நாம் இதுவரை கடந்த காலம் மிக அழகானது ! நிகழ்கால வாழ்வில் நாம் நம்பிக்கையற்று நிற்கும் பொழுதெல்லாம் அந்நினைவுகள் நம்மை ஆரத்தழுவி அமைதிநிலையில் பரவசிக்க தவறுவதில்லை.
ஒரு இழப்பின் முடிவுரையில் தான் மற்றொரு பிறப்பின் முன்னுரை இருக்கிறது என்று நம்புங்கள்.
நிகழ்காலத்தில் நல்ல நபர்களை நண்பர்களாய் சம்பாதியுங்கள். நீங்கள் கடக்கும் கடுமையான பாதைகளின் மாறுபட்ட பரிமாணங்களை அறிந்தவர்கள் அவர்கள் !
அப்படியொரு நண்பன் அல்லது தோழி தான் என்னை எழுத தூண்டிக்கொண்டிருக்கிறார்.
உங்களை உங்களது வேட்கையோடு சேர்த்து ரசிக்கும் நண்பர்களை எந்தகாலத்திலும் கைவிடாதீர்கள் !
அவர் இந்த பதிவையும் படிக்கும் பச்சத்தில் .. நன்றி !
லதாவின் அழுகையை கண்ட ராமன் செய்வதறியாது நின்றான்.
பள்ளியில், உங்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவன் வரை வீட்டு பாடத்தை சரி பார்த்த ஆசிரியர், உங்களை நோக்கி வரும்பொழுது கடைசி மணி அடிப்பது போல, பல்லெட்டின் மணிச்சத்தம் கேட்க, தப்பித்தோம் என்று நினைத்தான் ராம்.
லதாவின் விம்மலும் நின்றது.
அடிடா புடிடா என்று எல்லோரும் ஓடி தலைமறைவு ஆனார்கள்.
இப்படிதான் உங்கம்மா காதலை கட் அண்ட் ரைட்டா சொன்னா; என்று ராமன் சிறு ஓய்வு கொடுத்தார் !
அடேங்கப்பா ! ஒரு வாரணம் ஆயிரம் part 2 வே ஓடிருக்கும் போலயே என்று வேலன் பூரிப்படைய, போதும் போதும் உங்க பூரி கதயெல்லாம்; அதுக்கப்புரம் நான் தைரியமா மூஞ்சிக்கு முன்ன நின்னு, நான் உங்கள காதலகிக்கிறேன்னு காலேஜ் வாசல்ல சொன்னதெல்லாம் உங்கப்பாக்கு நியாபகம் வராது என்றாள் லதா.
அத எப்படி மறப்பேன் !
NDAல அந்த குளிர்காத்துல கதக்வாஸ்லா ஏரி (Khadakwasla Lake) கரையில, ஏன்டா இங்க வந்தோம்ன்னு, நான் கண்ண கசக்குன ஒவ்வொரு நாளும் ; தோத்துடுவேன்னு துவண்டு போயி நின்னப்போலாம்; என்னய்ய தூக்கி நிப்பாட்டுனதே அந்த நிமிஷங்களோட நினைவலைகள்தாண்டி என்றார் ராமன்.
(உங்களிடம் யாரேனும் "எனக்கு உன்னை பிடித்திருக்கிறது" அல்லது "உன்னுடன் கழித்த நொடிகள் வாழ்வில் மறக்கமுடியாதது" என்றெல்லாம் கூறி இருந்தால் அந்த நிமிடங்களை நினைத்து பாருங்கள் ! அந்த நொடிகள் அதீத அழகானவை ! அது போன்ற நினைவுகள் நம்மை நமது கடினமான நாட்களில் "நம்மையும் சிலருக்கு பிடிக்கும், அவர்கள் அருகாமையில் நமக்கு இந்த வாழ்வை பிடிக்கும் " என்று நினைக்க செய்து தேற்றும். அப்படி ஒருவரை நீங்கள் இதுவரை பார்க்கவில்லை என்றால், காத்திருங்கள் காலம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையோடு)
கல்யாணம் ஆகி இத்தன வருஷத்துல இதெல்லாம் சொல்லவே இல்ல, இப்போ என்ன திடீர்னு மணிரத்தினம் படம் கணக்கா சொல்றீங்க, என்று லதா வம்பிழுக்க.
