வெள்ளி, 30 ஏப்ரல், 2021

தென்றல் வேலன் - பகுதி 4




சாதி.. மதம்.. இனம்.. பாகுபாடு..

நீங்கள் படித்தவர்கள், சாதியியத்திற்கு அடிபணிய விருப்பமற்றவராக இருக்கும் பட்சத்தில்..

நீங்கள் ஒருவனின் /ஒருத்தியின் காதலை, எங்க அப்பா அம்மா ஏத்துக்க மாட்டாங்க என்று காரணம் சொல்லி உடைத்தெறிய முன்வரும் பட்சத்தில்.

சற்று யோசியுங்கள்......

உங்கள் பெற்றோர் ஏற்று கொள்ளாமைக்கு காரணம் என்ன ?

அந்த பெண் அல்லது ஆண், வேற்று சாதி, மதம், கோத்திரம் என்று பல காரணம் இருக்கலாம்.

அவ்வாறு அந்த வேற்றானை தங்களது பிள்ளை திருமணம் செய்யும் பட்சத்தில், சுற்றம் என்ன பேசும் ? சொந்த பந்தம் என்ன பேசும் என்ற எண்ணம் தானெனில்.

மறைமுகமாக நீங்களும் சாதியியத்திற்கு கட்டுப்பட்டு போகிறீர்கள் என்பது தான் உண்மை.

இந்த சங்கிலி, உங்கள் பெற்றோருக்காக நீங்கள்; உங்களுக்காக உங்கள் பிள்ளைகள் என்று தொடரும்.

எனவே இதை படிக்கும் பெற்றோரோ, பிள்ளைகளோ, சற்று யோசியுங்கள்...

சாதி ஒழிப்பு என்பது பரியேறும் பெருமாள் நல்ல படம், அசுரன் அருமையான படம், கர்ணன் வெறித்தனம் என்று சொல்வதில் இல்லை.

அங்கு உங்களின் எண்ண ஓட்டங்கள் விலைபோகின்றது.

மத்த சிந்தனைகளை உங்கள் கையில்விட்டு, 

மேல் சொன்னவாறு பல இடங்களில் என் பெற்றோரை காரணமாக காட்டி சாதியியம் பார்த்த நான் என் கதைக்குள் போகிறேன்.

தொடர்ச்சி : 

சொடுக்கிய குறுந்தகவல் அவளிடம் சேர எப்படியும் அந்த பேருந்து ஒரு நான்கைந்து திருப்பங்கள் தான் எடுத்திருக்கும்.

வழக்கமாக அந்த கல்லூரி பேருந்துகள், வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக புறப்படும்.

அதனால் பின்னால் வரும் பேருந்தின் ஒளி எப்பொழுதும் முன்னாள் செல்லும் பேருந்தினை ஒளியேற்றம் செய்து கொண்டிருந்தது.

திருப்பங்களில் சற்று ஒளி மங்கி மீண்டும் நேர்கோட்டில் ஒளியேற்றி, 

கண் மூடி திறந்தால், கலங்கரை விளக்க ஒளியை ஒத்திருந்தது.

அவ்வாறு ஒரு திருப்பத்தில் மங்கி, அடுத்த நேர் கோட்டில் ஒளியேற்ற அவள் திரும்பி அவனை ஒரு நொடி பார்த்தாள்.

கண்ணில் காதல் வழிந்தோடும் என்ற எதிர்பார்ப்பு, இமைப்பதற்குள் பதற்றமேற்றியது.

பின்னால் வந்த பேருந்தின் வெளிச்சம் அவள் கண்ணீரில் பிரதிபலித்து, மறுநொடியில் அவன் இதயத்தில் எரியூட்டம் செய்தது.

80 கி.மீ. வேகத்தில் செல்லும் பேருந்தின் திறந்த சன்னல் காற்றிலும் அவனுக்கு வியர்த்தது.

அடுத்த நொடி, மணிமேகலை தென்றலின் கன்னத்தை தொட்டு என்னாச்சுடீ என்ற பெண் டோலிகளுக்கே (தோழிகளுக்கே) உரிதான டோனில் (தோணியில்) அவளை அணைத்து தேத்த முயன்றாள்.

அவனுக்கு அப்பொழுதுதான் தோன்றியது, முதலில் மணிமேகலையை தூண்டிலிட்டுருக்க வேண்டும் என்று.

அப்படி ஒரு வேகமான ஒரு பயணத்தை அந்த நான்காண்டுகளில் அவன் அனுபவித்ததே இல்லை.

அன்றிரவு சற்று அவசர பட்டுவிட்டோமோ, அவள் அந்த நோக்கத்தில் பழகவில்லையோ என்றெல்லாம் எண்ண ஓட்டங்கள் அவன் மண்டைக்குள் மீண்டும் மீண்டும் ஓடி, விடியலே வந்துவிட்டது.

இரண்டாண்டுகளாக அவளது Good morning இல்லாமல் இவன் வானம் விடிந்ததே இல்லை.

அவளுக்கு good morning அனுப்பி கூல் செய்யலாம் என்று அலைபேசியை எடுத்தான், சார்ஜ் இல்லை.

சற்று சார்ஜ் போட்டுவிட்டு, பல் துலக்கி குளித்து இளைப்பாறி, அலைபேசிக்கு உயிர் கொடுத்தான்.

பதட்டத்துடன் பகிரியில் நுழைந்தான், அவளது DP நீக்கம் பெற்றிருந்தது, last seen மறைக்க பட்டிருந்தது.

தான் Block செய்யப்பட்டதாக எண்ணிக்கொண்டு, சோக கீதம் பாடாத குறையாக சனி ஞாயிறு என்று இரண்டு விடுப்பு நாட்களை ஓட்டினான். (Caller tune : கனவே கனவே என்று மாற்றம் பெற்றது, கூடுதல் சிறப்பு)

நாட்கள் யுகங்களாக காட்சியளித்தன, எதிலும் கவனம் செலுத்த முடியாமல், முதலில் கிறுக்கப்பட்ட காய்ப் புழுவின் வேதனையை உணர்ந்தான்.

திங்கள் காலை வந்தது, ஒரு தோசையை பிச்சி வாயில் போட்டு கொண்டு கல்லூரி பேருந்தை பிடிக்க பேருந்து நிறுத்தம் சென்றடைந்தான்.

பேருந்திலாவது அவள் முகம் பார்ப்போம், செய்கையிலேனும் மன்னிப்பு கேட்கலாம் என்ற எண்ணத்தோடு காத்திருந்தான்.

ராமர் கோட்டருகில் சீதையை காணோம்.

அவளும் அழகிய பதுமைகளோடு கைகோர்த்து வாகனத்தை வேகப்படுத்த முற்பட்டு முன்னாள் இருக்கையில் அமர்ந்தாள் போலும்.

மூன்றாண்டுகளில் நடக்காத விடயங்கள் எல்லாம் அன்று நடந்தேறியது.

அவன் முதல் முதலில் பார்த்த அதே மஞ்சள் சுடிதார், நீல நிற ஷூ, கேரளத்து கதகளியாடும் கலைஞர்களின் கீழாடையை ஒத்த ஒரு தோடு.

அவளுக்கே உரிதான குதிரைவால் சடை, கூறிய வாள் தோற்கும் அளவிற்கு கூர்மையான புருவ மை, 

அகில அண்டத்தையும் உள்ளடக்கும் வல்லமை கொண்ட ஒரு லேடீஸ் ஸ்லிங் பேக், என அவளை பார்த்தும் பார்க்காததுமாய் குறிப்பெடுப்பதற்குள், பேருந்து இரயில் நிலையம் கடந்திருந்தது.

இவள் ஏதோ கை நீட்டி பேச, ஓட்டுனர் அங்கே பேருந்தை நிறுத்தினார்;

அவளும் மேகலையும் அங்கே இறங்கி கொண்டார்கள்.

அவனும் அங்கேயே இறங்கி அப்படியே சென்றிடலாம் என்றிருந்தான்.

ஆனால் அந்த எண்ணம் வருவதற்குள், அந்த சாரதி (சூரரை போற்று சூர்யாவின் சித்தப்பா பையன்), என்னத்த பாத்தானோ தெறியல, ஒரே அழுத்து அடுத்த ஐந்தாம் நொடி பேருந்து அவ்விடத்தில் இல்லை.

அவள் இறங்கியவுடன் அவள் விழி வழியில் ஒரு வழிபோக்கனாய் நாம் இருப்போமா என்று அவளை பார்க்க முயல்கையில், மேகலை மட்டும் இவன் நோட்டம் விடுவதை பார்த்து தென்றலிடம் ஏதோ சொல்லி சிரித்து அவள் தோள்களை பற்றினாள்.

இவனது எண்ணஓட்டங்களுக்கு அந்த தீனி சற்று தேவையற்றது தான், ஆனால் என்ன செய்வது ? விதி வலியது.

பிறகென்ன மாலை பேருந்தில் அவள் வரவில்லை, இரயில் நிலையத்தில் பேருந்து எந்த சம்மந்தமும் இல்லாமல் கடந்தோடியது.

மறுநாள் முதல் அவள் இவன்கண் படவே இல்லை.. 

எங்கிருந்து வந்ததோ தெறியவில்லை அந்த தைரியம், தனது Splender பைக்கை எடுத்து கொண்டு, பயணமானான் ; யாரையுமே தெரியாத ஊருக்கு, அவளை தேடி..

அந்த ஊரை அடைந்து, அங்கிருந்த டீ கடையில், அய்யா இங்க சீனிவாசன் sir வீடு எங்க இருக்கு ?

ஊர் காரங்களுக்கே உள்ள திமிரோடு, உங்களுக்கு எதுக்கு தம்பி ?

சற்று தயக்கத்தோடு அவன், இல்லங்கய்யா அவங்க எங்களுக்கு வேண்ட பட்டவங்க தான், அவங்கள நேர்ல பாத்து கொஞ்சம் பேசனும்னு வந்தேன் என்று சொல்ல.

பத்து நிமிஷம் பொறுங்க அய்யா இப்படித்தான் போவாரு பாத்து பேசிக்கிடலாம் என்றான் டீ கடை காரன்.

டீ கடை காரனின் நோக்கம் புரிந்தவனாய், டீ கடை வச்சா பெரிய பிரதம மந்திரினு நெனப்பு என்று நினைத்து கொண்டு (இதில் எந்த உள் குத்தும் இல்லை), வண்டியை எடுத்து கொண்டு வீடு திரும்பினான்.

பொறுத்து பொறுத்து பார்த்து, அலைபேசியில் தொடர்ப்பு கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு சற்று தைரியம் ஏற்றி, அடுத்த வெள்ளிக்கிழமையில் தொடர்பும் கொண்டான்.

ஏதோ ஒரு பெண் எடுத்து, சொல்லுங்க யார் வேண்டும் என்று கேட்க ; துண்டித்து அட்ரெநெல்லின் ஏற்றம் பெற்றான்.

ஆனால் அவனது முயற்சி வீண்போகவில்லை.

சனி கிழமை காலை ஒரு text message வந்தது...
"why did you call me ?" என்று.

அவன் : why didn't you text me ?
அவள் : why should I ? (அகம் புடிச்ச கழுதை)

சிறிது நேரம் கழித்து...
அவன் : Antha alavuku pocha.. 

மாலையில்...
அவள் : entha alavuku, onnum puriyala..
அவன் : Call ?
அவள் : Not now, veetla ellaarum irukaanga..

கரையை கடக்கும் புயலென, பல வகையான ஒரு வரி கேள்வி பதில்கள் text மெசேஜில் இடம் பெயர்ந்தது.

TRAI நெறிமுறைபடி இன்றைய 100 text message களை நீங்கள் பயன்படுத்திவிட்டீர்கள் என்ற தகவல் வரும் வரை தொடர்ந்தது.

வாழ்க TRAI ... (ஒரு நாளைக்கு 100 MESSAGE என்ற கணக்கு இன்னக்கி வரைக்கும் புரியல எனக்கு)

ஆனால் அந்த மூன்றெழுத்து வார்த்தையை அவனும் இழுக்க வில்லை, அவளும் சொடுக்க இடம் கொடுக்க வில்லை.

பிறகென்ன... சற்று அமைதி கொள்ளுங்கள்...

அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சு...


வியாழன், 29 ஏப்ரல், 2021

தென்றல் வேலன் - பகுதி 3




காதலின் உத்வேகம் எத்தகையது என்று ஆராய தொடங்குங்கள், நீங்கள் உங்கள் வாழ்வியல் பயணத்தில் எங்கோ எப்படியோ;  உங்கள் குடும்பம், சூழ்நிலை என்று பலவாறாக  முதல் காதலை தொலைத்து இருப்பீர்கள் / இருக்கலாம்.

ஒருதலை காதலோ, இருமுனை ஈர்ப்போ ; நீங்களே நினைத்தாலும் அந்த காதலை மீட்டெடுத்து உங்கள் முன்னாள் காதலனை/காதலியை அதே உள்ளன்போடு பார்க்க முடியாது.

ஆனால் யாரென்றே தெறியாத என் போன்ற ஒருவன் அல்லது எவளோ ஒருத்தி உங்களின் காதலுக்கு கண்மூடித்தனமாய் உதவி செய்திருக்கலாம்.

அவர்களை இப்பொழுதே அழைத்து பேசுங்கள், உங்களுக்கு 45 வயது ஆனாலும் உங்களின் இளமைக்கு இழுத்து செல்லும் வல்லமை வாய்ந்த அந்த நட்பை வீனடிக்காதீர்கள்.

இப்படி அவ்வப்பொழுது கருத்து கரப்பான் பூச்சிகள் எட்டி பார்க்கும், அதை ஹிட் அடித்து ஜட்டியுடன் படுக்க வைக்க முயலாமல், சற்று அன்புடன் அரவனைத்து; விளக்கமாற்றால் (விளக்கம் என்ற மத்தால்) அடியுங்கள், சாகும் வரை புலம்பிவிட்டு போகட்டும்... 

கரப்பான் பூச்சிகள் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையோடு நம் கதைக்கு போவோம்...

என்னதான் ஒரு மணி நேரம் பேசினாலும், அவ்விடத்தில் இங்கிதமின்றி அலைபேசி எண்ணை கேட்பது அவனுக்கு உசிதமாக படவில்லை.

பிறகென்ன, வழக்கம் போல தான் ; சமூக வலைதளங்களில் தேடி பிடித்து பறந்தது facebook friend request.

அதை அவள் accept செய்வாளா மாட்டாளா என்ற பெரும் புலம்பல்களோடு ஓடியது 4 நாட்கள்.

இன்றைய காலகட்ட கல்லூரி மாணவர்கள் போலல்லாமல் அப்போது படித்தவர்களுக்கே என ஒரு formula இருந்தது.

செமஸ்டர் நெருங்கினால், இன்டர்நெட்டுக்கு bye bye.

அந்த 50mb Pocket இன்டர்நெட் தான் ஒருவனின் Arrear எண்ணிக்கையை கணக்கிடுவது போன்ற ஒரு எண்ணம்.

அந்த ஒரு வாரத்தில்; பரிட்சை அட்டவனை, Practical என்று பல குழப்பங்கள் அவனை நிலைகுலைய செய்தாலும், பரிட்சையற்ற நாட்களில் அவள் வருகைக்காக நூலகம் சென்று வந்தான்.

அங்கு சென்று, இவன் எடுத்துவந்த நாவல்களை சுவாரஸ்யமாக படித்து கொண்டிருப்பான்.

அங்கே வரும் பெண்களெல்லாம், சரியான பொங்கல் சோறு, தயிர்சாதம் என நினைத்திருக்கலாம். 

ஆசிரியர்களோ; இந்த காலத்தில் இப்படி ஒரு பையனா என்று கூட நினைத்து இருக்கலாம்.

ஆனால் அவன் நினைப்பனைத்தும், அடுத்த சந்திப்பில் அலைபேசி எண்ணை வாங்க என்ன வழி என தேடியது.

ஒரு வழியாக அவன் எதிர்பார்த்த அந்த தருணம் அந்த அயோத்தியில் நடந்தது.

ஒருநாள் காலை இவன் நூலகத்தில் நேரம் கழித்து, சோம்பல் தீர்க்க கேன்டீன் டீயை குடிக்கலாம் என்று, தற்கொலை முயற்சி செய்ய முன்வந்த தருணத்தில்;

நம் சகுந்தலாவோ LAB COAT போட்டுகிட்டு, வராண்டாவில் CATWALK செய்து கொண்டிருந்தாள்.

இவன் அவள் LAB குள் நுழைவதை பார்த்து, அடடா என்று தலை முடியை வார முற்படுவதற்குள், RECORD நோட்டில் கை மறைத்து ஒரு HI காட்டி, அதே கன்னக்குழி சிரிப்பில் இவனை கண்காட்சி பொருளாக்கி போனாள்.

அன்று என்ன ஆனதோ தெறியவில்லை, கேன்டீன் தேநீர், தேனில் போட்டிருந்த ஒரு சுவை. 

அன்று பல முறை அந்த வராண்டாவில், கஜா வராண்டா கஜா வராண்டா என்று bgm போடாத குறையாக நமது குட்டி போட்ட பூனை நடந்தது.

அன்று மாலையும் பேருந்தில் காலம் கைகூடும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்க, அங்கு ஆப்பு வைக்க அற்புதமாய் கூடவே வந்தாள் மணிமேகலை. (ஒரு பெண்ணை correct செய்ய முயல்பவனுக்கே தெறியும், பெண்களின் பெஸ்ட்டீக்கள் எத்தகைய கிருஞ்சு (CRINGE) என்று... மன்னிக்கவும் டோலிகளே)

இந்த பெண்களுக்கு மட்டும் எங்கிருந்து தான் இப்படி பட்ட நட்பு ஏற்படுகிறதோ தெறியவில்லை.

பேருந்தில் ஏறும் பொழுதே, கம்மல் கரகாட்டம் ஆட, முகம் சிவக்க சிரித்தபடி ஏறி ராமர் கோட்டருகில் அமர்ந்தாள் சீதை, மாலை வெயில் இவள் கம்மலில் ஒளிச்சிதர்வுற்று, இவனுக்கு ராமன் விளைவை விளக்கி கொண்டிருந்தது.

குளிக்காத காற்று இவள் கூந்தலில் நுழைந்து, மல்லிகை மனமேற்றம் செய்து, குளிர்காற்றாய் பூப்பெய்தி கொண்டிருந்தது.

மயிரிழைகள் காற்றின் கண்ணாமூச்சி ஆட்டத்தில், அவள் புரடியில் இருந்த மச்சத்தை மானபங்கம் செய்துகொண்டிருந்தது.

சுடிதார் துப்பட்டாவோ, இவள் அழகிற்கு இங்கு ஏதேனும் ஈடுண்டா என, வழிபோக்கர்களிடம் துப்பு கேட்டு கொண்டிருந்தது.

இவனோ, பேருந்து ஜன்னல் கம்பியில் சாய்ந்தவாறு; அவள் அழகின் வர்ணனையில் கம்பனிடம் போட்டி போட்டு கொண்டிருந்தான்.

இப்படியே கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக அவன் வீட்டை அடைந்தான்.

அடைந்து அலைபேசியை எடுத்து இன்டர்நெட்டை சொடுக்க, அவனுக்கு வந்த முதல் தகவல் ஒலி, "Ilanthenral accepted your friend request. Say Hi " 

Mark zuckerburg சொன்னா கேக்காம இருப்போமா. 

Hi என்ற message தட்டப்பட்டது.
(சற்று முன்னமே அவள் பெயரை சொல்லி இருக்கலாம், இது என்னை அறியாது உங்களிடம் அவள் பெயரை சொன்னதாக இருக்கட்டும். தயவு கூர்ந்து யாரும் facebook search செய்ய வேண்டாம்.)

பிறகென்ன, எல்லா கதைகளும் அரங்கேற்றம் பெற்றது.

பல கதைகள், பல புத்தகங்கள் அவர்களின் தட்டச்சில் இடம் பெற்றது. எல்லாம் மீறி அவன் அவளிடம் அவளது அலைபேசியின் எண்ணை கேட்டான். (ஆண்கள் எங்கு நேரடியாக கேட்டு இருக்கிறோம், சங்கதாராவின் pdf என்னிடம் உள்ளது, அனுப்புகிறேன் என்று கேட்டான்)

அதன் பின் மீண்டும் ஒரு அமைதி, ஒரு 14 மணி நேர மௌன அஞ்சலிக்கு பின், அவள் ஒரு எண்ணை share செய்ய.

சங்கதாரா பரிமாற்றம் அடைந்தது. 
(நன்றி காலச்சக்கரம் நரசிம்மா)

பிறகு தினம் ஒரு கதை என்று அவளை அவனும், அவனை அவளும் நன்றாக தெரிந்து கொண்டார்கள்.

கல்லூரி நான்காம் ஆண்டு வரை நல்ல நட்பாக இருந்த இந்த உறவு, பிரிய போகிறோம் என்ற ஏக்கத்தில் காதலானது.

அதுவும் அவ்வளவு சாதாரணமாக இல்லை, கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா முடிந்து அன்று வழக்கத்திற்கு மாறாக இரவு 9 மணி ஆனது பேருந்துகள் புறப்பட.

அன்று அதே ராமர் கோட்டின் அருகில் அவள் அமர்ந்திருக்க இவன் இரண்டு சீட்டுகள் தள்ளி இருக்க, அவன் அலைபேசியில் இருந்து "நான் உன்னை காதலிக்கிறேன்" என்ற குறுந்தகவல் இரண்டாம் அலைகற்றையில் இடைமறித்து, மெதுவியக்கத்தில் பயணித்து அவளிடம் சென்றடைந்தது.

பிறகென்ன நேர்ந்தது, காத்திருங்கள்....

புதன், 28 ஏப்ரல், 2021

தென்றல் வேலன் - பகுதி 2




ஒரு பெண்ணின் பார்வைக்கு எத்தகைய சக்தி உண்டெனில் :

நீங்கள் காத்திருக்கும் பேருந்து நிறுத்தத்தில், நீங்கள் 3 வருடங்களாக கண்டுகொள்ளலாமலே இருந்த பெண் உங்களைத்தான் தினமும் பார்க்கிறாள் என்று உங்கள் நண்பன் உங்களிடம் கதைக்கையில்; 
"உலக அழிகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி" என்று நீங்கள் அவளிடம் இல்லாத அழகை இருப்பதாக எண்ணிக்கவிழும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.

உங்களின் எழுத்துகளில் இரண்டு மூன்று வைரமுத்துகளும், கால் கிலோ கண்ணதாசனும், மூன்று வாலி; நா.முத்துக்குமாரும் எட்டி பார்க்க தவற மாட்டார்கள். (அங்கிருந்த அரைபுள்ளியை பாராமல், அதை மூன்று நீர் நிரப்பும் வாலி என்று படித்து; ரங்கராஜனை மறந்து விடாதீர்கள்)

சரி நாம் கதைக்குள் போவோம் : 

பேருந்தில் ஏறியவுடன் பேச தொடங்கும் அவன் குரல், பேருந்து முழுக்க ஒலிக்கும். 

பேருந்தில் இருக்கும் ஆசிரியர்கள் திரும்பி பார்த்து, டேய் நான் இங்குதான் இருக்கிறேன் என்று கண்ணாலே விளக்கம் குடுக்க முயல்கையில்; 

இருந்துட்டு போ ! என்பது போல இருக்கும் அவன் பேச்சு.

இதிலும் சூடான வாத்திக்கள், வா என் அருகில் அமரு என்று அழைத்து பக்கத்தில் அமர வைக்க அந்த வாத்தியிடமும் பேசி அவரையும் அரட்டைக்குள் இழுக்கும் திறம் வாய்ந்த அரட்டையாளன் அவன்.

வழக்கமாக வடிவேலு காமெடி போல பேருந்தின் வேகத்தை கூட்ட அழகிய பெண்கள் ஓட்டுனருக்கு அருகாமையில் அமர்வது வழக்கம். (அந்த இடத்தில் குறிப்பாக 6 பெண்கள் மட்டுமே அமர்வார்கள், மற்றவர்கள் தெரியாமல் கூட அங்கே செல்ல மாட்டார்கள் - Courtesy : Terror லேடீஸ் கிளப்)

இதையெல்லாம் மீறி நம் சகுந்தலாவோ, ராமர் கோட்டிற்கு முதல் சீட்டில் தான் அமர்ந்தாள்.

(ஆமா அது என்ன ராமர் கோடு ? - தனியார் கல்லூரிகளில் ஆண்களுக்கென தனி வழி பெண்களுக்கென தனி வழி ; இதை பிரிக்க ஒரு மஞ்சள் கோடு இருக்கும் - அதுவே ராமர் கோடு எனப்படும்.

பேருந்தில் ராமர் கோடு எப்படி இருக்குமானால், இடது புறம் உள்ள இருக்கைகளில் பெண்களுக்கு பின்னால் ஆண் ஆசிரியர்கள் அமர, வலது புறம் உள்ள இருக்கைகளில் பெண்பால் ஆசிரியர்கள் அமருவார்கள்.

பேருந்துகளில் ராமர் கோடு உயிர் பெறுகிறது. 
வாழ்க ராம நாமம், வளர்க இந்துத்து.)

இப்படியாக இவனது குரல் கேட்க, ஒரு நாளில் ஒருமுறையாவது அவளை திரும்பி வைக்க வேண்டும் என்ற கொள்கையோடு அவனும் பேச, அவளும் அந்த target அடைய அவனுக்கு உதவி செய்தாள்.

இவ்வாறாக ஒரு செமஸ்டர் ஓட, Practical exam வந்து சேர்ந்தது.

Practical examகளின் பொழுது, கூட்டம் அவ்வளவாக இருக்காது, ராமர் கோடும் இருக்காது.

பேருந்துகள் 3 மணிக்கு தயாராகி, 5.15க்கு ஏவப்பட ஏதுவாக காத்திருந்தது.

அன்று முதன் முதலாக அவன் பேச ஆலற்று, அந்த பேருந்து அனாதையாகி இருந்தது.

அவன் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவளும் அந்த பேருந்தில் ஏறி, சித்திகரிக்கப்பட்ட ராமர் கோட்டின் அருகில் வந்தமர்ந்தாள்.

சற்றும் எதிர்பாராத நேரத்தில் திரும்பி, நீங்க தான அது, கத்திக்கிட்டே வருவீங்க என்றாள்.

இவனுக்கோ, என்னது கத்திக்கிட்டு வருவேனா; கிருஞ்சு (Cringe) குவியலாகிட்டோமோ என்ற எண்ணத்துடன்.... ஆமாம் என்றான்.

கன்னத்தில் குழி விழும் சிரிப்புடன் (அதுவரை அப்படியொரு கன்னகுழியை அவன் பார்த்ததில்லை) , முன்னாள் படர்ந்த முடியை ஒதுக்கியவாறு, actually நீங்க நல்லா பேசுறீங்க என்றாள்...

பஸ்ஸுக்குள் butterscotch வாசம் நிரம்பியது, (ஏன் Butter fly தான் இருக்கனுமா) மாலை வெயில் கண் கட்டச்செய்தது... அதை எல்லாம் மீறி அவன் அவளிடம் Thanks என்று கூறி அவனுக்கே உரிதான பாணியில் பேச தொடங்கினான் .

எதுவுமே இல்லனா கூட பேச ஆள் இருந்தா போதும் நல்லா சந்தோசமா இருப்பேன், ஆனால் இன்னக்கி தான் இந்த தனிமை என்றான்.

அதான் நான் இருக்கிறேனே என்றாள் அவள்.

இது போதும் எனக்கு, இதுபோதுமே என்ற பாடல் bgm கேட்காத குறையாக இவன் பேச தொடங்கினான்.

பிறகென்ன ஜாதக பரிமாற்றம் தவிற மற்ற அனைத்தும் நடந்தது. 

ராமர் கோட்டின் அழிவு ஆரம்பமானது, இதையெல்லாம் கண்ணாடியில் பார்த்த பேருந்து ஓட்டுநர் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தார்.

எல்லாம் வல்ல ஆண்டவன் அருளால் அன்று வேறு யாருமே பேருந்தில் வராதது, கூடுதல் சிறப்பாக அமைந்தது. (3 மணிக்கு பரிட்சை முடிய, 6 ரூபாய் டிக்கெட்டுக்கு கஞ்சத்தனம் காட்டியது எவ்வளவு நல்லதாக அமைந்தது)

இது போன்ற இடங்களில் "கஞ்சனுக்கு காலனாவும் ஆயுதம்" என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

அன்றைய பேச்சுவார்த்தையில், பொன்னியின் செல்வன் இடம்பெற்றுவிட்டார், கல்கியின் வாசகர்கள் பேசும் பொழுது ; வேறென்ன வேண்டும் ?

அவன் பூங்குழலியின் காதலன் என்றான், அவளோ அருள்மொழி வர்மன் என்றாள்.

அவ்வளவு நேரம் அருள்மொழி மீது அவன் கொண்டிருந்த மதிப்பு ஒரு நொடியில் வெறுப்பாய் மாறியது.

பிறகு சங்கதாராவை உள்ளிழுத்து அவள் அதை படித்திருக்க மாட்டாள் என்ற எண்ணத்தோடு, சங்கதாராவை மையாமாக வைத்து கதைக்க தொடங்கினான். 

(நன்றாக நினைவில் கொள்ளுங்கள், பொன்னியின் செல்வன் காதலர்களுக்கு, சங்கதாரா ஒரு பிரமாஸ்திரம்.

உங்களின் விருப்பமான நபர் பொன்னியின் செல்வன் பிரியனானால், சங்கதாரா கொண்டு தாக்குங்கள், உங்கள் வெற்றி உறுதி.)

அவள் கண்ணில் அந்த ஆர்வம் தெரிந்தது, அவனும் அதை குறைக்காமல் கதைக்க தொடங்கினான்.

இவ்வாறாக முதல் சந்திப்பில் பல சுவைகள் ஒத்து போக, எப்பொழுதும் போகும் 1 மணி நேர பேருந்து பயணம் அன்று 2 நிமிடங்களாக சுருங்கி முடிந்தது. 

அதன் பின் நடந்தது என்ன, 

சற்று காத்திருங்கள்....

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

தென்றல் வேலன் - பகுதி 1





என் எழுத்துகள் என்னைப்போலவே தோற்க தொடங்கிவிட்டன.. 

வெற்றியென்றால் என்னவென்றே தெறியாமல் யாரேனும் இருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் வேண்டுமெனில், அக்கம் பக்கம் பாராமல், அண்டை பதிவை நாடாமல் என் முகத்தை நினைத்து கொள்ளுங்கள்.

எனது தோல்வி எத்தகையது என்று கேட்டீர்களானால், என் முகத்தை நினைத்து கொள்ளுங்கள் என்றவுடன்; சற்றும் யோசனையின்றி உங்களால் என் முகத்தை நினைவு கொள்ள முடியும்.

ஏனெனில் என்னை தெரிந்தவர்களையன்றி யாரும் இப்பதிவை படிக்கப்போவது இல்லை.

(ஆனால், இப்பொழுது இந்த பொன்முறுவல் சற்று அவசியமற்றது என்று தோன்றுகிறது. இருந்தாலும் பரவாயில்லை, சற்று சிரித்து கொள்ளுங்கள்.)

தோல்வி எப்படி ஒரு மனிதனை புரட்டி எடுத்தாலும், அவனது வாழ்வை, வாழ்வியல் நிகழ்வுகளை அதனால் சற்று நிதான படுத்த மட்டுமே முடியும்.

அந்த நிதான நொடிகளில் அந்த தோல்வியின் காரணிகள் அவனை/அவளை மென்மேலும் துன்புறுத்தி மகிழும்.

பச்சை பட்டாணியில் பசியாரி, சந்தோஷமாய் அது தனது வீடு என நினைத்து வாழும் காய்ப் புழு, பட்டாணியை உரித்து சுண்டலாக்க முற்படும் எஜமானன் கையில் சிக்கி தவிக்கும் நிலையை ஒத்திருக்கும்.

மரத்தில் இருந்து தொங்கி இறங்க முயல்கையில், யார் கண்ணிலோ பட்டு, தனது கூட்டை காட்டி கொடுத்து, எமதர்மன் சோப்பு தண்ணி கரைத்து ஊற்ற, சாவின் விளிம்பில் தவிக்கும் மொசுக்கட்டையின் நான்கு தலைமுறையின் வலியை ஒத்திருக்கலாம்.

கர்ணன் திரைப்படம் போல இந்த காட்சிகள் 1990 களுக்கு முந்தையை காலத்தில் நடந்தது அல்ல.

(இந்த நொடியை 2010க்கு முன் கிராமத்தில் வளர்ந்த 90 சதவிகிதம் பேர் பார்த்திருக்கலாம், தயவு கூர்ந்து அதை நினைத்து பார்த்து ; தங்களின் வலது கையால் இடது கையை மயிர் கூச்செறிய சொரியாதீர்கள்)

இவ்வாறு பல வலிகளை நாம் ஒப்பிட்டாலும், அந்த குட்டி மொசுக்கட்டை கொண்ருன்னி மனிதர்கள் கடக்கும் வரை சற்று காத்திருந்திருக்கலாம்.

நாம் நமது கதைக்கு வருவோம்.

நீங்கள் ஒருத்தியை/ ஒருவனை உண்மையாக விரும்பும் பொழுது, எப்படி அவளை/அவனை வெறுப்பீர்கள் ?

காரணங்கள் கோடி சொன்னாலும், அவளை நீங்கள் விரும்பியதும்; அவள் உங்களை விரும்பியதும் மட்டுமே உண்மை.

எங்கிருந்தாலும் வாழ்க என்று கோடிப்பேர் கூறினாலும், நமக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது; என்று எண்ணும் சிலரும் வாழத்தான் செய்கிறார்கள்.

அவள் கூறிய காரணங்கள் தான் என்னென்ன ?

உனக்கு வேலை இல்லை : இச்சமூகத்தில் படிக்கிற அனைவருக்கும் வேலை இருந்தால்தான் காதலிக்க வேண்டும், வேலை இருந்தால் தான் ஒருத்தியின் மீது ஆசைப்பட வேண்டும் என்ற எண்ணம் எனோ அவனுக்கு படிக்கும் காலத்தில் வரத் தவறிவிட்டது.

Second year போனான் முழு காலேஜும் அவன் controlக்கு வந்துச்சுன்னு; ஒரு மாஸ் பன்ச் போடலாம்னு ஆசையோட போனா, Class notes எடுக்க வச்சு, அதுலயும் கேள்வி கேட்டு ; கொக்கி குமார் கொமட்டுல குத்தி வெளிய தள்ளிட்டாரு.

சேரி உள்ள ஒக்காந்து தூங்குறதுக்கு, வெளிய போயி இயற்கையை ரசிப்போம்னு செவுத்துல சாஞ்சி நின்ன ரெண்டா நிமிஷம் மாப்ள சலீமும் வெளிய வந்தான். (இன்ஷா அல்லா : உன் கருணையே கருணை - Why Blood same blood)

அங்கேயும் இங்கேயும் வேடிக்கை பாக்கையில, Lateral entry பசங்களெல்லாம் induction முடிச்சு, அவங்க அவங்க class க்கு போறத பாத்து சலீமு சுட்டி காட்டுனான்.

அந்த கூடத்துல தான் அவளும் இருந்தா...

முதல் முதலில் அவளை பார்த்த பொழுதில் கூட, நான் பொறுப்பற்று வகுபறையின் வெளியில் தான் நின்று கொண்டிருந்தேன். (கொக்கி குமாரின் கோர தாக்குதலுக்கு பின்)

மஞ்சள் சுடிதார், கணகாம்பரப்பூ நீல நிற ஷூ என்று அவளது செலெக்ஷன் தான் எத்துனை வித்தியாசம் ! (அப்பொழுதே அவளது செலெக்ஷனில் எனது தரத்தை ஒப்பீடு செய்திருக்கலாம்)

காட்டுக்குள் காலேஜ் கட்டியது கவித்துவம் ஏற்றத்தான் என்று, பினாமியை திட்டும் பொழுது தோன்றவில்லை. (இயற்கையை இயற்கை எய்தாமல் வைத்தமைக்கு நன்றி)

கடுங்கூட்டத்திற்கு நடுவிலும் ஏய் துஷந்தா என்று Song போடாத சகுந்தலாவாக அவள் மட்டுமே அவன் கண்ணில் பட்டுக் கொண்டிருந்தாள்.

அதுக்கப்புறம் என்ன, எங்க போனாலும் அவ அங்கேயெல்லாம் இருக்குற மாதிரி ஒரு இனம்புரியாத மயக்கம். (இவரே தேடி போவாராம், ஆனா விதிப்படி அந்தபொண்ணும் அங்க வந்துச்சுன்னு நெனச்சுகுடுவாராம்)

உணவு இடைவேளையில் கூட்டமா நிக்கையில, கேன்டீன்ல வந்து ப்ரூட் பவுல் வாங்கயில, ஒரு Close up தரிசனம் தர.

FRUITY குடிக்கிறப்போ, பன்னீர் சோடா குடிச்ச மாதிரி ஜிவ்வுன்னு ஒரு இனம் புரியாத அனுபவம். 

வயசு கோளாறு, இது காதலா இருக்குமோன்னு நினைக்க வச்சுது.

சாயங்காலம் எல்லாரும் கூட்டமா காலேஜ் பஸ்ஸை நோக்கி நடைபோட, search engine active ஆகிடுச்சு, filter yellow colour னு, excel filter கணக்கா filter போட்டு அடுத்த மூனா நிமிஷத்துல அவளாண்ட வந்து நின்னுச்சு.
அதே 23 பஸ்.

NON SYNC லே ரன் ஆகுற இந்த 19 வயசு OS க்கு இந்த UPDATE, HANDLE பண்ண கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.

எல்லாத்தையும் ஆண்டவன் மேல பாரமா போட்டுட்டு, பக்கத்துல இருந்த பாலாஜி கிட்ட கேட்டான்; 

மச்சி யாருடா அவன்னு...

நம்ம கூட காலேஜ் படிக்கிற பயலுகளுக்கே உள்ள அதுப்பு, 

பொண்ணு யாருனு கேட்டா ; 

ஆறு வருஷமா அரியர் எழுதுற செந்திலோட சொந்த கார பொண்ணு, அது மட்டும் இல்லாம நம்ம Final Year படிக்கிற சிவசந்திரனோட ஆளுன்னு எடுத்த ஒடனே; கும்பகோணம் - தஞ்சாவூர் வழியில உள்ள speed breaker மாதிரி ஒரு பத்து பன்னெண்ட அடுக்குனான்.

துயில் கொள் பாலாஜின்னு அவனை தோள்ள போட்டு தட்டி கொடுத்து தூங்க வச்சுட்டான்

பொதுவா 1 மணி நேரத்துல வீட்டுக்கு போற பஸ்ல அன்னைக்கு என்னமோ எட்டு மணி நேரம் பயணிக்கிற மாதிரியே ஒரு நெனப்பு.

அம்புட்டு தான், அடுத்த ஒரு வாரம் தீவிரமா Class notes எடுக்க ஆரம்பிச்சாச்சு, அதே வேகத்துல போயிருந்தா, second year லேர்ந்து அவன் university topper ஆகிருப்பான்.
(இவிங்க பாடம் நடத்துற அழகுல)

ஆனாலும் அந்த வாரங்கள்ல நம்ம சகுந்தலா கண்ல படாம இல்ல, 

மண்டைகுள்ள, பன்னிர் சோடா உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், பன்னிர் சோடா உயிரை கொல்லும் அப்டின்னு ஹஸ்கி வாய்ஸ் மட்டும் தான் கேக்கல ; அம்புட்டு சோடா குடிச்சுறுப்பான் நம்ம பய.

இப்டி பல முறை கேன்டீன் சந்திப்புகளுக்கு பிறகு என்னதான் ஆச்சு,.. விரைவில் சந்திப்போம்..

தொடரும்...