திங்கள், 15 ஜூன், 2020

மரணத்துக்கு அப்பால் அதிகாரம் 3 - ராஜ விக்னேஷ் - கடக்கும் மனிதர்கள்


மரணத்துக்கு அப்பால்

அஜய்சன்னின் நினைவுகளை கிளறி இந்த மந்தநிலை நாட்களில், என் நண்பர்கள் மட்டுமின்றி பல வாசகர்களின்   கவனத்தையும் சாவின் பக்கம் சற்று திருப்பி, நாம் இறந்தால் நம்மை சுற்றி உள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சற்று சிந்திக்க வைத்ததாக நம்புகிறேன்.

அதிலும் சிலர், வாழ்ந்த அந்த நாட்களிற்கு அழைத்து சென்றமைக்கு நன்றி என்று கூறினார்கள். (இது அந்த நாட்களில், என்னோடு பயணப் பட்டவர்களுக்கு மட்டுமே தெறியும்)

எழுப்பியமைக்கு மன்னித்துக்கொள் அஜய்சா !

நீ துயில் கொள் !

நாம் அடுத்த அதிகாரத்தை நோக்கி செல்வோம்.

இந்த இழப்பு சொந்தமானது தான் ஆனால், சற்று தூரம் சென்றது.

2011, வித்யா விகாஸ் கல்வி நிறுவனம், கந்தர்வக்கோட்டை:

தனது புதிய கிளையில் ஆள் சேர்க்கும் பணியில் தீவரமாய் இருந்தது.

வித்யா விகாஸ் மாதிரியான கல்வி நிறுவனங்கள் பணமாக்க எடுத்துக்கொள்ளும் மூலப் பொருள் நடுத்தர குடும்பங்களின் பேராசை.

என் மகன் ஒரு மருத்துவன் ஆவான், என் மகன் ஒரு விஞ்ஞானி ஆவான் என்ற பேராசை நடுத்தர குடும்ப தலைவர்களை இக்கல்வி நிறுவனங்களை நோக்கி ஓட செய்தது என்று சொல்லலாம்.

இக்காலத்தில் அதே மூலப்பொருளை தான் பைஜூஸ் போன்ற நிறுவனங்கள் கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறது.

அந்த கொள்ளை ஒரு பக்கம் இருக்கட்டும்.

நாம் நமது வழிக்கு போவோம்.

அந்த நிறுவனம் தஞ்சையை அடுத்த கந்தர்வக்கோட்டையில் தனது கிளையை திறக்க ;

பத்தாம் வகுப்பு முடித்த மகனை பெற்ற நடுத்தர குடும்பத்தின் தலைவரான என் தந்தைக்கும் அந்த பேராசை இருந்ததில் எள்ளளவும் தவறில்லை.

என்னையும் விடுதிக்குள் தள்ளினார்கள்.

வாழ்க்கை கடினமாக இருந்தது என்று பொய் சொல்லி என்னுடை இன்றைய நிலைக்கு அதை காரணப்படுத்தாமல் உண்மையை சொல்கிறேன்.

எனக்கு அந்த விடுதி நாட்கள் புதிதாக இருந்தது.

எங்கள் வகுப்பின் நரிகூட்டம் தனக்கென ஒரு அறையை தேர்ந்தெடுத்து அதில் அடைக்கலம் புகுந்தது.

நாங்களோ எங்களுக்கென்று சில விதிமுறைகளோடு எங்கள் அறையை தேர்வு செய்து அதில் ஒதுங்கலானோம்.

இம்மாதிரியான விடுதியில் படிக்கும் பொழுது இரு வகையில் உள்ளவர்கள் மட்டும் சிரித்துக்கொண்டே இருக்கலாம்.

ஒன்று தங்கள் நிலத்தை விற்று இங்கு படிக்க அனுப்பாத பெற்றோர்களின் பிள்ளைகள், இரண்டு விடுதி வாழ்க்கையை வாழ கற்று கொண்ட பிள்ளைகள்.