நீங்க சொல்லுங்கப்பா என்றான் வேலன், பூஸ்ட்ட குடிச்சுக்கிட்டே .
“தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே, தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே” என்பது போல ராமன் இனம்புரியாத இன்பமுடன் அந்த நொடிகளுக்குள் பிரயானமானார்.
லதா காதல சொல்லி 8 மாசத்துல நான் அந்த ஊர விட்டு போயிட்டேன். அப்புறம் 2 வருஷம் விடுதி வாழ்க்கை, படிப்புன்னு ரொம்ப வேகமா ஓடிடுச்சி.
2 வருஷதுக்கு அப்பறம், எங்க டியூஷன் அக்காக்கு கல்யாணம், நான் National Defence academy க்கு entrance எழுதிட்டு, SSB Interview க்கு wait பண்ணிட்டு இருந்தேன்.
அப்போ அந்த கல்யாணத்துக்கு போயிட்டு, நைட் ஒரு 7.30 மணிக்கு எங்கவீட்டுக்கு போலாம்னு மாமா வீட்டுல இருந்து கிளம்பினேன்.
ரெண்டு தெரு கடந்தாச்சு, யாரோ பின்னாடியே வர்ற மாதிரி இருந்துச்சு, தெருவோட இரண்டு முனையிலயும் light எரிய தெரு மட்டும் இருட்டா இருந்துச்சி.
அங்கிருந்த கல்லூரியின் வாயிலை கடந்தப்போ திரும்பி பாத்தேன், தூரத்துல யாரோ சைக்கிள்ள வர்ற மாதிரி இருந்துச்சி; சரி கிட்ட வரட்டும் உதவி கேட்டு போயிடலாம்ன்னு நெனச்சுக்கிட்டு, நடந்தேன்.
அடுத்த 20ஆவது நொடி, ராம் நில்லு உன் கிட்ட பேசனும்ன்னு மூச்சி வாங்க ஒரு கீச்சு குரல்;
யாருடான்னு இருட்டுக்கு கண்ண பழக்கி பார்த்தா, லதா !
அந்த 3 வருஷத்துல லதாவ பாக்க கூட இல்ல, அவளோட குரல்ல அப்படி ஒரு மாற்றம், ஆள்
பார்க்க அடையாளமே தெரியாம அந்த இருட்டுலயும் அப்படி ஒரு அழகு.
15 நொடி அமைதிக்கு பிறகு, பேச தொடங்கினாள்,
எப்படி இருக்க, சாயுங்காலமை வந்துருப்பேன், அத்தை வீட்ல நேரம் ஆகிட்டு; நீ
எப்படியும் பாரதி அக்கா கல்யாணதுக்கு வருவேன்னு
மனசுல பட்டுச்சி.
நெனச்ச மாதிரியே நீயும் வந்துட்ட !
நீ இல்லாம இந்த 3 வருஷம் இங்க இருக்கவே புடிக்கல,..
இதுக்கப்புறம் என்ன பண்ண போற ?
இங்க எங்கயாவது காலேஜ்ல படிப்பியா இல்ல, வெளியூர் போக போறியா ?
நீ தான் எல்லாம் முடிவு பண்ணி வச்சருப்பியே, என்று கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினாள்.
நான் NDA Clear பண்ணி Defence போக போறேன், அப்டின்னு சொன்ன உடனே ஒரு அமைதி.
Written Exams நல்லா எழுதிருக்கேன், எப்புடியும் உள்ள போயிடுவேன்.
நீ என்ன பண்ண போற என்றான் ராமன்.
நான் 12th board exams நல்லா எழுதிருக்கேன், எப்படியாச்சும், Merit ல Medical Seat வாங்கிடுவேன் என்றாள்.
சூப்பர்ப்பா என்றார் ராமன்.
அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு அமைதி நிலவ, அவளே அந்த அமைதியை உடைத்தாள்.
சேரி, நான் சொல்லவந்ததை சொல்லிடறேன், என்று சொன்ன அடுத்த நொடி தூரத்து தெருவிளக்கின் பிரதிபளிப்பு அவளது கண் எடுத்துக் காட்ட, அவள் அவளது வார்த்தைகளை உதிர்க்க தொடங்கினாள்.
ராம், நீ போன அப்புறம் தான் உன்னோட அருமை எனக்கு நல்லா தெரிஞ்சுது, உன்னய எனக்கு எவ்ளோ புடிக்கும்னு தெறிஞ்சுகிட்டேன்.
இந்த 3 வருஷத்துல நீ என்னய்ய நெனச்சியா இல்லையான்னு எனக்கு தெரியாது, ஆனா நான் தினமும் ஏதாச்சும் ஒரு வழில உன்ன நெனச்சுடுவேன்.
இப்பவும் சொல்றேன் ராம், நான் உன்ன காதலிக்கிறேன்.
நீ என்ன காதலிக்க வேண்டாம், கல்யாணம் பன்னிக்கோ போதும் என்று சொல்லி முடிக்க, கண்ணில் தெரிந்த பிரதிபளிப்பு, துளிகளாக பெருகி உதிர தொடங்கியது ! (இதை கேட்டவுடன் வேலனுக்கு தென்றலிடம் தனது காதலை கூறியவுடன், அவளது கண்ணில் வந்த கண்ணீர் துளிகள் நினைவில் வந்தது - மயிர் கூச்சமுர தனது கைகளை தடவிக்கொண்டான்)
அப்பொழுது BULLET வரவில்லை, ராம் பதிலலித்தே நகர வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளபட்டான் !
மீண்டும் ஒரு அமைதி நிலவ, இம்முறை ராம் அதை உடைக்க முன்வந்தான்.
ஹே ! கண்ண தொட ! என்ன கொஞ்சம் பாரு..
Board Exam முடிஞ்சா எல்லாம் முடிஞ்சுடுச்சுன்னு நினைக்க கூடாது லதா, வாழ்க்கையே இங்கதான் தொடங்குது.
கனவு கண்டா மட்டும் பத்தாது , அதை சாதிக்க ஒரு வெறி வேணும்.
மீண்டும் கண் கலங்க தொடங்கியது ...
கண்ண தொட மொதல்ல, எனக்கு பொண்ணுங்க அழுதாலே புடிக்காது.
இப்போதைக்கு உன்னோட கணவ நோக்கி ஓடு., அத அடைஞ்ச அப்புறம் திரும்பி பாரு; அப்போயும் நான் மட்டும் தான் நின்னு, நானும் அப்போ ஒரு நல்ல நிலமைல இருந்தா எல்லாம் நடக்கும்.
பொண்ணுங்கள பறக்க சொல்ற உலகத்துல, நீ நடக்க ஆச படுற !
இப்போ கூட, தவழ கஷ்ட படுற பொண்ணுங்க இருக்க தான் செய்யுராங்க.
நீ சொல்லணும்ன்னு நினைச்சத சொல்லிட்ட; இப்போ நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ, எனக்கு உன்ன புடிக்காதுன்னுலாம் பொய் சொல்ல மாட்டேன்.
இப்போ வந்து என்கிட்ட இவ்ளோ தைரியமா பேசுனால இதுவே எனக்கு புடிக்கும், உன்கிட்ட எந்த பையனும் வம்பு வச்சுக்க மாட்டான், நீ அவளோ தைரியமான பொண்ணு. ஆனா இது எல்லாமே லதா என்னோட தோழியா இருக்குறப்போ.
இதயெல்லாம் ஒரு ஓரமா ஒதுக்கி வச்சுட்டு படிச்சு முன்னேறுற வாழிய பாக்கலாம். எல்லாம் அதுக்கு அப்புறம் தானா நடக்கும், என்று ராம் சொல்லி முடிக்க ;
மீண்டும் ஒரு அமைதியை தவிர்த்து, பெண்களுக்கே உரிய தனி சொத்தான - உடமை உரிமம் பெற., இதுவரை கடைபிடித்த தயக்கத்தை உடைத்து, ராம் ஒண்ணு மட்டும் சொல்லு.,
நீ வேற யாரையாச்சும் லவ் பண்றியா !? இல்ல பண்ணுனியா !? என்றாள் லதா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக