மரணத்துக்கு அப்பால்
சென்ற அதிகாரத்தில், நான் எழுதிய எனது தற்கொலை பற்றிய வரிகள் எனக்கு சிரிப்பாக தோன்றினாலும், என்னை பெற்றவர்களை எப்படி பாதித்தது என்று அவர்களின் கருத்துகள் கூறின.
பலரும் பலவாறு அவர்களின் கருத்துகளை கூறினார்கள்.
காலையில், பல கருத்து குவியலின் நடுவில் விழித்தேன். அவையனைத்தும் பாராட்டு குவியல்கள். இதுவரை எழுதிய அனைத்திற்கும் ஒரு சேர கிடைத்த நன்மதிப்பு என்று கூட சொல்லலாம்.
எனது தற்கொலை ஒரு பக்கம் இருக்க, நாம் அதையும் கடந்து ஐந்தாம் அதிகாரத்தை எட்டி பார்ப்போம்.
என்னிடம் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள், எனது எழுத்துக்கள் எப்பொழுதும் உங்களுக்கு பிடித்த விதத்தில் இருந்திடாது.
என்னை வெறுக்க தொடங்குங்கள், என்னையும் என் எழுத்துக்களையும் வழக்கிடுங்கள்.
அது என் முன்னேற்றத்திற்கு வித்திடும்.
நா. முத்துக்குமார் போன்ற நல்ல கலைஞர்களை கொன்ற "பெருமை" என்ற போதை எனக்கு வேண்டாம்.
ஆனால் ஒன்று, என்னை முழுமையாக படித்து பிறகு வழக்கிடுங்கள்.
இதற்கு முன் எழுதிய நான்கு அதிகாரத்தை படித்தால் மட்டும், இதை தொடருங்கள்.
இந்த அதிகாரம், எனக்கானது - இதை எழுதவில்லை என்றால், இதுவரை எழுதிய அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்தான்.
அதிகாரம் - 5 - பூர்ணிமா
சிறுவயதுமுதல் நமக்கென ஓர் நண்பன் இருந்திருப்பான், வளர்த்த பின்போ,நமக்கு தெரிந்த அளவு அவன் உலகை தெரிந்திராத காரணத்தாலோ; வாழ்வின் ஓட்டதாலோ, ஸ்டேட்டஸ் என்ற வக்கற்ற வாழைமட்டையாலோ நாம் அந்த நண்பனை விட்டு விலகி வந்திருப்போம்.
எனக்கு அப்படி, எனது குழந்தை பருவத்தின் வார இறுதி நாட்களை நிரப்பிய பங்கு, இராஜராஜனுக்கு உண்டு.
நான் சிக்ஸ் அடிக்க கற்றுக்கொள்ள, நாள் முழுக்க புல் டாஸ் பந்துகளை வீசியவன்.
நான் சச்சின் ரசிகன், அவன் கங்குலி. நான் சென்னை சூப்பர் கிங்ஸ், அவன் கொல்கத்தா.
இப்படி ஒரு சில கருத்து வேறுபாடு இருந்தாலும் அவன் என் நண்பன்.
இந்த நேரம் உங்கள் வாழ்வின் இராஜராஜனை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
சந்தோச பட்டது போதும், இப்போ உங்க இராஜராஜனை மறந்துடுங்க !, நாம கதைக்குள்ள போவோம்...
அதே சம காலத்தில், இராஜராஜனற்ற நேரங்கள் கழிந்தது பூர்ணிமாவும் தொலைகாட்சியுமாய்.
பூர்ணிமா....
எனக்கு தெரிந்து பிறந்தவள், எங்களின் எதிர் வீட்டு பெண் குழந்தை.
ஏழெட்டு வயதுடைய வாயாடியாய், எல்லோரிடமும் வம்பிழுக்கும் பேச்சுடன்; எல்லாரிடமும் எளிமையாய் பழகும் குணமென; மரியாதை குடுக்க தெரியாத 90ஸ் கிட்ஸின் comparison பொருளாக திகழ்ந்தவள்.
90ஸ் கிட்ஸ்கள் டீனேஜை அடைந்த பொழுது; அடுத்த யுகமான 2k கிட்ஸ்ஸின் முதல் மாதிரி (sample) படைப்பு அவள்.
எப்பொழுதும் விளையாட்டு, விஷமம், கிறுத்துருவம், சுட்டித்தனம் என்று அந்த குழந்தையிடம் கண்ட சுறுசுறுப்பை வேறு எந்த குழந்தையிடமும் இதுவரை கண்டிலேன்.
பக்கத்துவீட்டில் உள்ள சித்ரா அக்காவை அத்தை என்று அன்போடு அழைக்கும் அவள், சித்ரா அக்காவின்கண் காரியமேற்ற; அப்புறம் உன்னோட மூன்று மகன்களில் யாரையும் கட்டிக்கிடமாட்டேன் என்று குறும்புடன் மிரட்டியது, இன்றும் நினைவில் உண்டு.
சுட்டி டிவி வருவதற்கு முற்காலம், சன் டிவி காட்ஜில்லா, ப்ரிடேட்டோர், சார்லீஸ் ஏஞ்சல்ஸ் என்று அசாத்திய டப்பிங்கில் அசத்தி கொண்டிருக்க, கேபிள் வயரில் ஊக்கு போட்டு அந்த திரைப்படங்களை எங்கள் கருப்பு வெள்ளை தொலைக்காட்சி புள்ளிபுள்ளியாக ஓட்டிய பொழுதெல்லாம், அதன் திரை பிரதிபளிப்பில் பூர்ணிமா இல்லாத நாட்களே இல்லை.
வார இறுதி நாட்களில் நான் எங்கள் வீட்டையடையும் பொழுதெல்லாம், வீட்டு வாசலில் பூர்ணிமாவின் கேலிகிண்டல் கேள்விகள் இல்லாத நாளில்லை.
3 மணிநேர மின் வெட்டு, வீடு கொளுத்தும் கூட்டம், வெள்ளை பாஸ்பரஸ் வீச்சு, போர் செட்டில் காப்பர் வயர் திருட்டு என்று எனது குழந்தை பருவ நாட்களில் பரபரப்புடன் மெல்ல பல செய்திகள் இருந்தன, அச்செய்திகளை வீடு வீடாக ஒலிபரப்பி நடமாடும் அக்கால ரேடியோ அவள்.
பூர்ணிமா ஒரு அசாத்திய புத்திசாலி, அவளது ஒளிர்ந்த எதிர்காலம் அவளது செயல்களிலே தெரிந்தது. யாரையும் பகைக்காமல் நடந்து கொள்வாள்.
குழந்தைகள் என்றாலே அப்படித்தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவள், அதிலும் ஒரு படி மேன்மை பெற்றிருந்தாள்.
ஒரு வெள்ளை சட்டை நீளப் பாவாடையென வார இறுதி நாட்களில் பள்ளிச் சீருடை கூட மாறாமல். ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஏறி இறங்கி உரிமையுடன் உலா வருவாள்.
இப்படி சிரிப்பின் அடையாளைமாய் இருந்தவள் பூர்ணிமா.
அஜெய்சன்னை பற்றி கூறினேன் அல்லவா, கிட்ட தட்ட அதே கால கட்டம்.
பூர்ணிமா ஊரில் உள்ள சிறுவர்கள் புடைசூழ, ஆற்றங்கரைக்கு குளிக்க சென்றாள்.
குளித்து கரையேறிய சிறுவர்கள் திரும்பி பார்த்த பொழுது பூர்ணிமா அங்கில்லை.
வந்து தகவல் பெரியவர்களிடம் செல்வதற்குள், முடிக்கொண்டான் அவளை ஆட்கொண்டான் போலும்.
அந்த நொடிகளின் விளக்கத்தை ஊரில் உள்ள ஒவ்வொருவரும் கூறிய பொழுதெல்லாம் அந்த பயங்கரத்தை, நான் உணர்ந்தது போதும்.
அதை இங்கு பதிவிட்டு, வருங்காலத்தில் அதே நொடிகளை நினைத்து என் சட்டையை நனைக்க நான் விரும்பவில்லை.
பொதுவாகவே மரணங்கள் என்னை பெரிதாக பாதித்தது உண்டு.
எத்துனை உயிர் பலி தான், இந்த முடிக்கொண்டான் கொண்டிருக்கும்.
தீரா பசியுடைய அந்த ஆற்றையும் ஆற்றங்கரைப் படித்துறையையும் இப்பொழுது பார்த்தாலும், பூர்ணிமாதான் நினைவில் வருவாள்.
உங்கள் குழந்தைகள் உங்கள் சொத்து, அவற்றின் நடவடிக்கைகளை கண்காணிப்பதை விட வேறு என்ன வேலை இருந்து விட போகிறது ?
இருந்தாலும் விபத்து என்பது எதிர்பார்த்து நடப்பதல்ல.
அது நடக்கும் ! அதை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பது தான் நம்மை ஐந்தறிவு கொண்ட மிருகங்களிடம் இருந்து வேற்றுமை படுத்துகிறது.
ஒரு குழந்தையின் இழப்பு ஒரு குடும்பத்தை எப்படி மாற்றும் என்று சிறுவயதிலே விதி காட்டிவிட்டது.
எனது அம்னீசியா காலத்தில் பூர்ணிமாவை நினைவில் கொள்ள இது போதும்.
தூங்கட்டும் அம்மு !
ஆனால் நீங்கள் உங்கள் இராஜராஜனுக்கு இப்பொழுதும் ஒரு hi message அனுப்பலாம்,
அதில் நாம் எள்ளளவும் குறைய போவதில்லை.
எண்ணற்ற இராஜராஜன்களுக்கு ஏதோ என்னால் முடிந்தது.
யதார்த்தம்
பதிலளிநீக்கு