நான் இரண்டிலும் இல்லை ஆனால் இவ்விருவகைகளை சேர்ந்தவர்களை பார்த்த பொழுதெல்லாம் அப்படி இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்றே சொல்லலாம்.

நடுத்தரத்தை சேர்ந்த எல்லோருக்கும் இந்த ஆசை இருந்திருக்கும் ஆனால், அந்த ஆசையை துறந்து மீள முயன்றவர்களில் கடைசீ மனிதன் நான்.

இதையெல்லாம் ஒரு பக்கம் வைப்போம்.

இந்த கதைகளை ஏன் இங்கு அளக்கிறேன் ?

காரணம் உண்டு..

இதுவரை நான் கூறி வந்த கதையில் நான் கண்டு பொறாமை கொள்ளும் அளவில் மகிழ்ந்து இருந்தவன் தான் ராஜ விக்னேஷ்.

அவன் சென்ற இடமெல்லாம் சிரிப்பொலி.

எந்த ஆசிரியருக்கும் அவனை பிடிக்காது ஆனாலும் அவன் மகிழ்ந்திருந்தான்.

அவனை சுற்றி ஒரு கூட்டம் சிரித்துக்கொண்டே இருக்கும்.

ஏதேனும் பிரச்சனை என்றால் அங்கே இவன் பெயர் அடிப்படாமல் இருக்காது.

அவனுக்கென்று ஒரு தனி வழி இருந்தது,
லோ ஹிப் பேண்ட், பிட் ஆரம்ஸ், ஆப்பிள் கட் சட்டை, சுருண்ட முடி, நெருகிய புருவம், கையில் காப்பு என்று அவனுக்கென்று ஒரு தனி ஸ்டைல் இருந்தது.

அவனை சுற்றிய கூட்டம் வேறு எங்கும் ஒட்டாது. அவ்வாறாக அவர்கள் தனியொரு கூட்டமாய் இருந்தார்கள்.

கைப்பந்து, கால்பந்து, ஹாக்கி என விளையாட்டு வீரர்களின் ஒருமித்த கூட்டம் அது.

தெரிந்தோ தெரியாமலோ பத்தாம் வகுப்பில், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மதிப்பெண் எடுத்ததால், படிக்கிற பசங்கன்னு என்னையலாம் பிரிச்சு வச்சுட்டாங்க.

ஒருபக்கம்;  வாராவாரம் பாக்க வர்றப்போ நல்லா படிக்கணும் தம்பினு; என் வாழ்க்கைல என்னோட படிப்புல தலையே நுழைக்காத பெத்தவங்க சொன்ன அறிவுரைகள் கசந்தாலும், அதுக்குத்தானே இங்க வந்துருக்கோம்னு படிச்சதுண்டு.

அப்டி படிக்கைல ராஜ விக்னேஷோட கூட்டம் சந்தோசமா சுத்திட்டு இருந்ததை பாத்தப்போ, யாருக்கு தான் பொறாமை இருக்காது ?

13 அப்டிங்குற எண் பேய் சம்மந்தமான எண் அப்டின்னு சொல்லி, 13 ஆவது அறைய தேடி புடிச்சு அவங்களோட அறையா எடுத்துகிட்டாங்க.

ஓஜா போர்டு, பிறந்தநாள் கொண்டாட்டம்னு அவங்க செஞ்ச எல்லா காரியத்துலயும் சந்தோசம்.

கருணாநிதி,ராஜசூர்யா, நௌஃபல், துறை, மானா(மதன்), அப்டின்னு ஒரு சிலரோட பெயர் கூட ஞாபகம் இருக்கு.

அவங்களோட சந்தோசம் எப்பேர்ப்பட்ட சந்தோசம்ன்னு எங்களோட கூட்டத்துக்கு உணர்த்தவே மானா(மதன்) எங்க அறையில வந்து சேந்தான்.

பொறாமை பொங்கிக்கிட்டு போச்சு.

