மரணத்துக்கு அப்பால் - அதிகாரம் 7
மரணம் - பலவாறாக பலரை அணுகுகிறது.
அமைதியாக சிலர், போராடாமல் சிலர், பல ஆண்டு போராடி சிலர், நொடி பொழுதில் சிலர் என மரணம் ஆட்கொள்ளும் விதங்கள் பலவாறாக இருக்கலாம்.
முடிவில் நாம் ஒரு மனிதரை அல்லது ஒரு உயிரை இழக்கிறோம் என்பதே உண்மை.
ஆறு அதிகாரங்களாக பல இழப்புகளை பார்த்திருக்கிறோம். ஆனால் ஏழு என்ற இந்த எண், எனது தம்பியின் இழப்பை சுமக்கும் என்று சென்ற வாரம் வரை எண்ணியதுகூட இல்லை.
சில நாட்களாக எழுத ஒரு மனநிலை அமையவில்லை, தொடர்ந்து யூட்டியூப் லைவ், வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கான தேடல் என்று பல விஷயங்கள் மனதில் ஓட்டம் பிடித்து, மனதை எழுத முற்படுத்தாமல் வைத்திருந்தது.
ஆனால் இப்பொழுது மயிலை ரயில் நிலையத்தில் அமர்ந்து எழுதுகிறேன்..
ஜானி வாலி அக்லி காடி என கீச்சிடும் குரலுக்கும், டீ காப்பி சமோசா என்ற கட்டை குரலுக்கும் நடுவில்.
வீரா - என் தம்பி
வீரனார் நமது குலதெய்வம் நாய் வளர்க்க கூடாது என்று கிழவி பிதற்ற, குலதெய்வத்தின் பெயரையே சூட்டுவோம், அவர் வீரனாய் இருந்து நம்மை காக்கட்டும் என்று பல வசனங்கள் பேசி, ராசம்மாளை வென்று வீராவோடு வாழ தொடங்கினோம்.
வீரா வீட்டிற்கு எடுத்து வர, ஸ்லீப்பர் பஸ்ஸில் மறைத்து வைத்து சென்னையில் இருந்து வீடு வரும் வழியில் பயண பயத்தில் அவன் பல முறை சிறுநீர் கழிக்க, தம்பியை வளர்க்கும் பொறுப்பான அண்ணன் ஆனேன் - ஒரே இரவில்.
காலையில் வீட்டு வாசல் அடைய,
"இதை ஏன் வாங்கிட்டு வந்த, நானே வீட்டுல தனியா இருக்கேன், இதை எப்படி பாத்துப்பேன்.. கொண்டு போயி எங்கயாச்சும் விட்டுடு" என்றாள் ராசம்..
அன்று.. "வீரா பெரியாயி வீட்டுக்கு போயிட்டு வந்தியா என்று அவள் வீராவிடம் கேட்ட வீடியோவை 1000 முறை பார்திருப்பேன் - ராசத்தின் மறைவிற்கு பிறகு"
ராசம் இறந்த செய்தி அறிந்து சென்னையில் இருந்து லாக்டவுன்க்கு இடையில் ஈபாஸ் வாங்கி நான் வந்து சேரும் முன், அவளை வைத்திருந்த ஐஸ் பெட்டிக்கு அருகில் அமர்ந்திருந்தான் வீரா.
ராசத்தின் இறுதி சடங்கு முடிந்து, உறவினர் அனைவரும் வீடு திரும்ப, தனிமையில் ராசாத்தின் கேள்விக் கனைகளற்ற அமைதியில் அழுத ஐவரில் வீராவும் இருந்தான்.
பாட்டியை சாப்பிட கூப்பிடு என்று மேகலை சொன்னா போதும், நான் சிறுவயதில் சென்று அழைத்த வேகத்தை விட வீராவின் வேகம் ஒப்பிடமுடியாதது.
சனி ஞாயிறு ரெண்டு நாள் தான் லீவுனு வீட்டுக்கு வந்தா, இரவு தூங்கையில வீரா எனக்கும் என் அண்ணனுக்கும் நடுவில் சோம்பல் முறித்து தூங்குவான்.
