மரணத்துக்கு அப்பால்
பூவரசன், அஜய்சன், ராஜ விக்னேஷ் என்று பலரையும் எழுப்பிவிட்டோம்.
அவர்களின் நினைவலைகள் என் சோகத்தை கிளரியதோடு, உங்களின் வாழ்வில் நீங்கள் கடந்து வந்து பல அஜய்சன்களை, சில பூவரசன்களை நியாபக படுத்தி இருக்கலாம்.
அதற்கு நீங்கள் நன்றி சொல்லாவிட்டாலும், மன்னிப்பு கேட்கும் கடமை என்னிடம் உண்டு.
மனிதர்களை வாழும் பொழுது மதிக்காத நாம், இறந்த பின் ஒரு மாணிக்கத்தை இழந்து விட்டோம், ஒரு பேரிழப்பு என்றெல்லாம் அவர்களை புகழ்ந்து எழுத்துகிறோமே தவிர்த்து அவர்களை தூற்றுவதில்லை.
மரணத்துக்கு அவ்வளவு சக்தி உள்ளது என்றால், மனிதத்திற்கு எவ்வளவு பலம் இருத்தல் வேண்டும் ?
ஒருவன் சாலை விபத்தில் இறந்தால், அந்த உயிர்பரிக்கும் காரணியை தூற்றி, ஏசி பேச நாம் எடுத்துக்கொள்ளும் சிரத்தை கூட அவ்வுயிரை காப்பாற்ற எடுத்துக்கொள்வதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இவரு அப்டியே புடிங்கிட்டாரு, அப்டின்னு நீங்க நினைக்குறது என் காதுல விழுது, இருந்தாலும் நாம் செய்யும் தவறுகளை யாரேனும் குத்தி காட்டும் இடத்தில் இப்படி யோசிக்க தான் மனிதனின் மூளை கட்டமைக்க பட்டுள்ளது.
அது படைப்பின் பிழை, அதை மீறி நாம் என்ன செய்கிறோம்; என்பது தான் நம்மை உயர்குணம் படைத்தவனாக்குகிறது.
உயர்குணம் படைத்தவனாய் திகழ்ந்து என்ன சாதிக்க போகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம், உயர்குணங்கள் என்பது நியூட்டனின் மூன்றாம் விதி போன்றது.
நீங்கள் ஊன்றி புதைக்கும் விதைகள், எதிர்விசைக் கொண்டு மரங்களாகின்றன, உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் நிழல் தர.
அது போல நற்குணங்களின் பலன்கள் அறுவடை செய்ய நாட்கள் ஆகலாம்.
காத்திருப்பவன் தூக்கம் மறக்கிறான், மறுப்பவன் தூக்கில் இறக்கிறான்.
இதை ஒரு புறம் தள்ளி, நம் அதிகாரம் நான்கை அடைவோம்.
அதிகாரம் - 4 தற்கொலை
ஒரு கொலை செய்ய நமக்கு தேவையான மன தைரியத்தை விட, தற்கொலைக்கு அதீத தைரியம் தேவைப்படுகிறது.
எனது தற்கொலை வரலாற்றை சொல்கிறேன் சற்று கேட்டு இளைப்பாருங்கள்.
நான் மூன்றாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன், அப்பொழுதெல்லாம் நான் பெரிய படிப்பு புலியல்ல, இப்பொழுதை போலவே ஒரு மந்தக் குழந்தை தான்.
இந்தி என்ற ஒரு எமன் இருந்தான். அப்பாடமும் அவ்வளவு எளிதாய் எனக்கு காட்சியளிக்க வில்லை, ஆனாலும் கட்டாய பாடமாதலால் படிக்க தள்ளப்பட்டேன்.
முயன்றும் முடியவில்லை.., பதினான்கு மதிப்பெண்களோடு, என் வாழ்வின் முதல் தோல்வியை ருசி கொண்டேன்.
பள்ளியில் சற்று விட்டுப்பிடித்துருக்கலாம், அவர்களோ என் தாய் தந்தையை அழைத்து வரச் சொன்னார்கள்.
எங்கப்பா அடிச்சாறுன்னா அஞ்சு விரலும் முதுவுல பதிஞ்சு இருக்கும்.
90'ஸ் கிட்ஸின் முதுகு; அக்கால பெற்றோர்களின் பிங்கர் பிரிண்ட் சென்சார். இது என் பிள்ளை என்று அடையாள முத்திரை வைத்து, எதிர் வீட்டு பையனின் படிப்பாற்றலை கம்பாரிசன் என்ற pattern லாக் வைத்தும் எங்களை secure செய்து திருத்தி வளர்க்க நினைத்திருந்தார்கள்.
அந்த மனுஷன்கிட்ட போயி நான் 14 மார்க்கு வாங்கிருக்கிறேன்னு சொல்ல, அவரு என்ன புரட்டி எடுக்க.... எதுக்கு இதெல்லாம் அப்டின்னு சொல்லிட்டு, ஒரு படபடப்போட வீட்டுக்கு வந்தேன்.
எங்கப்பா அம்மா ரெண்டு பேரும் வேலைக்கு போயிடுவாங்க இரவு 8 மணிக்கு தான் வருவாங்க.
வார நாட்கள்ல நான் என் மாமா வீட்ல இருந்து, மாமா பொண்ணோட ஸ்கூல் போயிடுவேன், வார இறுதியில் எங்க வீட்டுக்கு போவேன்.
வீட்டு சாவி, உமாராணி அக்கா வீட்ல இருக்கும் இல்லனா, சித்ரா அக்கா வீட்ல இருக்கும்; வாங்கிக்கிட்டு உள்ள போயி அலமு, ஸ்ரீ குட்டி, தாரணின்னு மாடு; கன்னுக்குட்டி கூட விளையாடுவேன்.
அப்படி விளையாடுற மனநிலைல அன்னைக்கி, நான் இல்லை...
எனக்குள்ள இருந்த விஞ்ஞானி எட்டி பார்த்தான் : உயரம் எட்டாதுன்னு சொல்லி, ஒரு சின்ன துணிய எடுத்து கழுத்தை இறுக்கி கட்டிக்கிட்டா நாம செத்து போயிடுவோம்; அது ஒக்காந்துகிட்டே தூக்கு மாட்டிக்கிற மாதிரினு சொல்லி, அதை முயற்சி செஞ்சு பார்த்தேன்.
ஒரு 5 நொடியில கண்ணு இருட்ட ஆரம்பிச்சுது... லேசான தல வலி ஆரம்பிச்சுது, மண்டை மரத்து போயி அன்னைக்கு தான் உணர்ந்தேன்.
என்னால முடியல கண்ணுல தண்ணி வந்துட்டு.. அதோட அப்டியே அந்த துணிய தூக்கி எரிஞ்சுட்டு தூங்கிட்டேன்.
சாவுறது அவ்ளோ கஷ்டமா ?
அப்போ தற்கொலை செஞ்சுக்குறவங்களுக்கு, இந்தி பரிட்சைய விட பெரிய பிரச்சனை இருக்கு அப்டின்னு வளரந்த பின்ன தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
சனி ஞாயிறு கழிஞ்சுது, திங்ககிழமை பள்ளிக்கூடம் போனப்போ, என் பெற்றோரை அழைச்சுட்டு வர சொன்னதை டீச்சரும் மறந்துட்டாங்க.
அன்னைக்கு நெனச்சேன், அடடா இதுக்கு போயி சாவ பாத்தோமேன்னு...
தற்கொலை எண்ணம் யாருக்கு வேணும்னாலும் வரலாம்...
எனக்கு இப்படி நடந்தது என்ன பெத்தவங்களுக்கே தெரியாது, இதை படிச்சு தெரிஞ்சுகட்டும் 😂
நாம எந்த விஷயத்த நினைச்சு தற்கொலை பண்ணிக்கிறோமோ அந்த விஷயம் நிலையானது கிடையாது.
உலகம் ரொம்ப சின்னது, நாம எதை இழந்தாலும் அதுக்கு ஒரு மாற்று பொருள் உண்டு, உயிரை தவிர .
ஆண் அழக்கூடாது என்பார்கள்,
ஆனால் மனிதன் அழவேண்டும், தவரிழைத்து அதை கடந்து வர.
நீங்கள் வாழ்வில் பிரச்சனையாக நினைத்த எத்தனையோ விடயங்கள், காலம் கழிக்க ஒன்னுமில்லாமல் போயிருக்கும், அது போல தான் இதுவும் என்று நம்புங்கள்.
இதுவும் கடந்து போகும் என்பது வாட்சப் ஸ்டேட்டஸ் அல்ல " ஒரு வரி மருந்து "
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தால், தயவு கூர்ந்து உங்கள் நண்பர்களை அழைத்து மனம் விட்டு பேசுங்கள், அப்படியும் முடியவில்லை என்றால் ஒரு சனி ஞாயிறு போகட்டும், திங்கள் கிழமை நீங்களே மறந்து விடிவீர்கள்.
அதையும் மீறி உங்களுக்கு ஒரு தீர்வு வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள் 104 அல்லது 8220829080.
உங்களுக்காக வினித் மணிமாறன்...
கடைசீயாக நான் சொல்ல வர்ரது என்னானா " பிதுக்குன பேஸ்ட்டை மறுபடி அந்த டியூப் குள்ள நுழைக்க முடியாது " ஒரு தடவ பிதுக்குனா அம்புட்டு தான் பாத்துக்கோங்க !
என்னை இந்தியில் பிராத்மிக் பரீட்சையில் பாஸ் பண்ண வைக்க, தேர்வு அறையில் translation பிரிவில் 40 மார்க்கு வாங்க உதவிய சோபனா அக்காவுக்கு நன்றி !
சோபனா எங்கிருந்தாலும் வாழ்க !
அருமை சகோதரரே,கதைக்கு முன்பு கூறிய கருத்துக்கள் உண்மை. ஆனால் சற்று சிறியதாக கூறி கதைக்கு சென்று இருக்கலாம்
பதிலளிநீக்குநன்றி
Ha ha haa.....
பதிலளிநீக்கு