இப்படி சந்தோசமான ஒரு கூட்டம் உங்களோட பள்ளியிலயும் இருந்திருக்கலாம்.

அப்புறம் எல்லாரும் அங்க ஸ்கூல் எல்லாம் முடிஞ்சு போயி ஆளுக்கு ஒரு பக்கமா செதரி போனாலும்.

90s கிட்ஸான எங்களுக்கு இன்ஸ்டாகிராம், முகபுத்தகம்னு நிறைய விஷயங்கள் எங்களை தொடர்புல வச்சுருந்துச்சு.

இப்படியே நான் கும்பகோணத்துல ஒரு கல்லூரியில கரை ஒதுங்கிட்டேன்.

ஆனாலும் ராஜ விக்னேஷோட சந்தோசம் பெருகிக்கிட்டே தான் போச்சு, KTM பைக், லாங் ஹேர்னு ஹீரோ மாதிரி அவனோட ஸ்டைல் மாறினாலும் அவனோட சந்தோசத்தை மட்டும் பரப்புற குணம் கொஞ்சம் கூட மாறல.

அவனோட இன்ஸ்டாகிராம்ல அவனோட சந்தோஷம் பல மடங்கா பிரதிபலிச்சுட்டு இருந்துச்சு.

ஆனா, ஒரு நாள் விடியற்காலைல; யாரோ ஒரு கல்லூரி நண்பர் போட்ட வாட்சப் ஸ்டேட்டஸ்ல என் கல்லூரியை சேர்ந்த பைய்யனோட சேர்ந்து ராஜவிக்னேஷ் படமும் இருந்துச்சு..

கண்ணீர் அஞ்சலினு போட்டு ....

என்ன காரணம் அப்டின்னு கேட்டா, விடியற்காலை திருச்சி நெடுஞ்சாலைல நடந்த விபத்துல இவங்க இரண்டு பேரும் இறந்து போயிட்டாங்க அப்டின்னு தெரிய வந்துச்சு...

அதிர்ச்சியா இருந்துச்சி; உலகம் சின்னதுன்னு தோணுச்சு, எங்கேயோ நான் கடந்து வந்த ராஜ விக்னேஷ் ஏன் என்னோட கல்லூரியில உள்ள ஜூனியரோட போகனும், சிரிப்புக்கு பெயர் போனவன் சாகைல என்ன நெனச்சுறுப்பான் ; அப்டின்னு எண்ண ஓட்டம் அங்க இங்க ஓட்டுனாலும்;

இந்தமனுஷன் வாழ்க்க முழுக்க சிரிக்க வேண்டியதைதான் இவ்ளோ நாள் சிரிச்சு தீர்த்தானோ அப்டின்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.

வேகம் வேகம்னு வேகத்தை மட்டுமே நினைச்சி வாழ்ந்த ராஜ விக்னேஷ் வேகமா போயிட்டான்...

எல்லார்க்கும் முன்னாடி.

ராஜ விக்னேஷ் ஓட நினைவுல அவனோட அதே இன்ஸ்டாகிராம் பெயரில சின்ன மாற்றத்தோட தன்னோட பெயரை மாத்தி வச்சுருக்கான் ஒரு ஸ்கூல் ஜூனியர்.

இப்போவும் ராஜ விக்னேஷ் நினைவு தினத்துல அவனோட முகபுத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம்ல நினைவலைகள் நிக்காம அடிச்சுட்டு இருக்கு.

அவன் பிறந்தநாளை கொண்டாடவும் செய்றாங்க.

இறந்தும் வாழ்கிறான் ராஜ விக்னேஷ் !

இறந்த பின்பு அவனது அருமை தெறிந்த பலரின் இன்ஸ்டாகிராம் follow request பெண்டிங்கில் தான் உள்ளது.

எனது facebook friend request போலவே !

இருக்கும் பொழுதே ஒரு மனிதனின் அருமையை புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் அருகிலும் ஒரு ராஜ விக்னேஷ் இருக்கலாம் ! 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக