நிலவியது.
இதற்கிடையில், வேலன் அவன் பங்கிற்கு தென்றலுக்கு குறிஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தான்.
வேலன் : Missed this good morning for a while ! I
am still sick. Taking leave today. Will see you soon in college. Take care.
என்று சொடுக்கி
பொன்முறுவல் ஒன்றை அடக்க முயல, அவன் அப்பா அதை கவனிக்காமல் இல்லை.
அவரை திசைதிருப்ப, அப்பா நீங்க office போல ? என்றான் வேலன்.
உனக்கு உடம்பு முடியலனு லீவு போட்டுட்டேன் என்றார் அவர்.
மீண்டும் ஒரு அமைதி நிலவ, அமைதியை கலைக்க,
அப்பா உங்களுக்கும் அம்மாக்கும் Love Marriage தான, எப்போ எப்படி அம்மாவ நீங்க first பாத்தீங்க, யாரு first love சொன்னா, உங்க கதையை கொஞ்சம் சொல்லுங்க அப்பா என்றான்.
ஒரு நொடி பிரகாசத்தோடு, நானும் உன் அம்மாவும் 16 வருஷம் love பண்ணி கல்யாணம் செஞ்சுகிட்டோம். லதாவை கல்யாணம் பண்றதுக்குள்ள நான் பட்டபாடு இருக்கே, அப்பப்பா ; இப்போ நெனச்சாலும் வயித்தை கலக்குது !
லதாவை நான் மொதல்ல அவங்க வீட்ல தான் பார்த்தேன். அப்போலாம் எங்க வீட்ல இருந்து பள்ளிக்கூடம் தூரமா இருந்துச்சு. தினமும் கூட்ட நெரிசல்ல போயிட்டு வரவே நேரம் சரியா இருந்துச்சு.
படிக்க வச்சா என்னையும்
உன் பெரியப்பன்னையும் english mediumல தான் படிக்க வைப்பேன்னு ஒரு வைராக்கியம் உன் தாத்தா பாட்டிக்கு.
அப்போதான் எங்க மாமா பெந்தகத்துக்கு வீடு எடுத்து அவரு பொண்ண படிக்க வைக்க பள்ளிக்கூடம் பக்கமாவே குடி போனாரு.
உடனே என்னய அங்க அனுப்பி அங்கேர்ந்து படிக்க வச்சாங்க. அந்த தெரு முனையில தான் லதா வீடு இருந்துச்சு. அப்போலாம் அடிக்கடி கரண்ட் கட் ஆகும். லதா வீட்டுக்கு பக்கத்து வீட்ல தான் நாங்க டியூசன் படிச்சுட்டு இருந்தோம்.
கரண்ட் கட் ஆனா போதும் எங்களுக்குலாம் ஒரே கொண்டாட்டம் தான். ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கும். நான், அருண், கீர்த்தனா, அபிநயா, லதான்னு ஒக்காந்து பேசிட்டு இருப்போம்.
அப்டி பேசி பேசி தான் எங்க நட்பு பலமாச்சு.
பழக தொடங்கின
நாட்கள்ல
உங்கம்மா
பேரு இஸ்வர்ணலதான்னு எனக்கு தெரியாது. எல்லாரும் லதா லதான்னு கூப்டுறதுனால, நான் அதான் அவா முழு பெயருன்னு நெனச்சுட்டு இருந்தன்.
அவங்க அப்பா ஊருக்கு போனதுனால, அவ ஸ்கூல் டூர் போக அவர்கிட்ட அனுமதி கடித்துல கையெழுத்து வாங்கி வச்சுருந்தா, அதுல இஸ்வர்ணலதான்னு பெயர பாத்துட்டு நான் யாரோடதோ கீழ கெடக்குன்னு எடுத்து கிழிச்சு போட, அவ ஒப்பாரி வைக்க, நான் அவங்க அப்பா கையெழுத்தை போட்டு டூர் அனுப்பி வச்சு மோதல்ல தொடங்குச்சு எங்க நட்பு.
டூர் போயிட்டு வரட்டும் கொஞ்சம் காத்திருங்கள் !
ஒவ்வொருவருக்கும் ஒரு கடினமான நாள் இருக்கும்; அந்த நாள் உங்களை நாம் ஏன் இப்படி இருக்கிறோம், நாம் ஏன் இங்கே இப்படி வாழ்கிறோம், நாம் எப்படியெல்லாம் வாழ வேண்டியவர் என்று பல பிதற்றல் சிந்தனைகளை உங்களுள் விதைத்து, உங்களை அடுத்த அடி எடுக்கவைக்காமல் தேக்கநிலையடைய செய்யலாம்.
அவ்வாறான நாட்களில் நீங்கள் திருமணமானவராக இருக்கும் பட்சத்தில், ஒருவேளை இவனை அல்லது இவனை காட்டாமல் அவளோடு அல்லது அவனோடு வாழ்ந்திருந்தால் நம் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமோ என்று நினைப்பு உங்களை கடந்தாலே; உங்கள் வாழ்க்கையின் பெரும் தோல்வியை நீங்கள் அடைகிறீர்கள் என்று ஊர்ஜிதமாகிறது.
உங்களுக்கு பிடித்த நபர் பிடித்தவராக மட்டுமே இருத்தல் வேண்டும். சின்ன கருத்து வேறுபாடு கூட வர கூடாது என்று நீங்கள் நினைப்பவரானால் அது மூடத்தனம்.
இன்பம் துன்பம் போல, சிறு சண்டைகளும் ஒரு உறவில் தேவைப்படுகிறது. அச்சினைஞ்சிரு சண்டைகள் தான் உங்களின் புரிதலை அதிகப்படுத்தும்.
காதலிக்கும் பொழுது 3-
4 மணி நேரங்களோ கழித்த பொழுது இனித்த காதலி / காதலன், திருமணத்திற்கு பிறகு 24 மணி நேரங்கள் ஒன்றாகவே வாழும் பொழுது திகட்டுவது சகஜம்தான்.
அதை பொருட்படுத்தாமல், உங்களின் இனிய நினைவுகளை அவ்விதமான சண்டை நேரங்களில் பகிர்ந்து பேசி சிறுமை படுத்துங்கள்.
அமைதியே ஒரு உறவின் முதல் எதிரி.
இக்கருத்தில் எதிர்மறை இருந்தால், காதலித்து பாருங்கள் ! காதலித்தவளை(னை) திருமணம் செய்து பாருங்கள் !
The
practicality of post love marriage life !
இது ஒரு பக்கம் இருக்கட்டும், நாம வேலன் அப்பாவ கொஞ்சம் கவனிப்போம் !
தனது காதல் கதையை யாரிடமாவது கூறும் பொழுது, யாருக்கு தான் லயித்து போகும் ?
வேலனின் அப்பா மேலும் தொடர்ந்தார்,
லதா மற்றும் நண்பர்களுடனான நட்பு கரண்ட் கட்டான பொழுதெல்லாம் வளர்ந்தது.
நாட்கள் வேகமாக ஓடியது, எங்ககிட்ட பேசுரத்துக்காகவே லதா எங்க வீடு வரைக்கும் வர ஆரம்பிச்சா !
நாங்க பேசுற பேச்சு தெரு முனை வரைக்கும் கேக்கும், பாட்டு பாடி போற வாரவங்களை சாவடிப்போம், ராஜா ராணி, பாட்டுக்கு பாட்டுன்னு ஒரே கூத்தா இருக்கும்.
சில நாட்களில் நான் பம்பரம் ஆட போனா, அன்னைக்கு லதா மூஞ்சில எள்ளும் கொள்ளும் வெடிக்கும். எல்லாம் எங்க மாமா வீட்டுக்கு வர்ற வரைக்கும் தான். அந்த நாட்களில் அவரோட புல்லட் சத்தம் தனியா எங்களை எச்சரிக்கும், 500 மீட்டர் அந்தாண்டையே வரவை காட்டி குடுத்துடும்.
அடுத்த நொடி எல்லாம் தெரிச்சு ஓடுவோம். அவ்ளோ terror
piece uh.
அப்புறம் மறுநாள் சந்திக்கையில மொதல் நாள் ஓட்டத்தை பத்தி கதை தயாரா இருக்கும். அப்போலாம் லதா இருந்தா அந்த நிமிஷம் அவ்ளோ சந்தோசமா இருக்கும் என்று சொல்லி முடிப்பதற்குள், கையில பூஸ்ட்டோட அறைக்குள் நுழைந்த லதா; இப்போ ராசாக்கு சந்தோசமே இல்லையாக்கும் என்று ஓம்பிழுக்க, நான் அப்படி சொல்லலமா என்று ராமன் சமாளிக்க, அந்த அறை முழுவதும் சந்தோசம் படர்ந்தது.
உங்கப்பா பேச ஆரம்பிச்சா யாரா இருந்தாலும் பாத்த முதல் சந்திப்புலயே நெருக்கம் ஆகிடுவாங்க. அப்டி எவ நெருங்குனாலும் எனக்கு பத்திக்கிட்டு வரும் , அதை தனிச்சு தனிச்சு தான் தண்ணிக்குள்ள விழுந்துட்டேன் என்றாள் லதா.
அப்புறம் இது சரிப்பட்டு வராதுன்னு நானே ஒருநாள் அவரை தனியா புடிச்சு, இந்தாருங்க !
எனக்கு கட்டுனா உங்களைய தான் கட்டனும் மத்தபடி ஏதும் வேணாம், அப்டின்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன்.
அப்டி சொல்லியும் இந்த கல்நெஞ்ச காரரு ஒடனே ஒத்துகிட்டாருன்னு நினைக்கிற ?
இரு இரு அந்த கதைய நான் சொல்றேன் என்று சிரிப்பு போங்க ராமன் வழக்கிழுத்தார்.
அம்முனி கட் அண்ட் ரைட்டா சொன்ன கதைய நீயே கேளு !
அன்னைக்கு ராத்திரி ஒரு எட்டு மணி இருக்கும், அப்போதான் நானும் டியூசன் முடிச்சு வீட்டுக்கு வந்திருந்தேன், எங்க வீட்டுல பூரி போட்டு இருந்தாங்க அத்தை, அதை ஒரு கட்டு கட்டலாம்னு ஆசையா தட்டுல கை வைக்க போனேன்.
வெளிய இருந்து கீர்த்தி, ராமா ஒரு நிமிஷம் இங்க வாயேன்னு கூப்பிட, இருந்த (இரு + ந்த -
ஊரு பக்கம் பொம்பள புள்ளைங்கள, வாந்த போந்த என்று அழைப்பது வழக்கம்) சாப்பிட்டுட்டு வரேன் என்றேன்.
உங்க மாமா வந்துடுவாரு அப்புறம் என்று கூறி அவள் அழைப்பை நியாய படுத்த, நானும் கைல பூரி ஒன்ன தூக்கிக்கிட்டு வாசலுக்கு போனேன்.
நீயே சொல்லுக்கா என்றால் அபிநயா. ரெண்டு பேரும் ஏதோ சதி திட்டம் தீட்டுராளுங்க போலனு நெனச்சு, கொஞ்சம் சுதாரிப்போட சட்டுனு சொல்லுங்களேன் என்றேன்.
கரண்ட் போயிட்டு, அம்மாவாசை இருட்டு, ரெண்டு நொடில இருட்டு பழகிட்டு. அப்போதான் கீர்த்தி சொன்னா, நம்ம லதாக்கு உன் கிட்ட ஒன்னு சொல்லனுமாம், ஆனா பயமா இருக்காம் அப்படின்னா..
அவளுக்கு சொல்லனும்னா அவளே சொல்லலாமே நான் அவளுக்கும் friend
தானே, எங்க அவன்னேன்.
அவ வருவா, அதுக்கு முன்ன நாங்களே சொல்லிடுறோம், அவ உன்னைய காதலிக்கிறாளாம்னா.
அம்புட்டு தான் எனக்கு வயித்துல புளிய கரச்சிடுச்சு, இதுங்க ஏதோ ஓட்டுதுங்கன்னு தோணுச்சு !
சுதாரித்து கொண்டு, என்னையலாம் யாரு love பண்ணுவா, என் மூஞ்சியும், மொகரையும். சும்மா காமெடி பண்ணாத கீர்த்தின்னேன், அபி நீயுமான்னேன் ?
இல்லடா உண்மைய தான் சொல்றோம்னாளுங்க.
அப்டியே இருக்கட்டும், ஒன்ன நல்லா புரிஞ்சுக்கோங்க, நீங்க ரெண்டு பேரும் எனக்கு எப்படி நண்பர்களோ அதே மாரித்தான் லதாவும், அவ இப்படிலாம் நினைப்பான்னு நான் எதிர் பார்க்கல. காதலிக்கிற வயசா இது ? எனக்குன்னு சில லட்சியங்கள் இருக்கு, எனக்குன்னு நிறைய கனவுகள் இருக்கு அதெல்லாம் அடைஞ்சாதான் நான் காதலை பத்திலாம் சிந்திக்க கூட முடியும்.
அவ வரட்டும் நான் பேசுறேன் என்று சொல்லி முடிப்பதற்குள், ஒரு இடி இடிக்க தொடங்கியதற்கும், கரண்ட் வருவதற்கும் சரியாக இருந்தது.
நான் சாஞ்சிருந்த சேவுத்துக்கு அந்த பக்கமிருந்து ஒரு திடீர் விம்மல் சத்தம், யாருன்னு எட்டி பார்த்தா, லதா !
எனக்கு பகீர்னு ஆச்சு ! திக்குமுக்காடி போயிட்டேன் !
ஹிரோஷிமா நாகசாகியின் மீது அமெரிக்கா பயன்படுத்திய குண்டைவிட மோசமானது ஒரு பெண்ணின் கண்ணீர் !
அணுவணுவாய் உங்களை சிந்திக்க செய்து, மண்டியிட செய்யும் வல்லமை வாய்ந்தது !
காத்திருங்கள் ! ராம கிருஷ்ணன் சற்று அந்த நினைவலைகளில் நீந்தட்டும் !
நாம் இதுவரை கடந்த காலம் மிக அழகானது ! நிகழ்கால வாழ்வில் நாம் நம்பிக்கையற்று நிற்கும் பொழுதெல்லாம் அந்நினைவுகள் நம்மை ஆரத்தழுவி அமைதிநிலையில் பரவசிக்க தவறுவதில்லை.
ஒரு இழப்பின் முடிவுரையில் தான் மற்றொரு பிறப்பின் முன்னுரை இருக்கிறது என்று நம்புங்கள்.
நிகழ்காலத்தில் நல்ல நபர்களை நண்பர்களாய் சம்பாதியுங்கள். நீங்கள் கடக்கும் கடுமையான பாதைகளின் மாறுபட்ட பரிமாணங்களை அறிந்தவர்கள் அவர்கள் !
அப்படியொரு நண்பன் அல்லது தோழி தான் என்னை எழுத தூண்டிக்கொண்டிருக்கிறார்.
உங்களை உங்களது வேட்கையோடு சேர்த்து ரசிக்கும் நண்பர்களை எந்தகாலத்திலும் கைவிடாதீர்கள் !
அவர் இந்த பதிவையும் படிக்கும் பச்சத்தில் .. நன்றி !
லதாவின் அழுகையை கண்ட ராமன் செய்வதறியாது நின்றான்.
பள்ளியில், உங்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவன் வரை வீட்டு பாடத்தை சரி பார்த்த ஆசிரியர், உங்களை நோக்கி வரும்பொழுது கடைசி மணி அடிப்பது போல, புல்லட்டின் மணிச்சத்தம் கேட்க, தப்பித்தோம் என்று நினைத்தான் ராம்.
லதாவின் விம்மலும் நின்றது.
அடிடா புடிடா என்று எல்லோரும் ஓடி தலைமறைவு ஆனார்கள்.
இப்படிதான் உங்கம்மா காதலை கட் அண்ட் ரைட்டா சொன்னா; என்று ராமன் சிறு ஓய்வு கொடுத்தார் !
அடேங்கப்பா ! ஒரு வாரணம் ஆயிரம் part
2 வே ஓடிருக்கும் போலயே என்று வேலன் பூரிப்படைய, போதும் போதும் உங்க பூரி கதயெல்லாம்; அதுக்கப்புரம் நான் தைரியமா மூஞ்சிக்கு முன்ன நின்னு, நான் உங்கள காதலகிக்கிறேன்னு காலேஜ் வாசல்ல சொன்னதெல்லாம் உங்கப்பாக்கு நியாபகம் வராது என்றாள் லதா.
அத எப்படி மறப்பேன் !
NDAல அந்த குளிர்காத்துல கதக்வாஸ்லா ஏரி (Khadakwasla
Lake) கரையில, ஏன்டா இங்க வந்தோம்ன்னு, நான் கண்ண கசக்குன ஒவ்வொரு நாளும் ; தோத்துடுவேன்னு துவண்டு போயி நின்னப்போலாம்; என்னய்ய தூக்கி நிப்பாட்டுனதே அந்த நிமிஷங்களோட நினைவலைகள்தாண்டி என்றார் ராமன்.
(உங்களிடம் யாரேனும் "எனக்கு உன்னை பிடித்திருக்கிறது" அல்லது "உன்னுடன் கழித்த நொடிகள் வாழ்வில் மறக்கமுடியாதது" என்றெல்லாம் கூறி இருந்தால் அந்த நிமிடங்களை நினைத்து பாருங்கள் ! அந்த நொடிகள் அதீத அழகானவை ! அது போன்ற நினைவுகள் நம்மை நமது கடினமான நாட்களில் "நம்மையும் சிலருக்கு பிடிக்கும், அவர்கள் அருகாமையில் நமக்கு இந்த வாழ்வை பிடிக்கும் " என்று நினைக்க செய்து தேற்றும். அப்படி ஒருவரை நீங்கள் இதுவரை பார்க்கவில்லை என்றால், காத்திருங்கள் காலம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையோடு)
கல்யாணம் ஆகி இத்தன வருஷத்துல இதெல்லாம் சொல்லவே இல்ல, இப்போ என்ன திடீர்னு மணிரத்தினம் படம் கணக்கா சொல்றீங்க, என்று லதா வம்பிழுக்க.
நீங்க சொல்லுங்கப்பா என்றான் வேலன், பூஸ்ட்ட குடிச்சுக்கிட்டே .
“தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே, தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே” என்பது போல ராமன் இனம்புரியாத இன்பமுடன் அந்த நொடிகளுக்குள் பிரயானமானார்.
லதா காதல சொல்லி 8 மாசத்துல நான் அந்த ஊர விட்டு போயிட்டேன். அப்புறம் 2 வருஷம் விடுதி வாழ்க்கை, படிப்புன்னு ரொம்ப வேகமா ஓடிடுச்சி.
2 வருஷதுக்கு அப்பறம், எங்க டியூஷன் அக்காக்கு கல்யாணம், நான் National Defence
academy க்கு entrance எழுதிட்டு, SSB
Interview க்கு wait பண்ணிட்டு இருந்தேன்.
அப்போ அந்த கல்யாணத்துக்கு போயிட்டு, நைட் ஒரு 7.30 மணிக்கு எங்கவீட்டுக்கு போலாம்னு மாமா வீட்டுல இருந்து கிளம்பினேன்.
ரெண்டு தெரு கடந்தாச்சு, யாரோ பின்னாடியே வர்ற மாதிரி இருந்துச்சு, தெருவோட இரண்டு முனையிலயும் light எரிய தெரு மட்டும் இருட்டா இருந்துச்சி.
அங்கிருந்த கல்லூரியின் வாயிலை கடந்தப்போ திரும்பி பாத்தேன், தூரத்துல யாரோ சைக்கிள்ள வர்ற மாதிரி இருந்துச்சி; சரி கிட்ட வரட்டும் உதவி கேட்டு போயிடலாம்ன்னு நெனச்சுக்கிட்டு, நடந்தேன்.
அடுத்த 20ஆவது நொடி, ராம் நில்லு உன் கிட்ட பேசனும்ன்னு மூச்சி வாங்க ஒரு கீச்சு குரல்;
யாருடான்னு இருட்டுக்கு கண்ண பழக்கி பார்த்தா, லதா !
அந்த 3 வருஷத்துல லதாவ பாக்க கூட இல்ல, அவளோட குரல்ல அப்படி ஒரு மாற்றம், ஆள் பார்க்க அடையாளமே தெரியாம அந்த இருட்டுலயும் அப்படி ஒரு அழகு.
15 நொடி அமைதிக்கு பிறகு, பேச தொடங்கினாள்,
எப்படி இருக்க, சாயுங்காலமை வந்துருப்பேன், அத்தை வீட்ல நேரம் ஆகிட்டு; நீ எப்படியும் பாரதி அக்கா கல்யாணதுக்கு வருவேன்னு மனசுல பட்டுச்சி.
நெனச்ச மாதிரியே நீயும் வந்துட்ட !
நீ இல்லாம இந்த 3 வருஷம் இங்க இருக்கவே புடிக்கல,..
இதுக்கப்புறம் என்ன பண்ண போற ?
இங்க எங்கயாவது காலேஜ்ல படிப்பியா இல்ல, வெளியூர் போக போறியா ?
நீ தான் எல்லாம் முடிவு பண்ணி வச்சருப்பியே, என்று கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினாள்.
நான் NDA Clear பண்ணி Defence போக போறேன், அப்டின்னு சொன்ன உடனே ஒரு அமைதி.
Written Exams நல்லா எழுதிருக்கேன், எப்புடியும் உள்ள போயிடுவேன்.
நீ என்ன பண்ண போற என்றான் ராமன்.
நான் 12th board
exams நல்லா எழுதிருக்கேன், எப்படியாச்சும், Merit ல Medical Seat வாங்கிடுவேன் என்றாள்.
சூப்பர்ப்பா என்றார் ராமன்.
அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு அமைதி நிலவ, அவளே அந்த அமைதியை உடைத்தாள்.
சேரி, நான் சொல்லவந்ததை சொல்லிடறேன், என்று சொன்ன அடுத்த நொடி தூரத்து தெருவிளக்கின் பிரதிபளிப்பு அவளது கண் எடுத்துக் காட்ட, அவள் அவளது வார்த்தைகளை உதிர்க்க தொடங்கினாள்.
ராம், நீ போன அப்புறம் தான் உன்னோட அருமை எனக்கு நல்லா தெரிஞ்சுது, உன்னய எனக்கு எவ்ளோ புடிக்கும்னு தெறிஞ்சுகிட்டேன்.
இந்த 3 வருஷத்துல நீ என்னய்ய நெனச்சியா இல்லையான்னு எனக்கு தெரியாது, ஆனா நான் தினமும் ஏதாச்சும் ஒரு வழில உன்ன நெனச்சுடுவேன்.
இப்பவும் சொல்றேன் ராம், நான் உன்ன காதலிக்கிறேன்.
நீ என்ன காதலிக்க வேண்டாம், கல்யாணம் பன்னிக்கோ போதும் என்று சொல்லி முடிக்க, கண்ணில் தெரிந்த பிரதிபளிப்பு, துளிகளாக பெருகி உதிர தொடங்கியது ! (இதை கேட்டவுடன் வேலனுக்கு தென்றலிடம் தனது காதலை கூறியவுடன், அவளது கண்ணில் வந்த கண்ணீர் துளிகள் நினைவில் வந்தது - மயிர் கூச்சமுர தனது கைகளை தடவிக்கொண்டான்)
அப்பொழுது புல்லட் வரவில்லை, ராம் பதிலலித்தே நகர வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளபட்டான் !
மீண்டும் ஒரு அமைதி நிலவ, இம்முறை ராம் அதை உடைக்க முன்வந்தான்.
ஹே ! கண்ண தொட ! என்ன கொஞ்சம் பாரு..
Board Exam முடிஞ்சா எல்லாம் முடிஞ்சுடுச்சுன்னு நினைக்க கூடாது லதா, வாழ்க்கையே இங்கதான் தொடங்குது.
கனவு கண்டா மட்டும் பத்தாது , அதை சாதிக்க ஒரு வெறி வேணும்.
மீண்டும் கண் கலங்க தொடங்கியது ...
கண்ண தொட மொதல்ல, எனக்கு பொண்ணுங்க அழுதாலே புடிக்காது.
இப்போதைக்கு உன்னோட கணவ நோக்கி ஓடு., அத அடைஞ்ச அப்புறம் திரும்பி பாரு; அப்போயும் நான் மட்டும் தான் நின்னு, நானும் அப்போ ஒரு நல்ல நிலமைல இருந்தா எல்லாம் நடக்கும்.
பொண்ணுங்கள பறக்க சொல்ற உலகத்துல, நீ நடக்க ஆச படுற !
இப்போ கூட, தவழ கஷ்ட படுற பொண்ணுங்க இருக்க தான் செய்யுராங்க.
நீ சொல்லணும்ன்னு நினைச்சத சொல்லிட்ட; இப்போ நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ, எனக்கு உன்ன புடிக்காதுன்னுலாம் பொய் சொல்ல மாட்டேன்.
இப்போ வந்து என்கிட்ட இவ்ளோ தைரியமா பேசுனால இதுவே எனக்கு புடிக்கும், உன்கிட்ட எந்த பையனும் வம்பு வச்சுக்க மாட்டான், நீ அவளோ தைரியமான பொண்ணு. ஆனா இது எல்லாமே லதா என்னோட தோழியா இருக்குறப்போ.
இதயெல்லாம் ஒரு ஓரமா ஒதுக்கி வச்சுட்டு படிச்சு முன்னேறுற வாழிய பாக்கலாம். எல்லாம் அதுக்கு அப்புறம் தானா நடக்கும், என்று ராம் சொல்லி முடிக்க ;
மீண்டும் ஒரு அமைதியை தவிர்த்து, பெண்களுக்கே உரிய தனி சொத்தான - உடமை உரிமம் பெற., இதுவரை கடைபிடித்த தயக்கத்தை உடைத்து, ராம் ஒண்ணு மட்டும் சொல்லு.,
நீ வேற யாரையாச்சும் லவ் பண்றியா !? இல்ல பண்ணுனியா !? என்றாள் லதா.
சாதி .. சாதியியம் ..
தம்பி என்ன ஆளுங்க
?
நீங்க சைவமா ? நீங்க மட்டும் தானா இல்ல குடும்பமே அப்படியா
?
ஐய்யரா இல்ல பிராமினா ?
என்ன ருதிராக்ஷம்லாம் போட்டு இருக்கீங்க ?
உங்க பூர்வீகம் ? உங்க வகையறா என்ன ?
உங்க தாத்தா பேரு ?
சிறிதும் யோசனை இன்றி, அருணாச்சலம்
என்று நீங்கள் கூற, அருணாச்சலம் மட்டும் தானா என்று அவர்கள் கேட்க (உங்க
பாட்டிக்கு எத்தனை புருஷன் என்று கேட்க தூண்டும் அளவுக்கு கோவம் வந்தாலும்)
உடனடியாக அவர்கள் முழு பெயரை சொல்லுங்க தம்பி, என்பார்கள் !
இப்படியெல்லாம் உங்களை நோக்கி பாயும் கேள்விக் கணைகள்
தேடும் ஒரே தகவல்;
உன் ஜாதி என்ன ? என்பது மட்டுமே !
சிறுவயதில் பல முறை நேரடியாகவும் மறைமுகமாகவும் நமது
ஜாதியின் உயர்வால் பல பெரியவர்கள் நமது நட்பு வட்டாரத்தை சல்லடையிட்டுருப்பார்கள்
.
அப்பொழுது புரியவில்லை ஒரு தொடற்சங்கலியின் முதல் இணைப்பு
அங்கே தொடங்குகிறது என்று.
நாம் சிறுவயதில் விளையாடி பழக முற்பட்ட நபர்களிடம் அதற்கு
பின் நேரில் பார்த்து நலம் விசாரிக்க கூட தகுதியற்றவர்கள் என்ற ஏழ்மை நிலைக்கு
தள்ளபட்டோம் என்பதுதான் உண்மை .
அவர்களுக்கான இட ஒதுக்கீடு, அவர்களுக்கான அரசாங்க சலுகைகள்
ஒருவருக்கு கசக்கும் பட்சத்தில், இந்த கசப்பின் விதை உங்களின் விளையாட்டு
பருவத்தில் உங்களின் மீது திணித்து விதைக்கபட்டது என்பதை உணரப்போவதே இல்லை.
இதைப்பற்றி மேலும் பேசி, நீங்கள் உண்ண காத்திருக்கும்
பாதாம் கொட்டைகளுக்கு நடுவில் வேப்பங்கொட்டையாக இருக்க விருப்பமின்றி, உங்களுக்கு
திணிக்க பட்ட விஷ விதைகளை கோயில் கும்பங்களில் விட்டுவிட்டு, அடுத்த தலைமுறைக்கு
அதன் வாசமின்றி வளர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு கதைக்குள் செல்கிறேன்.
இங்க பாரு லதா, நீன்னு இல்ல வேற எந்த பொண்ணு என்னய காதலிக்கிறேன்னு வந்து நின்னு இருந்தாலும், நான் உனக்கு சொன்ன
பதிலை தான் சொல்லி இருப்பேன். எனக்கு ஒரு பொண்ண புடிச்சு இருந்தாலும், என்னோட எதிர் காலத்தை யோசிக்காம இருந்துருக்க மாட்டேன்.
இப்போ கடைக்க போற சுகத்துக்கு ஆசைப்பட்டு, எதிர் காலத்துல கஷ்டபட கூடாதுன்னு ரொம்ப தெளிவா இருக்கேன். அதுனால நீயா ஏதாச்சும் யோசிச்சு உன்ன நீயே குழப்பிக்காத. உனக்கு என்ன வேணும்ன்னு தெளிவா இரு.
சரி இப்போ கிளம்பு, வீட்ல தேடுவாங்க என்று கூறி அங்கிருந்து புறப்பட தயாரானான் ராமன்; லதா என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை, அவளும் ராமனோடு நடக்கலானாள். சிறு தூரம் கடந்த பிறகு, யாராச்சும் பாத்தா என்ன நினைப்பாங்க, நீ கிளம்பு என்றான் ராமன்.
ராமன் சொன்ன அடுத்த நொடி, எதையும் சிந்திக்காமல், நினைச்சா எனக்கென்ன என்றாள் லதா. எதையும் யோசிக்காம நீ ஊருக்கு போ ராம்; உன் வாழ்க்கைல பெரிய ஆளா, நீ நினைச்ச மாதிரி வர்றதுக்கான வழியப்பாரு. என்ன பத்தி யோசிக்காத நானும் எனக்காக இல்லனாலும், உனக்காக முன்னேற பாக்குறேன், என்று சொல்லி முடிப்பதற்குள்; பேருந்து நிலையம் அடைந்திருந்தார்கள்.
அவ்விடம் அடைந்து, மீண்டும் ஒரு முறை இருவரும், ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்து நின்றார்கள். சட்டென்று, லதா ராமை அணைத்து கொண்டு, “உன்ன நான் ரொம்ப இக்கட்டான சூழ்நிலைல நிறுத்திட்டேன், நீ எதையும் யோசிக்காத, உன்ன யாராலையும் தடுக்க முடியாது. நீ உன்னோட கனவ நோக்கி ஓடு, நானும் ஓடுறேன், ஓடி ஓஞ்சி, உனக்கு குடும்பம்ன்னு ஒன்னு வேணும்னு யோசிக்கிறப்போ நான் உனக்காக இருப்பேன்” என்றாள்.
அணைத்த கைகள் அணைத்தவாரே இருந்தது, யாரோ வருவது போல உணர்ந்து இருவரும் சற்று நகர்ந்தார்கள். ராமனின் மனம் படபடத்து கொண்டிருந்தது. அணைத்த நொடிகள் நீட்டிக்க வேண்டும் என்ற ஆசை ஒரு பக்கம் இருந்தது, இதை சொல்லி, அவனது கனவுகளுக்கு அவளும் ; அவளது கனவுகளுக்கு அவனும் தடையாக அமைந்திட கூடாது என்பதை உணர்ந்து நகர்ந்தான்.
ஒரு நொடி அமைதிக்கு பிறகு, ராமன் மனதை உணர்ந்த சீதையாக லதா முகப் பொலிவுடன், ராம் கண்களை பார்க்க முயன்றாள். அவனோ இத்தனை ஆண்டுகளில் இல்லாத விதத்தில் அவள் கண்களை பார்க்க தடுமாறினான்.
பொறுமையாக பேச தொடங்கினாள் லதா ; ராம், ஏதும் நெனச்சு மனச போட்டு குழப்பிக்காத, உனக்கு என்னலாம் யோசனை வரும்னு எனக்கு நல்லா தெரியும், நீ சொல்லாம அமைதியா இருந்தா கூட என்னால உணர முடியும்.
உன் கனவுகளை நோக்கி ஓடு, அப்டி எங்கயாவது உனக்கு சோர்ந்து போயி நிக்கிற மாதிரி இருந்தாலோ, வாழ்க்கைல ஒரு பிடித்தம் இல்லாத மாதிரி தோணுனாலோ, இந்த கடிதாசிய படி, என்று சொல்லி கையில் வைதிருந்த மடித்த காகிதத்தை அவனிடம் கொடுத்தாள். எந்த மறுப்பும் இன்றி ராம் அதை பெற்றுக்கொண்டான்.
மீண்டும் ஒரு அமைதிக்கு பிறகு, CONDUCTOR கூவல் கேட்டது, கும்பகோணம்... ஆனா பாயிண்ட் டூ பாயிண்ட், எடைல ஏதாச்சும் ஊருல எறங்கணும்னா, இங்கயே எறங்கீடுங்க.. பஸ் அங்கலாம் நீக்காது.. இதை கேட்ட ராம் பேருந்து நோக்கி திரும்பினான், பிறகு மீண்டும் திரும்பி லாதாவை பார்த்தான். பிறகு வேகமாக ஓடி பேருந்தில் ஏறி, கடைசீ வருசையின் ஜன்னலை அடைந்து அமர்ந்தான். காலியான பேருந்து பயணத்துக்கு தயாரானது, இவனது கனத்த இதயத்தின் வலுவால் சற்று பொறுமையாக நகர்ந்தது.
அந்த பேருந்து நகராமல் இருந்திருந்தால், இவனது காதல் அந்த கனமே மொழிபெயர்ந்திருக்கும்.
விதி வலியதுதான்..
அடுத்த நொடி லதா நின்ற இடத்தை நோக்கினான், அங்கே அவள் இல்லை, இறங்கி தேடலாம் என்ற எண்ணம் வந்தது, அடுத்த நொடி, லதாவின் குரல் கேட்டது, “ராம்” .. என்று..
மிதிவண்டியில் இவனது ஜன்னல் பக்கம், மெதுவாக நகர்ந்து வந்து கொண்டு இருந்தாள். பேருந்தும் லதாவின் மிதிவண்டியும் ஒத்திசைவில் நகர்ந்து கொண்டிருந்தது. சற்று நொடியில், தொடர்பு விசை அதிகமாகி, ராம் லதாவிடம் இருந்து தூரம் நகர தொடங்கினான்.. பேருந்து வலது புறம் திரும்ப, அவளால் முடிந்த வேகத்தில் லதா இவனை தொடர முயல்வதை ராம் கண்டான்.
அடுத்தடுத்த நொடியில் எல்லாம் மாறியது, காட்சிகள் மாறின, காற்றின் வாசம் மாறியது, கன்னம் வரண்டது, ராம் லதாவின் நினைவுகளுடன் வேகமான பேருந்திலிருந்து, மெதுவியக்கத்தில் காட்சிகளை கண்டுகொண்டே லதாவின் நினைவுகளை ஓட்ட தொடங்கி, ஏக்கம் பொங்க கண்
கலங்க தொடங்கினான். அப்பொழுது... தம்பி டிக்கெட் என்று வந்து நின்றார் CONDUCTOR.
இப்படி கதை சொல்லும் பொழுதே, ராம் லதாவின் கண்களை பார்த்து கொண்டிருந்தார், லதாவின் கண்ணில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தாள். நாம் அந்த CONDUCTOR போல கல்நெஞ்சகாரணாக இருக்க கூடாது என்று எண்ணி வேலன் அமைதி கொண்டான்.
சிறிது நேர அமைதிக்கு பிறகு, வேலன் பெருமகிழ்ச்சியுடன் கேட்டான், சொல்லுங்க அப்பா அந்த லெட்டர் எங்க இருக்கு ? அதுல என்ன எழுதி இருந்துச்சி ? நீங்க எப்போ அத படிச்சிங்க ? என்று கேள்விகளை அடுக்கினான்.
பொறு வரேன் ! என்று எழுந்து நகர்ந்தார் ராமர்.. அடுத்த மூன்றாம் நிமிடம் கையில் ஒரு பையுடன் வந்து சேர்ந்தார், அதில் இருந்த அந்த காலம் கழிந்த மஞ்சளேரிய காகிதத்தை எடுத்தார்.
அதை பொசுக்கென்று
பிடிங்கி, நிமிர்ந்து எழுந்து ஆர்வத்துடன் படிக்க தொடங்கினான் வேலன்;
ராம் ! – இந்த பெயரை எத்தனை இடத்துல எழுதிருப்பேன்னு எனக்கும் இந்த பேனா முனைக்கும் தான் தெரியும். அப்படி எழுதுன எல்லா இடத்துலயும், பக்கத்துல என்னோட பெயரும் இருந்துருக்கும் !
அப்படியே கடைசி வரைக்கும் இருக்கனும்ங்குர ஆச தான் அப்டி எழுத வச்சதோ என்னமோ !
எனக்கு உன்ன புடிக்கும்..
எவ்ளோ புடிக்கும்னா, எங்க போனாலும் யார் கிட்ட பேசுனாலும், இங்க ராம் இருந்தா என்ன பண்ணிருப்பான், என்ன பேசிருப்பான், அப்படினு உன்ன பத்தி யோசிக்காம இருந்துருக்கவே மாட்டேன்; அவ்வளவு புடிக்கும்
.
ஒருவேளை நீ என்னோட வாழ்க்கைல இல்ல, தூரமா போயிட்டா, வேற பொண்ணை காதலிச்சு, உனக்கு
கல்யாணம் ஆகிட்டா, அப்படி இப்படின்னு யோசிச்சு, நானும் வேற ஒருத்தவன் கூட தான்
வாழனும் ; அப்படின்னு ஒரு நிலமை வந்தாலும் – என்னோட தேடல் ; ராம் மாதிரி பேசுற
பையன் வேணும் , ராம் மாதிரி என்னய சிரிக்க வைக்கிற பையன் வேணும் , ராம் மாதிரி
நான் பேசுறதை அவன் கவனிக்கணும், அப்படினு – அங்க கூட உன்னய தான் தேடிகிட்டு
இருப்பேன்.
இவ்ளோ பெரிய உலகத்துல, இப்படி எங்க போனாலும் உன்ன மாதிரி ஒருத்தனை தேடுற நான்,
ஏன் உன்னயே தேட கூடாதுன்னு தோணுது.
நீ எங்க வேணும்னா போ ! உன்னோட கனவ தேடி; உனக்கான வாழ்க்கைய தேடி !
நான் என் கனவ தேடி உன்ன கண்டுபுடிப்பேன்; உன்னதான் கரம்புடிப்பேன் !
எனக்கு உன்ன கல்யாணம் செஞ்சுக்கனும் ! உன்னோட வாழ்ந்தா, வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுது ! உனக்கு இது IMMATURE ஆக தெரியலாம். ஆனா எனக்கு அப்படி
இல்ல ! உன்னோட ஒரு வாழ்க்கையை பல முறை படமா ஓட்டி பாத்துட்டேன் ! அதுல சந்தோஷம்
மட்டும் நெறஞ்சு இல்லனா கூட பறவா இல்லை, எனக்கு சந்தோஷம் தர நீ இருப்ப ; அது
போதும் எனக்கு !
எனக்கு மனசுல தோணுன எல்லாத்தையும் சொல்லிடனும் அவ்வளவு தான். உனக்கு என்ன
புடிக்குமா புடிக்காதா, ஏதும் எனக்கு தெரிய வேணாம்.
புடிச்சாலும் புடிக்கலனாலும், என் மனசுல தோணுனத நான் சொல்லிட்டேன். இதுனால நீ
என்ன வெறுத்து ஒதுக்கி என் மூஞ்சில முழிக்காம போனாலும் பறவா இல்ல. எனக்கு
சொல்லிட்டோம்ன்னு ஒரு முழுமை கிடைச்சிடும் அவ்வளவு தான்.
RAM… WILL YOU MARRY ME ?!!!
உனக்கு நான் முதல் காதலான்னு தெரியல; ஆனா எனக்கு
காதல்ன்னு சொன்னா நியாபகம் வர்றது உன் முகம் தான் ! என்னோட காதலை உன் கிட்ட எப்படி
சொல்லனும்ன்னு யோசிச்சேனோ, அப்டியே எழுதிருக்கேன் !
இப்படிக்கு உன்னை காதலிக்கும்
நான் !
(உன் – இஸ்வர்ணலதா)
இதை படித்து முடித்த உடன் வேலன் நிமிர்ந்து, இத எப்போ படிச்சீங்க அப்பா ? என்று ஆருவத்துடன் கேட்டான் ராமன்.
பஸ் ஏறி, எப்போ லதா கண்ணுக்கெட்டாம காணாத தூரத்துக்கு
நான் போனேனோ அப்போவே படிச்சுட்டேன்.
ஆனா லதாவே என் கனவுக்கு மரியாதை குடுக்குறப்போ நான் எப்படி அத மதிக்காம போக
முடியும் !
என்னோட பயணம் அங்கதான் தொடங்குச்சு, என் கனவை நோக்கிய பயணம். நெனச்ச
மாதிரி NATIONAL DEFENSE
ACADEMY ல SELECT ஆனேன். ACADEMY உள்ள போன அடுத்த நாள், நண்பர்கள் உதவியோட லதா கிட்ட என்
வாழ்க்கை நிகழ்வுகளை சொல்ல தொடங்கினேன்.
அவளும் அவளோட வாழ்க்கை நிகழ்வுகளை சொல்ல விரும்புவான்னு தோணுச்சு.
இரண்டு பேரும் E-MAIL மூலமா பேசிக்குவோம். தினமும் என்ன
நடந்துச்சின்னு DAIRY எழுதுற மாதிரி அவளுக்கு என்னோட
மின்னஞ்சல் போகும்.
அவளோட மின்னஞ்சல் எனக்கு வரும்.
இப்படி கல்யாணம் வரைக்கும், நாங்க ஒன்னா சேர்ந்து வாழ தொடங்கின
நாள் வரைக்கும் எங்களோட E-MAIL காதல் இன்டர்நெட்ல இன்பாக்ஸ்ல
இல்லறம் நடத்துது !
இது நல்லா போன அதே நேரத்துல உங்க தாத்தா மாணிக்கம், லதாவோட கல்யாண பேச்சை தொடங்கினாரு.
அப்போ உங்கம்மா காதல அவங்க வீட்ல போயி தைரியமா சொன்னா !
அப்படியா அம்மா ? தாத்தா கிட்ட நேர்ல சொன்னீங்களா !
இல்ல அங்கேயும் லெட்டர் தானா ? என்றான் வேலன்.
டேய் வேலா, உங்கம்மாவ யாருனு நெனச்ச ? தாத்தா கிட்டலாம் நேர்ல தான் சொன்னேன் என்றாள் லதா.
எப்படிமா சொன்னீங்க !
ஒரு நாள் காலைல தாத்தா நியூஸ் பேப்பர் படிச்சிட்டு இருந்தாரு, அப்போ அவர் கிட்ட நேரா போயி, அப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அப்படின்னு சொன்னேன்,
சொல்லுமான்னாரு, பட படன்னு எல்லாத்தையும்
சொல்லிட்டேன்.
"அப்பா நான் நீங்க ஆசை பட்ட மாதிரி, இஸ்வர்ணலதா B.D.S ; இதுவரைக்கும் நீங்க ஆச பட்ட மாதிரி, நீங்க சொன்ன மாதிரி ஒரு வாழ்கையை 26 வருசமா வாழ்ந்துட்டேன். இதுல
எனக்கு பிடிக்காத பல விஷயத்த உங்களுக்காக நான் செஞ்சுறுக்கேன்.
ஆனாலும் எனக்கு என்ன புடிக்கும், புடிக்காது, என்ன வேணும், வேணாம்னு நீங்க என்ன கேக்காம
செஞ்சது கடையாது !
இப்போ எனக்கு கல்யாணம் பண்ணனும்னு மாப்பிள்ளை தேடுறீங்க; எப்டியும் உங்களுகுன்னு ஒரு சில தராதரம் வச்சுறுப்பீங்க, அது படிதான் தேடுவீங்க.
இருந்தாலும் என்னோட மனசுல என்ன இருக்கோ அதை நான் சொல்லாம இருக்குற அளவுக்கு
நீங்க என்ன அந்நியமா வளர்க்குல. நான் ஒருத்தவரை விரும்புறேன். அவரை உங்க சம்மதத்தோட கல்யாணம்
பண்ணிக்கணும்ன்னு ஆச படுறேன். உங்க சம்மததுக்காக எத்தனை வருஷமானாலும் காத்திருக்க நாங்க தயார்".
அப்டினு சொல்லி முடிக்கிறதுக்குள்ள அழுகை வந்துடுச்சு.
அதுக்கு தாத்தா என்ன சொன்னாரு ? என்றான் வேலன்.
கோபம் - ஒரு நிமிடத்தில் ஒரு உறவை முறிக்கும் வல்லமை பெற்றது .
ஒரு நொடியில் ஒருவர் மீதான மரியாதயை குறைத்து பலவருட நம்பிக்கையை முறித்து - நன்கு தெரிந்த உணர்வாலியை அந்நியனாக்கும் திறம் வாய்ந்தது.
கோபத்தின் வெளிப்பாட்டில் வரவு மன நிம்மதி எனில், இழப்பு ஏராளம்.
ஒரு பொருளை கோவத்தில் உடைத்து, கோபத்தின் தனிவில் அதை நீங்கள் ஒட்டவைக்க எவ்வளவு முயன்றாலும், அதில் உள்ள பள்ளங்கள், வெடிப்புகள் காலமும் சுமக்கும்.
அப்படி ஒரு கோபம் தான் என் மீது எனக்கே ஏற்பட்டு, இப்பெரும் கதையை எழுத என்னை முதொடுத்தி கொள்ளவிடாமல் தடுத்து வைத்திருந்தது.
அம்மனப்பாட்டில் நான் இக்கதையை எழுதி இருந்தால், அது இக்கதைக்கும் இதை முழுமையாக படித்த 10-15 நபர்களின் நம்பிக்கைக்கும் நான் இழைக்கும் துரோகமாக அமைந்திருக்கும்.
இப்பொழுது இதை தொடர வேண்டும் என்று என்னை உத்வேகப் படுத்திய கதைப்பிரியர்களுக்கு நன்றி !
தனது காதலை லதா அவளது தந்தையிடம் சொல்லி அவர் என்ன பதிலளிப்பார் என்று காத்திருந்த தருணம், அடுப்படியில் இருந்து பறந்து வந்தது ஜல்லிக்கரண்டி, இதை எதிர் பாராத லதா, திரும்பி பார்க்க எத்தனிக்கும் நொடியில், JOHN CENA "U CAN'T SEE ME" என்று பறந்து வந்தது பிளாஸ்டிக் குடம். அந்த குடம் அடித்து BOUNCE ஆகிய உடன், TAN TAN TAN என்ற WWE MATCH STARTING BELL அடிக்காத குறையுடன் பாய்ந்து வந்த ரேவதி, 4 BIG SHOW SLAP உடன் ஒரு SUPER MAN PUNCH விட்டாள். இதையெல்லாம் தாங்க முடியாமல் தரையில் துவண்டு விழுந்து அழ தொடங்கினாள் லதா.
மயங்கிய பிளேயரை அடிக்க கூடாதென்ற ஆகம விதியை காக்க நினைக்கும் WWE REFEREEE போல, ரேவதி நிறுத்து என்று ரிங்குக்குள் வந்தார் சிவராமன். (அதாவது லதாவோட அப்பா)
அவ இப்போ என்ன சொல்லிட்டான்னு, நீ தையதக்கானு குதிக்கிற ? 1000 இருந்தாலும் அவ நம்ப பொண்ணு, அவ ஒருத்தர விறும்புறா, அதை நம்ம கிட்ட தைரியமா வந்து சொல்லிருக்கா; இதுல என்ன தப்பிருக்கு ? இதே அவ வெளில சுத்துறத பாத்துட்டு யாரோ ஒருத்தவங்க நம்ம கிட்ட சொல்லி இருந்தா ? அப்படியே கொண்ணு போட்டுருப்பேன் என்றாள் ரேவதி.
உனக்கு புத்தி கெட்டு போச்சு, கோபத்துல என்ன பேசுறோம்னு தெரியாம பேசாத என்றார்.
இத அவ மறைக்கணும், நம்ம விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணனும் அப்டின்னு யோசிச்சு இருந்தா, ஊரு உலகத்துல ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு வீட்டு வாசல்ல மாலையும் கழுத்துமா நிக்கிற அநேக பேர் மாதிரி நின்னு, நம்ம மானத்தை வாங்கி இருப்பா. எதோ நம்ம வளர்த்த விதம் நல்லா இருக்கு அதுனால நம்ம கிட்ட வந்து அவ மனசுல பட்டத்தை சொல்ற அளவுக்கு சுதந்திரம் இருக்குனு நம்பிக்கையோட நம்ம கிட்ட வந்து சொல்லி இருக்கா.
இதுக்கு நம்ம அவளுக்கு சரியான பதில் சொல்லனும், அவ உணர்ச்சிக்கு மரியாத கொடுக்கனும் என்று சொல்லி லதாவையும் ரேவதியையும் பதட்டமற்ற நிலைக்கு கொண்டு சென்று. அடிவாங்கி, அழுது துவண்டு கிடந்த லதாவை எழுப்பி, அவள் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து, சொல்லுமா பையன் என்ன பண்றான், என்ன பேரு, என்ன ஊரு, பூர்விகம்லாம் எப்படி என்று கேட்டார்.
ஒருவரின் சாதியை தெரிந்து கொள்ள இந்த பழந்தலைமுறை என்னென்ன கேள்விகளை உபயோகிக்கிறது !?
நீங்க சைவமா ? நீங்க மட்டும் தானா, இல்ல பரம்பரையே சாப்ட மாட்டீங்களா ? தம்பிக்கு என்ன ஊரு ?
ஊரு பேர கேட்ட அடுத்த நொடி, அங்க இந்த ஆளுங்க அதிகமாச்சே !?
சாமிநாத பிள்ளைய தெரியுமா ? அவரு எங்க வகையறா தான் ;
உங்க குலதெய்வம் ? வீரனா ?! அப்போ மாமிசம் படைப்பாலே !
உங்க தாத்தா பேரு ? பெயரை சொன்னால், அதில் ஜாதி பெயர் வருதான்னு பாத்துட்டு, முழு பெயரை சொல்லுங்க,
முழு பெயரே அருணாச்சலம் தானா ?
அனைத்தையும் மீறி, நீங்களும் அவர்களின் ஜாதியாக இருக்கும் பட்சத்தில், உங்களை பார்த்த உடனே நெனச்சேன், நீங்க நம்ம ஆளுங்க தான்னு !
எதுக்குடா இந்த மானம் கெட்ட பிழைப்பு ?
இப்படியாக பல வழிகளை கையாளும் பெருசுங்க எப்பொதான் திருந்துமோ தெரியல.
ஒருவரை வேற்றுமை படுத்த ஜாதி, குளம், கோத்திரம், மூத்திரம் என அனைத்தையும் பயன் படுத்தி அடுத்த 5 வருஷத்திலோ 10 வருஷத்திலோ இவங்க மண்டைய
போட்டுடுவாங்க ! ஆனா இவங்களோட வேற்றுமையால உருவான தீண்டாமை, நம்மை நமது உயிர் நண்பனிடம் இருந்து பிரிக்கும், பிடித்த பெண்ணுடன் ஒரு வாழ்வை வாழ விடாமல் காலத்துக்கும் ஆராத வடுவை பொறிக்கும்.
இந்த கருத்து ஊசி இப்போ தேவைதானான்னு கேட்காதீங்க, அப்பொப்போ கதைக்கு இடையில் நானும் கொஞ்சம் போலம்பல்களை கக்கிகொள்கிறேன்.
பூர்வீகமாக அப்டின்னா என்றாள் லதா !
அதான்மா பையனோட அப்பா அம்மா என்ன பண்றாங்க ? என்ன ஊரு அதெல்லாம் என்றார் சிவராமர்.
லதா உடனே அடுக்க தொடங்கினாள் ; பையன் பேரு ராம கிருஷ்ணன், அப்பா பேரு செல்வராஜ் அம்மா பேரு சித்ரா. அவங்களுக்கு இவன் ஒரே பையன்.
உங்களுக்கு அவன நல்லா தெரியும் இங்கதான் அவன் அவனோட மாமா வீட்ல தங்கி படிச்சான் ஒரு 7-8 வருஷம் முன்னாடி என்றாள் லதா.
ராம கிருஷ்ணனா ? அந்த லொட லொடன்னு பேசிட்டே இருப்பானே அவனா ? என்றாள் ரேவதி.
அஞ்சாங்கிலாஸ் குழந்தை ஐஸ்கிரீமை பார்ப்பது போல கண்ணுல பல்ப்பெரிய தன் தாய் பக்கம் திரும்பி, கங்கா சந்திரமுகியா மாறினாள்.
அவங்க அம்மா முகத்தை பார்த்வுடன் வாங்கிய அடி நினைவுக்கு வந்ததோ என்னமோ, மீண்டும் இருண்டது.
பிறகு மீண்டும் தொடங்கினாள் லதா, ராம் இப்போ INDIAN ARMY ல OFFICER'S CATEGORY ல LIEUTENANT அஹ் இருக்கான். இப்போதைக்கு சென்னை OTA ல இருக்கான், POSTING எங்கே வரும்னு தெரியலனு சொன்னான்.
அவனுக்கு POSTING வந்தா எங்க இருப்பான்னு தெரியாது, நீங்க வேற தீவிரமா மாப்பிள்ளை தெடுறீங்கங்குறதுனால, எனக்கு வேற வழி தெரியல என்றாள் லதா.
அதெல்லாம் இருக்கட்டும் அவங்க வீட்டுக்கு இதெல்லாம் தெரியுமா, இதெல்லாம் ஒத்துப்பாங்களா என்றார் சிவராமர்.
அவனும் இன்னைக்கு வீட்ல சொல்ல போறதா சொன்னான். என்ன ஆச்சுன்னு சாயுங்காலம் சொல்றதா சொன்னான் என்றாள் லதா.
ஒரு அமைதி நிலவியது. அதை உடைக்கும் விதத்தில், எனக்கு ராம் கூட வாழ்ந்தா வாழ்கை நல்லா இருக்கும்னு தோணுது. 10 வருஷமா அவனுக்காக காத்திருக்கேன். எனக்கோ அவனுக்கோ பெத்தவங்கள எதிர்த்து ஒரு கல்யாணம் பண்ணிகிறதுல விருப்பம் இல்ல என்று கூறி குடு குடுவன எழுந்து தன் அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டாள்.
லதா தனது வாழ்வில் இப்படி ஒரு தைரியத்தை எப்பொழுதும் பெற்றதில்லை. அம்மா அப்பா என்ன சொல்லுவார்கள் என்ற ஆவளை தாண்டி, வாங்கிய அடியும், ராம் வீட்டில் என்ன ஆனது என்ற பயமும், கண்ணில் காய்ந்து படர்ந்த உப்பு படலமும் அவளை நித்திரைக்கு தள்ளியது.
மாலை நேரம் எப்போது வரும் என்ற ஏக்கம் அவளை தொந்தரவு செய்து கொண்டிருந்த நேரம், லதாவின் தோழி கயல் வந்திருப்பதாக ரேவதி சத்தம் போட்டு கதவை தட்ட லதா அலறி அடித்து கதவை திறந்தாள்.
ஒரு நிமிஷம் கயல், நான் மூஞ்சி கழுவிட்டு வந்துடறேன் என்று கூறி, பின் லதா கயலுடன் வந்து சோபாவில் அமர்ந்தாள்.
என்ன லதா செம தூக்கம் போல என்று கிண்டலாக கேட்டு, லதாவின் பெற்றோர் எங்கே என்பதை நோட்டம் விட்டு, மொட்ட மாடிக்கு போவோமா என்றாள் கயல்.
அதற்குள் கிட்சனில் இருந்து வெளியே வந்த ரேவதி, இரும்மா காபி போட்டிருக்கேன், வெயில் வேற உண்ணம் தனியல கொஞ்சம் நேரம் கழிச்சு போங்க என்று கூறி கிட்சனுக்குள் நுழைந்தாள்.
இந்த வாசகத்தின் நோக்கத்தை உண்மையாக புறிந்தவளாக லதா. உஷ் ! என்று கூறி சற்று அமைதியாக சொல் என்று செய்கை காட்டினாள். பிறகு சத்தமாக ஆமாம் எனக்கும் சற்று சோம்பலாக இருக்கு இங்கேயே பேசலாம் என்றாள் லதா.
கயல் வந்த வேலையை தொடங்கினாள், கிசு கிசு வென ராம் போன் பண்ணினான், அவன் வீட்ல சொல்லிட்டானம், எதும் பிரட்சனை இல்லையாம். உனக்கு என்னாச்சுன்னு பாத்துட்டு வர சொன்னான் என்றாள்.
இதற்கிடையில், ரேவதி சுட சுட காப்பியுடன் வந்து இருவருக்கும் எதிரில் அமர்ந்து கொண்டாள்.
ரேவதி என்ன பேசிட்டு இருந்தீங்க என்று இயல்பாய் கேட்க, படபடத்து, வியர்வை குளியலுக்கு உள்ளானாள் கயல்.
அது அவ காலேஜ் கதைம்மா என்றாள் லதா.
என்னமா அப்பா அம்மா லாம் எப்டி இருக்காங்க?
வேலை எல்லாம் எப்டி போகுது ? எங்களுக்கு கல்யாண சாப்பாடு போட போற என்று பல கேள்விகளை அடுக்கினாள்.
அப்பா அம்மா FINE AUNTY. நான் வேலைக்கு போகல, அப்பாக்கு கடைல உதவி பண்ணிகிட்டும், அம்மா க்கு சமயகட்டுல உதவி பண்ணிட்டும் இருக்கேன். கல்யாண சோறு தானே போட்டுட்டா போச்சு.வீட்ல மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காங்க AUNTY என்றாள் கயல்.
நல்லா இருந்தா சந்தோஷம்மா, முன்னலாம் அடிக்கடி வருவ, இப்பொலாம் ஆளே பாக்க முடியல. நாங்களும் லதாக்கு வரன் பாத்துட்டு தான்மா இருக்கோம். ஆனா எந்த மாப்பிள்ளையை பாத்தாலும், இது சரி இல்லை, அது சரியில்லங்குறா என்றாள் ரேவதி.
அப்புறம் ? என் FRIEND என்ன சாதாரண ஆளா ? அவளுக்கு என்ன வேணும்னு அதெல்லாம் CORRECT ah CHOOSE பண்ணுவா AUNTY என்றாள் கயல்.
அடுத்த நொடி ரேவதியின் முகம் மாறியது.
(Naanga na na na ! Pappa pan ! என்று THUG LIFE MUSIC போட்டு கண்ணுல கண்ணாடி, வாயில சுருட்டு, கழுத்துல செயின் என்று CG EFFECTS ஓடு கயலை சித்திகரித்து பார்த்தாள் லதா)
இதற்குள் ஆரி குடிக்கும் பதத்தை அடைந்த காப்பியை கல்ப் என்று குடித்து முடித்தாள் கயல்.
ரேவதிக்கு இது புரியாமல் இல்லை, உடனடியாக எந்த விட தாமதமும் இன்றி, கயலுக்கு பதிலடி தர தயாரானாள். இப்போ உள்ள பசங்க எல்லாம் எங்க CORRECT AH CHOOSE பண்ணுது ? கல்யாணம் பண்ணி மூணாவது நாளே அது சரி இல்ல இது சரி இல்லனு கண்ண கசக்கிட்டு வந்து நிக்கிதுங்க. இதுங்க ஆசைக்காக எல்லாத்தையும் ஒத்துகிட்ட பெத்தவங்க, சந்தி சிரிச்சு நிக்கிறாங்க என்றாள் ரேவதி.
மீண்டும் ஒரு THUG LIFE REPLY தர தயாரானாள் கயல்.
தன்னொட மகளோட, மகனோட சந்தோஷத்துக்காகன்னு யோசிச்சு இப்போ உள்ள பெத்தவங்க எதையும் செய்யுறதில்லையே AUNTY ?! அந்த சொந்தக்காரன் என்ன நினைப்பான், இந்த சாதிக்காரன் என்ன நினைப்பான், அப்டி இப்டினு யோசிச்சு, பெத்த புள்ளைங்க ஆச பட்ட வாழ்கையை அவங்களுக்கு கடைக்க விடாம பண்ணி. அவங்க அத்தனை வருஷம் யோசிச்சு முதல் முதல்ல தனக்கு இது வேணும் அப்டின்னு நிலையா நின்ன ஒரே முடிவும் தப்புனு அவங்களுக்கு காட்டிட்டு, அடுத்த 10 வருஷமோ 20 வருஷமோ; என் புள்ள நான் எடுத்த முடிவால தான் இப்படி இருக்கான்னு நெனச்சு மோட்சம் அடையிற பெத்தவங்களுக்கு இடையில, நம்ம ஏன் இந்த முடிவ எடுத்தோம், வேற பையன் பாத்துருக்ககணுமோ, அவள் ஆசைக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கணுமோன்னு வருத்த படுற பெத்தவங்களும் இருக்காங்க AUNTY. அதெல்லாம் உடுங்க, காலத்துக்கும் மனசுல ஒருத்தனை நெனச்சுட்டு, ஒருத்தனோட வாழுற பொண்ணுங்க நிலமைய யோசிச்சு பாக்குறது இல்லையே சில பெத்தவங்க என்று பட படவென பட்டாசாய் வெடித்தாள் கயல்.
ரேவதி திக்கு முக்காடி போனாள். இந்த நிலையில் கயலை அள்ளி அணைத்து உச்சி முகர்ந்து, யாருடி நீ ? எங்க இருந்த இத்தனை வருஷமா என்று கேட்கும் அளவுக்கு ஆச்சரியப்பட்டு உறைந்திருந்தாள் லதா.
சரி வா நம்ம மாடிக்கு போவோம் என்று ரேவதியை காப்பாத்தி, அவளை இழுத்து கொண்டு மாடிக்கு சென்றாள் லதா.
ஏதோ ஒரு நிலையில் நாம் எல்லோரும் யாரோ ஒருவரை காதலிக்கிறோம். அக்காதல் மதம் இனம் மொழி நிறம் என அத்தனை பாகுபாடுகளை கடந்து நிறைவேறுகிறது.
அதை வெற்றி என நினைத்து கொண்டாட தொடங்குகிறோம். காலச்சக்கரமும் அதன் சுழற்சியை தொடங்குகிறது. நாம் காதலிக்கும் நபரோடு நாம் காதல் கொள்ளும் முன் அவர் நம் எதிரியாக இருந்திருக்கலாம்.
அந்த எதிர்ப்பு காதலாக மாறி இருக்கலாம் இல்லை எதிற்பாகவே முடிந்திருக்கலாம்.
ஆனால் நாம் அவரை அல்லது அவளை காதலிக்க தொடரும் பொழுதில் நம் எதிரியாக இருந்த அதே நபரை எதிர்பார்ப்பது எதைகைய முட்டாள் தனம்.
இதற்கு முன் இருந்த தலைமுறையில் காதலர்கள் எப்போதும் ஒரு உரிமைப்போரில் இருந்தார்கள். அவ ஏன் உன் கிட்ட பேசுறா இவன் ஏன் உன் கிட்ட பேசுறான் என்பது போன்ற சீண்டல்கள் அவர்களை இணைத்து வைத்திருந்தது, பிரிவின் காரணக்கோடுகளை அவர்கள் பக்கம் கீராமல் பார்த்து கொண்டது.
ஆனால் இவ்வகையான உரிமைப்போர் இல்லாமல் இக்கால காதலர்கள் அதை அனுபவ மூப்பு (MATURITY) என பிதற்றி கொண்டு காதலுக்காக போராட்டத்தை தொடரும் முன் காதலுக்குள் போராடி பிரிக்க நினைக்கும் பெற்றோர்களுக்கு வழிவகை செய்கிறார்கள்.
நல்ல வேளையாக லதாவும் ராமும் அக்கால காதலர்களாக இருந்தது கதைக்கும் கதைப்பானுக்கும் நல்லதாய் போயிற்று !
கதையை தொடர்வோம் :
நீயாடி இப்படி தைரியமா பேசுற ?
என்னா ஒரு தெளிவு, இத மட்டும் நம்ம ஸ்கூல்ல படிச்ச சுதாலாம் கேட்டு இருந்தான்னு வையு, உன்னைய ஸ்கூல் படிக்கிறப்போ கிண்டல் பண்ணினதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு மன்னிப்பு கேட்டு, உன் கால்ல விழுந்துருப்பா.
சரி, ராம் வீட்ல என்னாச்சு அதை சொல்லு என்று காரியத்தில் கண்ணாக இருந்தாள் லதா.
அதை ஏன் கேக்குற, அது ஒரு சரியான காமெடி என்று சொல்லி சிரிக்க தொடங்கினாள் கயல்.
சிரிக்க சிரிக்க இவளுக்கு என்ன ஆகியிருக்கும் என்று ஆர்வமாக இருந்தது.
சிரிக்கிறதை நிப்பாட்டிட்டு சொல்லுடி கதைய என்றாள் லதா.
அதுவா, தலைவரு அவங்க அப்பா அம்மா கிட்ட சேர்த்து வச்சு சொன்னா சரி வராதுனு; தனி தனியா attack பண்ணிருக்காப்புடி.
ஆனா Attack பாண்டியோட attack ரெண்டுமே புஸ் ஆகிருச்சாம், நல்ல வேலைக்கு அவங்க அண்ணனை பிரமாஸ்தரமா பயன் படுத்தி சரியான இடம் பாத்து அடிச்சு ok வாங்குற level க்கு எடுத்துட்டு போயிருக்காரு.
தெளிவா சொல்லுடி என்று கடுகடுத்தாள் லதா.
சொல்றேன் இரு என்று சொல்லி தண்ணீர் தொட்டியின் சில்லென்ற சுவற்றில் சாய்ந்து ; ஹே நிலாவ பாறேன் செமயா இருக்குல்ல என்று லதாவை சூரியனாக்கி சுரண்டி பார்த்தாள் கயல்.
கயல் உன்னைய கொல்ல போறேன் பாரு இப்போ என்றாள் லதா.
கயல் தன் கதையை தொடர்ந்தாள், ராம் காலைல எழுந்தானாம், அவங்க அப்பா வீட்ல இல்லையாம், சரி இதான் சரியான நேரம் அப்டின்னு முடிவு பண்ணி, அவங்க அம்மா கிட்ட நேர்ல போயி, அம்மா எனக்கு எப்போமா கல்யாணம் பண்ணி வைபீங்க அப்டின்னு கேட்டானாம்.
உனக்கு இன்னிக்கி சந்திராஷ்டமம் ஒழுங்கா ஓடிடு அப்டின்னு சொன்னாங்களாம் அம்மா.
சந்திராஷ்டமமா அப்டின்னா என்றாள் லதா.
இந்த அறியாமையை பயன் படுத்தி கொள்ள சற்றும் தயங்கவில்லை கயல்.
அதுவா சந்திராஷ்டமம்னா, சின்ன வயசுலே எதாச்சும் பொண்ணுக்கு கட்டி வைக்கிறேன் அப்டின்னு சத்தியம் பண்ணி குடுத்துடுவாங்க, அந்த நாள் மாசத்துல என்னைக்கி வந்தாலும் அன்னக்கி சத்தியத்தை மீறி பேச கூடாதுன்னு; கல்யாணத்தை பத்தி பேச மாட்டாங்க என்று சிரிப்பை அடக்கி கயல் சொல்லி முடிப்பதற்குள்; லதா தனது யோசிக்கும் திறனால் நிலாவை தொட்டு இருந்தாள்.
இதெல்லாம் ராம் எனக்கு சொல்லவே இல்லையே, அவனுக்கு வேற 2 மாமா பொண்ணுங்க, 3 அத்தை பொண்ணுங்க. எல்லாமே 7 1/2 சனி. எனக்கும் அதுங்களுக்கும் ஒத்து கூட வராது. இவன யாருக்குனு சத்தியம் பண்ணி வச்சாங்களோ தெரியலயே என்று பொலம்பத்தொடங்க.
அய்யய, யார்ரா இவ என்று நினைத்த கயல். நீ ஒரு வெலக்கெண்ணை, என்ன சொன்னாலும் நம்புற போ என்று சொல்லி சிரிக்க தொடங்கினாள் கயல்.
கடுப்பில் கயல் கழுத்தை பிடித்து, ஒழுங்கு மரியாதையா நடந்ததை மட்டும் சொல்லு இல்லைனா, உன்ன கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போக கூட தயங்க மாட்டேன்டி என்று களத்தை SERIOUS MODE க்கு மாத்தினாள் லதா.
இதற்கிடையில், மகன் அல்லது மகள் எதையேனும் SERIOUS MODE ல் பேச வரும் பொழுது உங்க அப்பா இங்க இல்லை, அவர் வந்ததும் பேசிக்கலாம் அல்லது இதை பற்றி பேச இது சரியான நேரம் இல்லை அல்லது நான் கேட்க தயாராக இல்லை என்ற அத்தனை பதிலையும் ஒன்று சேர சொல்ல பாட்டிகளால் பயிற்சி அளிக்க பட்ட தாய்மார்கள் பயன் படுத்தும் தாரக மந்திரம் "உனக்கு இன்னிக்கி சந்திராஷ்டமம், அமைதியா இரு" என்பதாகும். நீங்கள் எதையோ SERIOUS ஆக சொல்ல வருகிறீர்கள் என்றால் அதை ஒரு மாதத்திற்கு முன்பாகவே கணிக்கும் வல்லமை வாய்ந்த பெற்றோர்களும் இவ்விந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வறிவை திறம்பட பயன்படுத்தி இருந்தால், பல IT நிறுவனங்களின் CEO, CFO வாக நமது அம்மாக்கள் இருந்திருந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.
பிறகு ராம் சொன்ன நிலவரத்தை லதாவிடம் தொடர்ந்தாள் கயல்.
கல்யாணமா அதுகென்ன அவசரம் என்றாள் உமா.
மா, சும்மா காமெடி பண்ணாதீங்க.
இத்தனை வருஷம் எவ்ளோ கஷ்ட பட்டு இந்த வேலைய வாங்கிருக்கேன்னு உங்களுக்கு தெரியும்.
சரி விடு மாமா கிட்ட சொல்லி பொண்ணு பாக்க START பண்ண சொல்றேன் என்றாள் உமா.
"SUBSCRIPTION இல்லாத அக்கால TAMIL MATRIMONY தாய் மாமன்கள்"
உடனே உங்க அண்ணன் கிட்ட போயி நின்னுடுனும்.
எனக்கு என்ன புடிக்கும் என்ன புடிக்காது, என்ன வேணும் வேணாம் எதுவும் அவருக்கு தெரியாது.
நம்ம சாதிக்காரன் பொண்ணு, நம்ம தூரத்து சொந்தம் அப்டின்னு எதயாச்சும் அவரு ALREADY லிஸ்ட் போட்டு வச்சிருப்பாரு. அவரோட INKI PINKI PONKI ல எதாச்சும் ஒரு பொண்ண எதுவுமே தெரியாம நான் OKEY சொல்லனுமா என்று வெடித்தான்.
எனக்கு ஒரு பொண்ண புடிச்சு இருக்கு, 10 வருஷமா தெரியும்.
BDS பண்ணிட்டு பல் டாக்டரா இருக்கா என்று ராம் சொல்லி முடிப்பதற்குள். உன்னையும் ஒரு பொண்ணு லவ் பண்ணுதாடா என்று கடுப்பேத்தும் விதத்தில் சிரிப்புடன் உமா கேட்க.
என்ன JOKE பன்றியா என்று சொல்லி உள்ளே நுழைந்தார் செல்வம்.
இவரு எங்கேர்ந்து வந்தாரு என்று எண்ணி சுதாரித்த ராம்.
எந்த விதமான பதிலுமின்றி தன் அறைக்கு சென்று கதவை மடார் என்று அடித்து தாழிட்டான்.
நமக்காக யாரும் வந்து பேச மாட்டார்கள் நாம் தான் நமக்காக பேச வேண்டும் என்பதை உணர்ந்தவளாய் அடுத்த 5 நிமிடத்தில் தன் அறையை விட்டு வெளியே வந்தான்.
இங்க பாருங்க, நான் என் வாழ்க்கைல இது வரைக்கும் எவ்வளவோ கஷ்ட பட்டுட்டேன். இது வரைக்கும் எனக்கு அமைஞ்ச எல்லாத்துக்கு பின்னாடியும் என்னோட உழைப்பும் உங்களோட தியாகமும் இருக்கு.
நானோ ராஜேஷோ எந்த பொருளையும் கேட்டு உங்க கிட்ட அடம் புடிச்சதே இல்ல, ஏன்னா உங்க கஷ்டம் எங்களுக்கு தெரியும் எங்கள எப்படியாச்சும் படிக்க வச்சுடனும்னு மட்டும் தான் நீங்க நினைச்சீங்க, அத செய்ய எல்லா வழிலையும் போராடவும் செஞ்சீங்க.
உங்களை பாத்து இவங்க எங்க நல்லா வாழ்ந்துட போறாங்க நம்ம கால்ல தான் வந்து விழனும்ன்னு நெனச்ச சொந்த காரங்க முன்னாடி, ஊரு காரங்க முன்னாடி வாழ்ந்து காட்டுனீங்க.
ராஜேஷ் படிச்சான் வேலை தேடினான், கஷ்ட பட்டான், இந்த வீட்டை கட்டினான், நீங்க பாத்து வச்ச பொண்ண கல்யாணம் பண்ணினான்; அவன் தன்னோட வாழ்கையை சென்னைல வாழுறான்.
அவனுக்கு அவன் குடும்பத்துல என்ன பிரெட்சன, அவங்க சந்தோசமா இருக்காங்களா, அவன் பிள்ளைய அவன் எப்டி வளக்குறான் அப்டின்னு எதையும் நீங்க அவன் கூட இருந்து பாக்கல.
அவன் தான் அவன் வாழ்கையை வாழுறான். அவன் அந்த வாழ்கையை புடிச்சு வாழுறானோ இல்லையோ அது அவனுக்கு மட்டும் தான் வெளிச்சம்.
நான் என்ன சம்பாரிச்சாலும், மாட மாளிகைல வாழ்ந்தாலும், கூரை வீட்டுல வாழ்ந்தாலும், எப்போ இந்த பொண்ணோட வாழ்ந்தா என் வாழ்க்கை இப்படி இருந்துருக்காதோ அப்டின்னு நினைக்கிறேனோ அப்போவே இத்தனை வருஷமா நான் போராடி ஜெயிச்ச அத்தனையும் தோல்வியா மாறிடும்.
இப்போ வரைக்கும் என் வெற்றிக்கு காரணமா தெரியிற நீங்க என் தோல்விக்கு வித்திட்டவங்கனு நினைக்க தோணும்.
அப்படி ஒரு வாழ்க்கைய தான் நான் வாழ்னும்ன்னா சொல்லுங்க, நாம் எந்த வேலைக்கும் போகல, கல்யாணம் பண்ணிக்கல உங்க விருப்பப்படி உங்க கைய எதிர்ப்பார்த்தே வாழ்ந்துட்டு போயிடுறேன்.
ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோங்க, எந்த சொந்தக்காரங்களுக்காக, எனக்கு புடிச்ச வாழ்க்கைய அமைக்க கூடாதுனு நினைக்கிறீங்களோ அவங்க நினைக்கிறது செல்வம் குடும்பம் நல்லா இருக்கணும் ஆனா என் குடும்பத்த விட நல்லா இருந்திட கூடாது அப்டிங்குறது தான் என்று ஆஸ்கார் பேச்சை பேசி சடசட வென வீட்டை விட்டு வெளியேறினான்.
#வினித் மணிமாறன்