செவ்வாய், 16 ஜூன், 2020

மரணத்துக்கு அப்பால் - அதிகாரம் 5 - பூர்ணிமா




மரணத்துக்கு அப்பால்


சென்ற அதிகாரத்தில், நான் எழுதிய எனது தற்கொலை பற்றிய வரிகள் எனக்கு சிரிப்பாக தோன்றினாலும், என்னை பெற்றவர்களை எப்படி பாதித்தது என்று அவர்களின் கருத்துகள் கூறின.

பலரும் பலவாறு அவர்களின் கருத்துகளை கூறினார்கள்.

காலையில், பல கருத்து குவியலின் நடுவில் விழித்தேன். அவையனைத்தும் பாராட்டு குவியல்கள். இதுவரை எழுதிய அனைத்திற்கும் ஒரு சேர கிடைத்த நன்மதிப்பு என்று கூட சொல்லலாம்.

எனது தற்கொலை ஒரு பக்கம் இருக்க, நாம் அதையும் கடந்து ஐந்தாம் அதிகாரத்தை எட்டி பார்ப்போம்.

என்னிடம் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள், எனது எழுத்துக்கள் எப்பொழுதும் உங்களுக்கு பிடித்த விதத்தில் இருந்திடாது.

என்னை வெறுக்க தொடங்குங்கள், என்னையும் என் எழுத்துக்களையும் வழக்கிடுங்கள்.

அது என் முன்னேற்றத்திற்கு வித்திடும்.

நா. முத்துக்குமார் போன்ற நல்ல கலைஞர்களை கொன்ற "பெருமை" என்ற போதை எனக்கு வேண்டாம்.

ஆனால் ஒன்று, என்னை முழுமையாக படித்து பிறகு வழக்கிடுங்கள்.

இதற்கு முன் எழுதிய நான்கு அதிகாரத்தை படித்தால் மட்டும், இதை தொடருங்கள்.

இந்த அதிகாரம், எனக்கானது - இதை எழுதவில்லை என்றால், இதுவரை எழுதிய அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்தான்.


அதிகாரம் - 5 - பூர்ணிமா

சிறுவயதுமுதல் நமக்கென ஓர் நண்பன் இருந்திருப்பான், வளர்த்த பின்போ,நமக்கு தெரிந்த அளவு அவன் உலகை தெரிந்திராத காரணத்தாலோ; வாழ்வின் ஓட்டதாலோ, ஸ்டேட்டஸ் என்ற வக்கற்ற வாழைமட்டையாலோ நாம் அந்த நண்பனை விட்டு விலகி வந்திருப்போம்.

எனக்கு அப்படி, எனது குழந்தை பருவத்தின் வார இறுதி நாட்களை நிரப்பிய பங்கு, இராஜராஜனுக்கு உண்டு.

நான் சிக்ஸ் அடிக்க கற்றுக்கொள்ள, நாள் முழுக்க புல் டாஸ் பந்துகளை வீசியவன்.

நான் சச்சின் ரசிகன், அவன் கங்குலி. நான் சென்னை சூப்பர் கிங்ஸ், அவன் கொல்கத்தா.
இப்படி ஒரு சில கருத்து வேறுபாடு இருந்தாலும் அவன் என் நண்பன்.

இந்த நேரம் உங்கள் வாழ்வின் இராஜராஜனை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

சந்தோச பட்டது போதும், இப்போ உங்க இராஜராஜனை மறந்துடுங்க !, நாம கதைக்குள்ள போவோம்...

அதே சம காலத்தில், இராஜராஜனற்ற நேரங்கள் கழிந்தது பூர்ணிமாவும் தொலைகாட்சியுமாய்.

பூர்ணிமா....

எனக்கு தெரிந்து பிறந்தவள், எங்களின் எதிர் வீட்டு பெண் குழந்தை.

ஏழெட்டு வயதுடைய வாயாடியாய், எல்லோரிடமும் வம்பிழுக்கும் பேச்சுடன்; எல்லாரிடமும் எளிமையாய் பழகும் குணமென; மரியாதை குடுக்க தெரியாத 90ஸ் கிட்ஸின் comparison பொருளாக திகழ்ந்தவள்.

90ஸ் கிட்ஸ்கள் டீனேஜை அடைந்த பொழுது; அடுத்த யுகமான 2k கிட்ஸ்ஸின் முதல் மாதிரி (sample) படைப்பு அவள்.

எப்பொழுதும் விளையாட்டு, விஷமம், கிறுத்துருவம், சுட்டித்தனம் என்று அந்த குழந்தையிடம் கண்ட சுறுசுறுப்பை வேறு எந்த குழந்தையிடமும் இதுவரை கண்டிலேன்.

பக்கத்துவீட்டில் உள்ள சித்ரா அக்காவை அத்தை என்று அன்போடு அழைக்கும் அவள், சித்ரா அக்காவின்கண் காரியமேற்ற; அப்புறம் உன்னோட மூன்று மகன்களில் யாரையும் கட்டிக்கிடமாட்டேன் என்று குறும்புடன் மிரட்டியது, இன்றும் நினைவில் உண்டு.

சுட்டி டிவி வருவதற்கு முற்காலம், சன் டிவி காட்ஜில்லா, ப்ரிடேட்டோர், சார்லீஸ் ஏஞ்சல்ஸ் என்று அசாத்திய டப்பிங்கில் அசத்தி கொண்டிருக்க, கேபிள் வயரில் ஊக்கு போட்டு அந்த திரைப்படங்களை எங்கள் கருப்பு வெள்ளை தொலைக்காட்சி புள்ளிபுள்ளியாக ஓட்டிய பொழுதெல்லாம், அதன் திரை பிரதிபளிப்பில் பூர்ணிமா இல்லாத நாட்களே இல்லை.

வார இறுதி நாட்களில் நான் எங்கள் வீட்டையடையும் பொழுதெல்லாம், வீட்டு வாசலில் பூர்ணிமாவின் கேலிகிண்டல் கேள்விகள் இல்லாத நாளில்லை.

3 மணிநேர மின் வெட்டு, வீடு கொளுத்தும் கூட்டம், வெள்ளை பாஸ்பரஸ் வீச்சு, போர் செட்டில் காப்பர் வயர் திருட்டு என்று எனது குழந்தை பருவ நாட்களில் பரபரப்புடன் மெல்ல பல செய்திகள் இருந்தன, அச்செய்திகளை வீடு வீடாக ஒலிபரப்பி நடமாடும் அக்கால ரேடியோ அவள்.

பூர்ணிமா ஒரு அசாத்திய புத்திசாலி, அவளது ஒளிர்ந்த எதிர்காலம் அவளது செயல்களிலே தெரிந்தது. யாரையும் பகைக்காமல் நடந்து கொள்வாள்.

குழந்தைகள் என்றாலே அப்படித்தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவள், அதிலும் ஒரு படி மேன்மை பெற்றிருந்தாள்.

ஒரு வெள்ளை சட்டை நீளப் பாவாடையென வார இறுதி நாட்களில் பள்ளிச் சீருடை கூட மாறாமல். ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஏறி இறங்கி உரிமையுடன் உலா வருவாள்.

இப்படி சிரிப்பின் அடையாளைமாய் இருந்தவள் பூர்ணிமா.

அஜெய்சன்னை பற்றி கூறினேன் அல்லவா, கிட்ட தட்ட அதே கால கட்டம்.

பூர்ணிமா ஊரில் உள்ள சிறுவர்கள் புடைசூழ, ஆற்றங்கரைக்கு குளிக்க சென்றாள்.

குளித்து கரையேறிய சிறுவர்கள் திரும்பி பார்த்த பொழுது பூர்ணிமா அங்கில்லை.

வந்து தகவல் பெரியவர்களிடம் செல்வதற்குள், முடிக்கொண்டான் அவளை ஆட்கொண்டான் போலும்.

அந்த நொடிகளின் விளக்கத்தை ஊரில் உள்ள ஒவ்வொருவரும் கூறிய பொழுதெல்லாம் அந்த பயங்கரத்தை, நான் உணர்ந்தது போதும்.

அதை இங்கு பதிவிட்டு, வருங்காலத்தில் அதே நொடிகளை நினைத்து என் சட்டையை நனைக்க நான் விரும்பவில்லை.

பொதுவாகவே மரணங்கள் என்னை பெரிதாக பாதித்தது உண்டு.

எத்துனை உயிர் பலி தான், இந்த முடிக்கொண்டான் கொண்டிருக்கும்.

தீரா பசியுடைய அந்த ஆற்றையும் ஆற்றங்கரைப் படித்துறையையும் இப்பொழுது பார்த்தாலும், பூர்ணிமாதான் நினைவில் வருவாள்.

உங்கள் குழந்தைகள் உங்கள் சொத்து, அவற்றின் நடவடிக்கைகளை கண்காணிப்பதை விட வேறு என்ன வேலை இருந்து விட போகிறது ?

இருந்தாலும் விபத்து என்பது எதிர்பார்த்து நடப்பதல்ல.

அது நடக்கும் ! அதை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பது தான் நம்மை ஐந்தறிவு கொண்ட மிருகங்களிடம் இருந்து வேற்றுமை படுத்துகிறது.

ஒரு குழந்தையின் இழப்பு ஒரு குடும்பத்தை எப்படி மாற்றும் என்று சிறுவயதிலே விதி காட்டிவிட்டது.

எனது அம்னீசியா காலத்தில் பூர்ணிமாவை நினைவில் கொள்ள இது போதும்.

தூங்கட்டும் அம்மு !

ஆனால் நீங்கள் உங்கள் இராஜராஜனுக்கு இப்பொழுதும் ஒரு hi message அனுப்பலாம்,
அதில் நாம் எள்ளளவும் குறைய போவதில்லை.

எண்ணற்ற இராஜராஜன்களுக்கு ஏதோ என்னால் முடிந்தது.



 


 

திங்கள், 15 ஜூன், 2020

மரணத்துக்கு அப்பால் - அதிகாரம் 4 - வினித் மணிமாறனின் தற்கொலை


மரணத்துக்கு அப்பால்

பூவரசன், அஜய்சன், ராஜ விக்னேஷ் என்று பலரையும் எழுப்பிவிட்டோம்.

அவர்களின் நினைவலைகள் என் சோகத்தை கிளரியதோடு, உங்களின் வாழ்வில் நீங்கள் கடந்து வந்து பல அஜய்சன்களை, சில பூவரசன்களை நியாபக படுத்தி இருக்கலாம்.

அதற்கு நீங்கள் நன்றி சொல்லாவிட்டாலும், மன்னிப்பு கேட்கும் கடமை என்னிடம் உண்டு.

மனிதர்களை வாழும் பொழுது மதிக்காத நாம், இறந்த பின் ஒரு மாணிக்கத்தை இழந்து விட்டோம், ஒரு பேரிழப்பு என்றெல்லாம் அவர்களை புகழ்ந்து எழுத்துகிறோமே தவிர்த்து அவர்களை தூற்றுவதில்லை.

மரணத்துக்கு அவ்வளவு சக்தி உள்ளது என்றால், மனிதத்திற்கு எவ்வளவு பலம் இருத்தல் வேண்டும் ?

ஒருவன் சாலை விபத்தில் இறந்தால், அந்த உயிர்பரிக்கும் காரணியை தூற்றி, ஏசி பேச நாம் எடுத்துக்கொள்ளும் சிரத்தை கூட அவ்வுயிரை காப்பாற்ற எடுத்துக்கொள்வதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இவரு அப்டியே புடிங்கிட்டாரு, அப்டின்னு நீங்க நினைக்குறது என் காதுல விழுது, இருந்தாலும் நாம் செய்யும் தவறுகளை யாரேனும் குத்தி காட்டும் இடத்தில் இப்படி யோசிக்க தான் மனிதனின் மூளை கட்டமைக்க பட்டுள்ளது.

அது படைப்பின் பிழை, அதை மீறி நாம் என்ன செய்கிறோம்; என்பது தான் நம்மை உயர்குணம் படைத்தவனாக்குகிறது.

உயர்குணம் படைத்தவனாய் திகழ்ந்து என்ன சாதிக்க போகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம், உயர்குணங்கள் என்பது நியூட்டனின் மூன்றாம் விதி போன்றது.

நீங்கள் ஊன்றி புதைக்கும் விதைகள், எதிர்விசைக் கொண்டு மரங்களாகின்றன, உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் நிழல் தர.

அது போல நற்குணங்களின் பலன்கள் அறுவடை செய்ய நாட்கள் ஆகலாம்.

காத்திருப்பவன் தூக்கம் மறக்கிறான், மறுப்பவன் தூக்கில் இறக்கிறான்.

இதை ஒரு புறம் தள்ளி, நம் அதிகாரம் நான்கை அடைவோம்.

அதிகாரம் - 4 தற்கொலை

ஒரு கொலை செய்ய நமக்கு தேவையான மன தைரியத்தை விட, தற்கொலைக்கு அதீத தைரியம் தேவைப்படுகிறது.

எனது தற்கொலை வரலாற்றை சொல்கிறேன் சற்று கேட்டு இளைப்பாருங்கள்.

நான் மூன்றாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன், அப்பொழுதெல்லாம் நான் பெரிய படிப்பு புலியல்ல, இப்பொழுதை போலவே ஒரு மந்தக் குழந்தை தான்.

இந்தி என்ற ஒரு எமன் இருந்தான். அப்பாடமும் அவ்வளவு எளிதாய் எனக்கு காட்சியளிக்க வில்லை, ஆனாலும் கட்டாய பாடமாதலால் படிக்க தள்ளப்பட்டேன்.

முயன்றும் முடியவில்லை.., பதினான்கு மதிப்பெண்களோடு, என் வாழ்வின் முதல் தோல்வியை ருசி கொண்டேன்.

பள்ளியில் சற்று விட்டுப்பிடித்துருக்கலாம், அவர்களோ என் தாய் தந்தையை அழைத்து வரச் சொன்னார்கள்.

எங்கப்பா அடிச்சாறுன்னா அஞ்சு விரலும் முதுவுல பதிஞ்சு இருக்கும்.

90'ஸ் கிட்ஸின் முதுகு; அக்கால பெற்றோர்களின் பிங்கர் பிரிண்ட் சென்சார். இது என் பிள்ளை என்று அடையாள முத்திரை வைத்து, எதிர் வீட்டு பையனின் படிப்பாற்றலை கம்பாரிசன் என்ற pattern லாக் வைத்தும் எங்களை secure செய்து திருத்தி வளர்க்க நினைத்திருந்தார்கள்.

அந்த மனுஷன்கிட்ட போயி நான் 14 மார்க்கு வாங்கிருக்கிறேன்னு சொல்ல, அவரு என்ன புரட்டி எடுக்க.... எதுக்கு இதெல்லாம் அப்டின்னு சொல்லிட்டு, ஒரு படபடப்போட வீட்டுக்கு வந்தேன்.

எங்கப்பா அம்மா ரெண்டு பேரும் வேலைக்கு போயிடுவாங்க இரவு 8 மணிக்கு தான் வருவாங்க.

வார நாட்கள்ல நான் என் மாமா வீட்ல இருந்து, மாமா பொண்ணோட ஸ்கூல் போயிடுவேன், வார இறுதியில் எங்க வீட்டுக்கு போவேன்.

வீட்டு சாவி, உமாராணி அக்கா வீட்ல இருக்கும் இல்லனா, சித்ரா அக்கா வீட்ல இருக்கும்; வாங்கிக்கிட்டு உள்ள போயி அலமு, ஸ்ரீ குட்டி, தாரணின்னு மாடு; கன்னுக்குட்டி கூட விளையாடுவேன்.

அப்படி விளையாடுற மனநிலைல அன்னைக்கி, நான் இல்லை...

எனக்குள்ள இருந்த விஞ்ஞானி எட்டி பார்த்தான் : உயரம் எட்டாதுன்னு சொல்லி, ஒரு சின்ன துணிய எடுத்து கழுத்தை இறுக்கி கட்டிக்கிட்டா நாம செத்து போயிடுவோம்; அது ஒக்காந்துகிட்டே தூக்கு மாட்டிக்கிற மாதிரினு சொல்லி, அதை முயற்சி செஞ்சு பார்த்தேன்.

ஒரு 5 நொடியில கண்ணு இருட்ட ஆரம்பிச்சுது... லேசான தல வலி ஆரம்பிச்சுது, மண்டை மரத்து போயி அன்னைக்கு தான் உணர்ந்தேன்.

என்னால முடியல கண்ணுல தண்ணி வந்துட்டு.. அதோட அப்டியே அந்த துணிய தூக்கி எரிஞ்சுட்டு தூங்கிட்டேன்.

சாவுறது அவ்ளோ கஷ்டமா ?

அப்போ தற்கொலை செஞ்சுக்குறவங்களுக்கு, இந்தி பரிட்சைய விட பெரிய பிரச்சனை இருக்கு அப்டின்னு வளரந்த பின்ன தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

சனி ஞாயிறு கழிஞ்சுது, திங்ககிழமை பள்ளிக்கூடம் போனப்போ, என் பெற்றோரை அழைச்சுட்டு வர சொன்னதை டீச்சரும் மறந்துட்டாங்க.

அன்னைக்கு நெனச்சேன், அடடா இதுக்கு போயி சாவ பாத்தோமேன்னு...

தற்கொலை எண்ணம் யாருக்கு வேணும்னாலும் வரலாம்...

எனக்கு இப்படி நடந்தது என்ன பெத்தவங்களுக்கே தெரியாது, இதை படிச்சு தெரிஞ்சுகட்டும் 😂

நாம எந்த விஷயத்த நினைச்சு தற்கொலை பண்ணிக்கிறோமோ அந்த விஷயம் நிலையானது கிடையாது.

உலகம் ரொம்ப சின்னது, நாம எதை இழந்தாலும் அதுக்கு ஒரு மாற்று பொருள் உண்டு, உயிரை தவிர .

ஆண் அழக்கூடாது என்பார்கள்,
ஆனால் மனிதன் அழவேண்டும், தவரிழைத்து அதை கடந்து வர.

நீங்கள் வாழ்வில் பிரச்சனையாக நினைத்த எத்தனையோ விடயங்கள், காலம் கழிக்க ஒன்னுமில்லாமல் போயிருக்கும், அது போல தான் இதுவும் என்று நம்புங்கள்.

இதுவும் கடந்து போகும் என்பது வாட்சப் ஸ்டேட்டஸ் அல்ல " ஒரு வரி மருந்து "

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தால், தயவு கூர்ந்து உங்கள் நண்பர்களை அழைத்து மனம் விட்டு பேசுங்கள், அப்படியும் முடியவில்லை என்றால் ஒரு சனி ஞாயிறு போகட்டும், திங்கள் கிழமை நீங்களே மறந்து விடிவீர்கள்.

அதையும் மீறி உங்களுக்கு ஒரு தீர்வு வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள் 104 அல்லது 8220829080.

உங்களுக்காக வினித் மணிமாறன்...

கடைசீயாக நான் சொல்ல வர்ரது என்னானா " பிதுக்குன பேஸ்ட்டை மறுபடி அந்த டியூப் குள்ள நுழைக்க முடியாது " ஒரு தடவ பிதுக்குனா அம்புட்டு தான் பாத்துக்கோங்க !

என்னை இந்தியில் பிராத்மிக் பரீட்சையில் பாஸ் பண்ண வைக்க, தேர்வு அறையில் translation பிரிவில் 40 மார்க்கு வாங்க உதவிய சோபனா அக்காவுக்கு நன்றி ! 

சோபனா எங்கிருந்தாலும் வாழ்க !

மரணத்துக்கு அப்பால் அதிகாரம் 3 - ராஜ விக்னேஷ் - கடக்கும் மனிதர்கள்


மரணத்துக்கு அப்பால்

அஜய்சன்னின் நினைவுகளை கிளறி இந்த மந்தநிலை நாட்களில், என் நண்பர்கள் மட்டுமின்றி பல வாசகர்களின்   கவனத்தையும் சாவின் பக்கம் சற்று திருப்பி, நாம் இறந்தால் நம்மை சுற்றி உள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சற்று சிந்திக்க வைத்ததாக நம்புகிறேன்.

அதிலும் சிலர், வாழ்ந்த அந்த நாட்களிற்கு அழைத்து சென்றமைக்கு நன்றி என்று கூறினார்கள். (இது அந்த நாட்களில், என்னோடு பயணப் பட்டவர்களுக்கு மட்டுமே தெறியும்)

எழுப்பியமைக்கு மன்னித்துக்கொள் அஜய்சா !

நீ துயில் கொள் !

நாம் அடுத்த அதிகாரத்தை நோக்கி செல்வோம்.

இந்த இழப்பு சொந்தமானது தான் ஆனால், சற்று தூரம் சென்றது.

2011, வித்யா விகாஸ் கல்வி நிறுவனம், கந்தர்வக்கோட்டை:

தனது புதிய கிளையில் ஆள் சேர்க்கும் பணியில் தீவரமாய் இருந்தது.

வித்யா விகாஸ் மாதிரியான கல்வி நிறுவனங்கள் பணமாக்க எடுத்துக்கொள்ளும் மூலப் பொருள் நடுத்தர குடும்பங்களின் பேராசை.

என் மகன் ஒரு மருத்துவன் ஆவான், என் மகன் ஒரு விஞ்ஞானி ஆவான் என்ற பேராசை நடுத்தர குடும்ப தலைவர்களை இக்கல்வி நிறுவனங்களை நோக்கி ஓட செய்தது என்று சொல்லலாம்.

இக்காலத்தில் அதே மூலப்பொருளை தான் பைஜூஸ் போன்ற நிறுவனங்கள் கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறது.

அந்த கொள்ளை ஒரு பக்கம் இருக்கட்டும்.

நாம் நமது வழிக்கு போவோம்.

அந்த நிறுவனம் தஞ்சையை அடுத்த கந்தர்வக்கோட்டையில் தனது கிளையை திறக்க ;

பத்தாம் வகுப்பு முடித்த மகனை பெற்ற நடுத்தர குடும்பத்தின் தலைவரான என் தந்தைக்கும் அந்த பேராசை இருந்ததில் எள்ளளவும் தவறில்லை.

என்னையும் விடுதிக்குள் தள்ளினார்கள்.

வாழ்க்கை கடினமாக இருந்தது என்று பொய் சொல்லி என்னுடை இன்றைய நிலைக்கு அதை காரணப்படுத்தாமல் உண்மையை சொல்கிறேன்.

எனக்கு அந்த விடுதி நாட்கள் புதிதாக இருந்தது.

எங்கள் வகுப்பின் நரிகூட்டம் தனக்கென ஒரு அறையை தேர்ந்தெடுத்து அதில் அடைக்கலம் புகுந்தது.

நாங்களோ எங்களுக்கென்று சில விதிமுறைகளோடு எங்கள் அறையை தேர்வு செய்து அதில் ஒதுங்கலானோம்.

இம்மாதிரியான விடுதியில் படிக்கும் பொழுது இரு வகையில் உள்ளவர்கள் மட்டும் சிரித்துக்கொண்டே இருக்கலாம்.

ஒன்று தங்கள் நிலத்தை விற்று இங்கு படிக்க அனுப்பாத பெற்றோர்களின் பிள்ளைகள், இரண்டு விடுதி வாழ்க்கையை வாழ கற்று கொண்ட பிள்ளைகள்.

நான் இரண்டிலும் இல்லை ஆனால் இவ்விருவகைகளை சேர்ந்தவர்களை பார்த்த பொழுதெல்லாம் அப்படி இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்றே சொல்லலாம்.

நடுத்தரத்தை சேர்ந்த எல்லோருக்கும் இந்த ஆசை இருந்திருக்கும் ஆனால், அந்த ஆசையை துறந்து மீள முயன்றவர்களில் கடைசீ மனிதன் நான்.

இதையெல்லாம் ஒரு பக்கம் வைப்போம்.

இந்த கதைகளை ஏன் இங்கு அளக்கிறேன் ?

காரணம் உண்டு..

இதுவரை நான் கூறி வந்த கதையில் நான் கண்டு பொறாமை கொள்ளும் அளவில் மகிழ்ந்து இருந்தவன் தான் ராஜ விக்னேஷ்.

அவன் சென்ற இடமெல்லாம் சிரிப்பொலி.

எந்த ஆசிரியருக்கும் அவனை பிடிக்காது ஆனாலும் அவன் மகிழ்ந்திருந்தான்.

அவனை சுற்றி ஒரு கூட்டம் சிரித்துக்கொண்டே இருக்கும்.

ஏதேனும் பிரச்சனை என்றால் அங்கே இவன் பெயர் அடிப்படாமல் இருக்காது.

அவனுக்கென்று ஒரு தனி வழி இருந்தது,
லோ ஹிப் பேண்ட், பிட் ஆரம்ஸ், ஆப்பிள் கட் சட்டை, சுருண்ட முடி, நெருகிய புருவம், கையில் காப்பு என்று அவனுக்கென்று ஒரு தனி ஸ்டைல் இருந்தது.

அவனை சுற்றிய கூட்டம் வேறு எங்கும் ஒட்டாது. அவ்வாறாக அவர்கள் தனியொரு கூட்டமாய் இருந்தார்கள்.

கைப்பந்து, கால்பந்து, ஹாக்கி என விளையாட்டு வீரர்களின் ஒருமித்த கூட்டம் அது.

தெரிந்தோ தெரியாமலோ பத்தாம் வகுப்பில், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மதிப்பெண் எடுத்ததால், படிக்கிற பசங்கன்னு என்னையலாம் பிரிச்சு வச்சுட்டாங்க.

ஒருபக்கம்;  வாராவாரம் பாக்க வர்றப்போ நல்லா படிக்கணும் தம்பினு; என் வாழ்க்கைல என்னோட படிப்புல தலையே நுழைக்காத பெத்தவங்க சொன்ன அறிவுரைகள் கசந்தாலும், அதுக்குத்தானே இங்க வந்துருக்கோம்னு படிச்சதுண்டு.

அப்டி படிக்கைல ராஜ விக்னேஷோட கூட்டம் சந்தோசமா சுத்திட்டு இருந்ததை பாத்தப்போ, யாருக்கு தான் பொறாமை இருக்காது ?

13 அப்டிங்குற எண் பேய் சம்மந்தமான எண் அப்டின்னு சொல்லி, 13 ஆவது அறைய தேடி புடிச்சு அவங்களோட அறையா எடுத்துகிட்டாங்க.

ஓஜா போர்டு, பிறந்தநாள் கொண்டாட்டம்னு அவங்க செஞ்ச எல்லா காரியத்துலயும் சந்தோசம்.

கருணாநிதி,ராஜசூர்யா, நௌஃபல், துறை, மானா(மதன்), அப்டின்னு ஒரு சிலரோட பெயர் கூட ஞாபகம் இருக்கு.

அவங்களோட சந்தோசம் எப்பேர்ப்பட்ட சந்தோசம்ன்னு எங்களோட கூட்டத்துக்கு உணர்த்தவே மானா(மதன்) எங்க அறையில வந்து சேந்தான்.

பொறாமை பொங்கிக்கிட்டு போச்சு.

இப்படி சந்தோசமான ஒரு கூட்டம் உங்களோட பள்ளியிலயும் இருந்திருக்கலாம்.

அப்புறம் எல்லாரும் அங்க ஸ்கூல் எல்லாம் முடிஞ்சு போயி ஆளுக்கு ஒரு பக்கமா செதரி போனாலும்.

90s கிட்ஸான எங்களுக்கு இன்ஸ்டாகிராம், முகபுத்தகம்னு நிறைய விஷயங்கள் எங்களை தொடர்புல வச்சுருந்துச்சு.

இப்படியே நான் கும்பகோணத்துல ஒரு கல்லூரியில கரை ஒதுங்கிட்டேன்.

ஆனாலும் ராஜ விக்னேஷோட சந்தோசம் பெருகிக்கிட்டே தான் போச்சு, KTM பைக், லாங் ஹேர்னு ஹீரோ மாதிரி அவனோட ஸ்டைல் மாறினாலும் அவனோட சந்தோசத்தை மட்டும் பரப்புற குணம் கொஞ்சம் கூட மாறல.

அவனோட இன்ஸ்டாகிராம்ல அவனோட சந்தோஷம் பல மடங்கா பிரதிபலிச்சுட்டு இருந்துச்சு.

ஆனா, ஒரு நாள் விடியற்காலைல; யாரோ ஒரு கல்லூரி நண்பர் போட்ட வாட்சப் ஸ்டேட்டஸ்ல என் கல்லூரியை சேர்ந்த பைய்யனோட சேர்ந்து ராஜவிக்னேஷ் படமும் இருந்துச்சு..

கண்ணீர் அஞ்சலினு போட்டு ....

என்ன காரணம் அப்டின்னு கேட்டா, விடியற்காலை திருச்சி நெடுஞ்சாலைல நடந்த விபத்துல இவங்க இரண்டு பேரும் இறந்து போயிட்டாங்க அப்டின்னு தெரிய வந்துச்சு...

அதிர்ச்சியா இருந்துச்சி; உலகம் சின்னதுன்னு தோணுச்சு, எங்கேயோ நான் கடந்து வந்த ராஜ விக்னேஷ் ஏன் என்னோட கல்லூரியில உள்ள ஜூனியரோட போகனும், சிரிப்புக்கு பெயர் போனவன் சாகைல என்ன நெனச்சுறுப்பான் ; அப்டின்னு எண்ண ஓட்டம் அங்க இங்க ஓட்டுனாலும்;

இந்தமனுஷன் வாழ்க்க முழுக்க சிரிக்க வேண்டியதைதான் இவ்ளோ நாள் சிரிச்சு தீர்த்தானோ அப்டின்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.

வேகம் வேகம்னு வேகத்தை மட்டுமே நினைச்சி வாழ்ந்த ராஜ விக்னேஷ் வேகமா போயிட்டான்...

எல்லார்க்கும் முன்னாடி.

ராஜ விக்னேஷ் ஓட நினைவுல அவனோட அதே இன்ஸ்டாகிராம் பெயரில சின்ன மாற்றத்தோட தன்னோட பெயரை மாத்தி வச்சுருக்கான் ஒரு ஸ்கூல் ஜூனியர்.

இப்போவும் ராஜ விக்னேஷ் நினைவு தினத்துல அவனோட முகபுத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம்ல நினைவலைகள் நிக்காம அடிச்சுட்டு இருக்கு.

அவன் பிறந்தநாளை கொண்டாடவும் செய்றாங்க.

இறந்தும் வாழ்கிறான் ராஜ விக்னேஷ் !

இறந்த பின்பு அவனது அருமை தெறிந்த பலரின் இன்ஸ்டாகிராம் follow request பெண்டிங்கில் தான் உள்ளது.

எனது facebook friend request போலவே !

இருக்கும் பொழுதே ஒரு மனிதனின் அருமையை புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் அருகிலும் ஒரு ராஜ விக்னேஷ் இருக்கலாம் ! 


வெள்ளி, 12 ஜூன், 2020

மரணத்துக்கு அப்பால் - அதிகாரம் 2 - அஜய்சன் - என் நண்பன்

மரணத்துக்கு அப்பால்

சென்ற அதிகாரத்தில் பூவரசனை பற்றி பாத்திருந்தோம். 

பூவரசனுடன் பணிபுரிந்த பலருக்கும் அப்பதிவை அனுப்பி இருந்தேன்.

ஏமாற்றம் தான் மிச்சம் !!!

ஆனாலும் ஏமாற்றத்திற்கு நடுவில், உண்மையில் பூவரசனின் மீது நம்பிக்கை வைத்த சிலர் (அவர்கள் பூவரசனின் மறைவிற்கு நீலிகண்ணிர் வடிக்காதவர்கள் என்பது குறிப்பிட தக்கது) பூவரசனின் நினைவுகளை பகிர்ந்தார்கள்.

குறிப்பாக நண்பர் ஜீவா கூறியது, அவனிற்கு எல்லாம் கிடைத்தது, அனைத்திலும் வென்றான் ஆனால் வாழ்விடம் தோற்றான் என்பது அது !

நீ உறங்கிடு பூவரசா !

பூவரசனை விடுவோம்,

என் வாழ்வில் முதல் இழப்பை அதிகாரம் இரண்டிற்கு தள்ளுகிறேன்.

இதில் உண்மைத்துவம் அதிகமாகவே இருக்கும் ! என் கண்ணீர் என் பேனா மையை கரைக்கவும் முயலலாம் ! 

இப்பதிவு உங்கள் மனதை உருக்கினால் மன்னிக்கவும் !

அதிகாரம் 2 - அஜய்சன் - என் நண்பன் 

2006, அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி, நன்னிலம்.

ஆங்கில வழி கல்விக்கான ஆறாம் வகுப்பு மாணவர் செயற்கை முடிந்து, முதல்நாள் பள்ளியும் திறந்தாயிற்று. 

எந்த காரணத்தாலோ தெரியவில்லை என்னை வகுப்பின் மாணவர் தலைவனாக தேர்வு செய்தார் அறிவியல் ஆசிரியை மாரியம்மாள்.

மாணவர் தலைவர் என்றால் பேசும் மாணவர்களின் பெயர்களை கரும்பலகையில் எழுதி, டிக் அடிப்பது, பிறகு ஓவர் டாக்கிங், வெரி வெரி டாக்கிங் என்று எனக்கான சட்டங்களை நானே எழுதி, பிறகு நன்னடத்தையின் பேரில் பரோல் வழங்கி அவர்களின் பேரில் உள்ள குற்றங்களை குறைப்பதாக கூறி, ஆறாம் வகுப்பிலேயே நான் ஒரு நீதிபதியாக விளங்கினேன் என்றால் பாருங்களேன் !

அவ்வாறு நான் எழுதிய பெயர்களைக்கூட, ஆல்பபெட்டிக் அடிப்படையில் எழுத வைக்கும் வல்லமை வாய்ந்தவன் அஜய்சன்.

எப்படி இருப்பான் அஜய்சன், சற்று விளக்குகிறேன் கற்பனை செயது கொள்ளுங்கள் !

வகுப்பில் அனைவரையும் உயர அடிப்படையில் நிறுத்தி, பின் அதன் அடிப்படையில் அனைவரையும் பெஞ்சுல அமர செய்வார்கள்.

அஜய்சன் தான் இருப்பதிலேயே குட்டை.

பள்ளி வழிப்பாட்டுக்கு அனைவரையும் வரிசையில் அழைத்து செல்வது மாணவ தலைவனான என் வேலை. எனக்கு அடுத்தபடியாக சிரித்து கொண்டே கையை பின்னாடி கட்டி கொண்டு நின்ற அஜய்சன் இன்றும் என் நினைவில் உள்ளான்.

ஒரு கருங்காப்பி பேண்ட், வெள்ளை கருங்காப்பி கட்டம் போட்ட சட்டை, அவனது பேண்ட்டை அவனது ஒல்லிக்குச்சி உடம்பில் பிடித்து வைத்து கொள்ள ஒரு பெல்ட், என்று மாப்ள சும்மா கில்லி மாதிரி இருப்பான்.

சேட்டையின் மறு உருவம் அவன், பேசினால் பேசிக்கொண்டே இருப்பான். பட்டை பெயர்கள் பலவுண்டு.

அப்போதெல்லாம் குரு டுட்டோரியலில் டூயூஷன் படித்தோம் !

நான், ராஜேஷ், அஜய்சன் என்று மூவரும் ஒன்றாகத்தான் சுற்றினோம்.

அஜய்சன் அம்மாவின் வளர்ப்பு, அம்மா அதட்டினால் பேண்ட் நனையாதது மட்டும் தான் குறை.

தினமும் பள்ளி முடிந்த பிறகு ராஜேஷ் எங்கள் வீட்டுக்கு வந்து, நான் உடை மாற்றிய பிறகு, அஜய் வீட்டுக்கு செல்வோம். அஜய் அம்மா ஆளுக்கு ரெண்டு பிஸ்கட் குடுபாங்க. என் தலைவன் திட்டு வாங்கிட்டே களம்புவான்.

90ஸ் கிட்ஸ்களின் முதல் எதிரி கம்பாரிசன்.
அவ்வலையில் சிக்காதவர்கள் இல்லை நாங்கள்.

பிறகு மூவரும் சைக்கிளை எடுத்துக்கிட்டு டியூஷன் போவோம்.

என் மீது என்ன பகையோ தெரியாது, ஒரு முறை என் சட்டை பையில்,
"நான் அவளை விரும்புகிறேன், அவளை தான் திருமணம் செய்து கொள்வேன்" என்று என் பள்ளியில் படித்த பெண்ணை குறிப்பிட்டு அஜய் மொட்டை கடுதாசி ஒன்றை எழுதி வைக்க, அதை துணி துவைக்கும் பொழுது என் சித்தி எடுத்து படிக்க, என் அம்மாவும் சித்தியும் துணியோடு சேர்த்து என்னையும் துவைத்து எடுத்தார்கள். 

இது அஜய்சன்னின் வால் தனத்திற்கு ஒரு எடுத்து காட்டு.

ட்ரைலர்கள் பல இருந்தாலும் மெயின் பிச்சர் கீழ இருக்குறது தான்.

அவன் ஒரு முறை சலூனில் அவன் விருப்பத்திற்கு முடி வெட்டினான் என்று, வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து அவன் தலையை கரையான் கரைப்பது போல கரைத்து பள்ளிக்கூடத்திற்கு அவன் அம்மா அனுப்ப, அன்று பள்ளியில் ஏதோ விழிப்புணர்வு பேரணி நடத்த, நன்னிலத்தின் வீதிகளில் அவனை பரிகசித்து நாங்கள் சிரித்த நாளின் நினைவுகள் பழைய செய்தி தாளின் துணுக்கு செய்தியாக அவ்வப்போது நினைவில் வரும்.

இதையெல்லாம் தாண்டி அஜய்சன் இருந்தால் அங்கு சிரிப்பு கண்டிப்பாக இருக்கும்.

குரு டுட்டோரியளில், பீஸ் வாங்க வரும் தனலட்சுமி மிஸ் முதல் பாடம் நடத்திய துர்கா மிஸ் வரை அவனிடம் வம்பு வளர்க்காத ஆளே இல்லை !

தலைவன் காலையில் 7 மணி டியூஷன்க்கு 7.30 க்கு வந்து பெரிய சார் கிட்ட பெருச்சாலியா துடிக்கிறது இன்னமும் நியாபகம் இருக்கு.

2006 முதல் 2008 வரை என் வாழ்வின் வசந்தகாலம் அப்டின்னு நான் இப்போ சொல்றேன்னா, அதுல அஜய்சன்னோட பங்கு ரொம்ப அதிகம்.

என்னோட ஒன்பதாம் வகுப்பு படிப்பை கும்பகோணத்துல வேற பள்ளிக்கூடத்தில படிச்சேன்.

அங்கே எல்லாம் புதுசா இருந்துச்சு, கிணத்து தவளை கடலை பாத்த மாதிரின்னு சொல்லலாம்.

ஏதோ தத்தி தாவி வாழ்க்கை போயிட்டு இருந்துச்சு, ஒரு அரையாண்டு பரீட்சைக்கு முன்னாடி, அந்த அவலமான செய்தி எனக்கு வந்துச்சு.

யாரோடையோ ஆத்துல குளிக்க போன அஜய்சன் சட்டர்ஸ்ல மாட்டி இறந்துட்டானும், அவன் உடம்பை சொந்த ஊரான சென்னைக்கு எடுத்துட்டு போயிட்டங்கன்னும்.

அந்த செய்தி எனக்கு பழைய செய்தியான பிறகு கூட எட்டி இருக்கலாம். 

ஆனா அதை கேட்டு அதிர்ந்து போயிட்டேன்.

ஆனாலும் இன்னக்கி வரைக்கும் அஞ்சலினு ஒரு பெயர் கேட்டா எனக்கு அஜய்சன் தான் ஞாபகம் வருவான்.

அது எனக்கும் அஜய்சன்னுக்கும் உள்ள இரகசியம்.

சில விபத்துகள் வாழ்க்கையில பெரிய இழப்புகளை கொண்டுவந்து தினிச்சிடும்.

எனக்கு அப்படி ஒரு இழப்பு தான், நான் இழந்த என்னோட முதல் நண்பன் - அஜய்சன்.

எனக்கு கிடைக்காத பாக்கியம், அஜய்சன்னோட ஒரு போட்டோ... 

இப்படி அஜய்சன்னோட நினைவுகளை எழுதி வச்சு எனக்கு வருங்காலத்துல அம்னீசியா வந்தாலும் நினைவுல இருக்க வழி வகுத்துக்கிறேன்.

அமைதி கொள் அஜய்சன் !

வியாழன், 11 ஜூன், 2020

மரணத்துக்கு அப்பால் - அதிகாரம் ஒன்று - பூவரசன்





பாவி; சூத்திரக்காரண்; துரோகி; கொலைக்காரன்; கொடியவன் என்றெல்லாம் உங்களால் பழிசுமத்தப்பட்ட ஒருவனை ஒரு நொடியில் மாகானாகவும், வீரனாகவும் மாற்றி அவன் செய்த வீர செயல்களை ; அவன் செய்த நல்ல காரியங்களை மட்டும் உங்கள் நினைவில் ஏற்றி - எந்த நாவினால் அவனை தூற்றினீர்களோ அதே நாவினால் அவனை பாராட்ட செய்யும் திறம் வாய்ந்தது !

இதற்குமேல் நீங்கள் படிக்க போகும் ஒவ்வொரு கதையும் பாகமும் என் கண்ணோட்டத்தில் மரணத்தால் உயர்ந்தவர்கள் அல்லது மாற்றம் கொண்டவர்கள் அல்லது மரணத்திற்கு அப்பால் வாழ்பவர்களை பற்றிய சிறு துணுக்குகள் ஆகும்.

உங்கள் பார்வையில் அவை மாறுபடலாம்,
என் பார்வை தவறானதாகவும் தோன்றலாம்.

அதோன்றால்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல...

நான் எடுக்கும் ஆயுதம் தன் பயணத்தில் தனிமனித சுதந்திரத்தோடு ஒன்றாக பயணிக்கட்டும்.

அதிகாரம் 1 : பூவரசன்

கல்லூரி படிப்பின் பின், பலப்பேர் காலூறி; நாமும் சொந்த காலில் நின்றுவிட மாட்டோமா என்ற கனவெல்லாம் இங்கேதான் நிறைவேற போகிறது என்ற நிம்மதியோடு, ஒரு தொழிற்சாலையில் என் பணியை தொடங்கினேன்.

அது ஒரு இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.

அங்கு நான் எதிர்கால வாகனங்களின் தயாரிப்பு துறையில் பொறியாளனாக பணிசெயதேன்,

அதே துறையில் இயந்திர இயக்குனராக பணி செய்த இளைஞர் தான் பூவரசன்.

பூவரசன் ஒரு சுதந்திர இளைஞன், கவலையற்ற மனிதன், எங்களின் பார்வையில் அவரது கரு முகத்தில் வெள்ளை முத்துக்களை உதிர்காத நாளில்லை.

பூவரசனை பொறுத்த மட்டும், சிரிப்பு ஒன்றே போதும். எனக்கு இன்றும் நினைவில் வருவது அவரது சிரிப்பு ஒன்றுதான்.

அந்த தொழிற்சாலையில், பூவரசனின் உயர் அதிகாரிகளின் பார்வையில், அவர் ஒரு விளையாட்டு இளைஞன், கண்பாணிப்பற்ற இடத்தில் அவர் ஒரு ஊதாரி.

தங்களின் தனி முன்னேற்றத்திற்காக எண்ணற்ற இளைஞர்களை செம்மறி ஆடுகளாக மாற்ற நினைக்கும் அதிகாரிகளுக்கு என்றும் பூவரசனின் சிரிப்பு வெறுப்பின் ஊற்றாக தான் இருந்திருக்கும்.

ஒரு வருடம் ஓயாது அவர்களுக்காக உழைத்த பிறகு அந்த தொழிற்சாலையில் ஓரு பெருங்குழப்பம் நிகழ்ந்து வர; தன்னை நிரந்தர பணியமர்த்த வேண்டி எல்லோரும் தினம் தினம் போராடி கொண்டிருக்க, படித்தும் அங்கு ஒருவருடம் ஓயாது உழைத்தும், என் வேலை அவர்களின் சதுரங்க ஆட்டத்தில் சிதறிப்போக; அத்தொழிற்சாலையிலிருந்து நான் விடைபெறும் நாள் வர.

கடைசீயாக ஒரு நாள், என் வருகை பதிவேட்டில் என் கடைசி கையப்பம் இடும் பொழுது என் பேனா முனையில் இருட்டிட்ட நிழல் பூவரசனின் நிழல்.

அப்பொழுதும் அதே சிரிப்பு, சிரிப்போடு பூவரசன் அங்கிருந்த பாதுகாவலரிடம் சொல்லி கொண்டிருந்தார்.

அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், வீட்டில் சொல்லாமல் அவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டிருந்தார் என்றும், வேலை நிரந்தரம் ஆன பின்பு வீட்டில் சொல்லி சம்மதம் கேட்க போவதாகவும் சொல்லி கொண்டிருந்தார்.

எங்கு போனாலும் தன் தராதரம் பாக்கும் நரிகூட்ட உழைப்பாளிகள், தன் உயர் அதிகாரிகளுக்கு சொம்படித்து கொண்டும்; பாதுகாவலர்களை மதிக்காமல் அவர்கள் இவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்களா என்று ஓர கண்ணில் ஓட்டம் விடும் கூட்டம்.

ஆனால் பூவரசன் இரண்டாம் ரகம், யாரை பார்த்தாலும் சிரிப்பை சிதற விடுவார்.

பார்க்க தமிழ் சினிமாக்களில் வரும் வில்லன் போல காட்சியளித்தாலும் பேசியவர்களுக்கு தான் தெரியும், அவர் ஒரு கதாநாயகன் என்று.

அன்று கடைசீயாக பூவரசனை பார்த்த பின்பு, முகபுத்தகத்திலும் நான் பூவரசனை பார்த்ததுண்டு, தலையில் ஓரு குரங்கு குல்லா, பல்சர் பைக்கில் வீட்டில் இருந்து கீழே இறங்க அப்படியே படமாக்கி தன் அடையாளமாக வைத்திருப்பார்.

பார்த்தவுடன் அதிர வைக்கும் வகையில் இருக்கும், ஏன் என்றால் அவரை சீருடையிலே பார்த்து பழகிய கண்களுக்கு அது ஒரு விருந்து.

இவ்வாறாக இருந்த ஒரு நபரை பற்றி எந்த வித செய்தியும் இல்லாமல் போக, 

ஒரு ஆண்டிற்கு பிறகு, எங்கோ தத்தித்தாவி வேறு ஒரு தொழிற்சாலையின் பணியில் நான் இருக்க.

ஒரு ஞாயிறு காலை, வாட்சப் ஸ்டேட்டஸ் இரயில்களில் பயணித்த பொழுது,

பலரும் நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து, ஜானி டெப் க்கு பிறந்தநாள் வாழ்த்து என்று பக்கத்து வீட்டு காரனின் பிறந்தநாளுக்கு அவனுக்கு வாழ்த்து சொல்லுவது போல விட்ட இரயில்களுக்கு நடுவில், என்னை அதிர வைத்த இரயில் பெட்டி பூவரசனின் மரணத்துக்காக அவரது சபநண்பர்கள் விட்டிருந்த இரயில்கள்.

ஆம், பூவரசன் இறந்து விட்டார்.
அவரது அதே பல்சரில் பயணித்த பொழுது விபத்துக்குள்ளானாராம்.

அமைதி கொள்ளட்டும் பூவரசினின் ஆன்மா.

எனக்கு பூவரசன் யாரென்று தெரியாது. தெரிந்ததெல்லாம் அவரது சிரிப்பு ஒன்றுதான், அது என்னை இவ்வளவு எழுத செய்யும் வல்லமை வாய்ந்தது.

பூவரசன் இருக்கும் வரை அவரை தூற்றிய பலரும் அவரது மரணத்திற்கு இரங்கல் செய்தியை, ஈரக்கைக்குட்டைகளோடு சுத்திக்கொண்டிருந்தார்கள்.

அவர்களில் எத்தனை பேர், பூவரசனின் சிரிப்பை வெறுதிருப்பார்கள் ?

அவர்களில் எத்தனை பேர்களுக்கு பூவரசனை நினைவிருக்கும் ?

இல்லை அவர்களில் வாழ்வில் பூவரசன் ஒரு வழிப்போக்கனாக இருக்க, நான் மட்டும் பூவரசனின் நினைவுகளோடு ஊஞ்சலாடுகிறேனா ?

மே 17, பூவரசனின் பிறந்தநாள் - அவர் இறந்தாலும் அவருடைய முகபுத்தகத்தில் பிறந்தநாள் வாழ்த்துகள் குமிய தவறவில்லை; அவரது உண்மையான நண்பர்களிடமிருந்து.

சிலரிடம் இருந்து மிஸ் யூ மச்சான் என்றும் சில போஸ்டர்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

இருக்கட்டும் பூவரசா, உன்னிடம் நான் வெறுப்பவர்கள் முன் எப்படி சிரித்து வாழ வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.