அண்ணன எழுப்பு என்று மேகலை சொல்லும் ஒரு சொல் தான் வீராவுக்கு கட்டளை; போர்வையில் முக்காடு போட்டாலும், ஏறி நின்று கடித்து புரட்டி எழுப்புவான்.
நான் ஊருக்கு போகாத நாட்களில், அர்ஜுன், சுரேந்தர், ஐயப்பன் என்று "வீரா சொன்ன பேச்சுலாம் கேக்குது மாமா சொன்னா போதும் அமைதியா போகுது" அப்படின்னு அவனை புகழையில, நாம அங்க இல்லாம போயிட்டோமோன்னு ஒரு பொறாமை இல்லாமல் இருந்ததே இல்லை.
மேகலைக்கும், மணிமாறனுக்கும் இந்த லாக்டவுன்ல வீரா இல்லைனா நாட்கள் கொஞ்சம் கடினமாதான் போயிருக்கும்.
நான் ரெண்டு புள்ள பெத்தன் - ரெண்டும் நாயும் சென்னைய பாக்க போயிடுச்சு, ஆனா என் புள்ள வீராதான் என் கூட இருக்கான்னு மணிமாறன் ரொம்ப கொழுப்பா சொல்லுவாறு, அப்போ வீரா மேல பொறாமை மேலும் ஒரு ஸ்பூன் கூடும்.
அம்மா அப்பாவிடம் ஒரு பாசம், எப்போதாவது நான் வந்தால் என்னிடம் தனி பாசம் என்று, இரண்டு நாட்கள் என் காலையே சுற்றி வருவான்.
ஒரு வருஷம் தான் ஆகுது ஆனா அதுக்குள்ள அவனை பத்தி எழுத நிறைய கதைகள், அவனுக்கு உடம்பு சரி இல்லாமா போனப்போ விக்ணேஷும் அம்மாவும் கண்கலங்க சோகமாய் அமர்வதும், நான் என்னமோ விலங்கியல் மருத்துவன் போல, தைரியமாக சொல்லும் சொல்லை உண்மை என்று நம்பி கண் துடைத்த நாட்களும் உண்டு.
இதையெல்லாம் தாண்டி அவர்கள் அழுவதை நான் பார்க்க விரும்பியதும் இல்லை என்பதே எதார்த்தமான உண்மை.
ஆனால் சென்ற வாரம் காலையில் ஐயப்பன் போன் செய்து, வீரா கேட்டை உடைத்து கொண்டு வெளியே வந்துடுச்சுன்னு சொன்னப்போ; அது சாதாரணமாக தெரிந்தது, அடுத்த 10 நிமிஷத்தில் வீரா வாகனத்தில் அடிபட்டு விட்டது, நிறைய இரத்தம் போயிடுச்சாம் அப்டின்னு விக்னேஷ் போன் பண்ண, நான் நிதானத்தில் இல்லை.
அம்மா அப்பா அங்க இல்லை என்பதை உறுதி படுத்தி கொண்டேன், எனக்கே இப்படி இருக்க அவர்கள் அவ்விடத்தில் இருந்து வீராவின் போராட்டத்தை பார்த்தால் ; அவர்களின் நிலையை என்னால் யோசிக்க கூட முடியவுல்லை.
வீராவின் மறைவை ஜவ்வாய் இழுக்கும் பட்சத்தில், மயிலை இரயில் நிலையத்தில் நான் அழுவது போல மேகலையும் அழலாம், மாறனும் அழலாம், விக்னேஷும் அழலாம்..
இருந்தாலும் வீரா என் வீட்டின் கொள்ளைப்புறத்தில் துயில்கொள்ளட்டும்...
மரணம் யார் யாராயோ தழுவுகிறது, வெற்றி என்றால் என்னவென்றே தெரியாத நம்மையும்
தழுவினால் தான் என்ன என்ற அலட்சியம் என்னுள் நிறைய இருந்ததுண்டு.
ஆனால் இப்போது வீரா இல்லாமல் போன பிறகு, இந்த ஒரு வாரத்தில் என்னுள் எவ்வளவு குற்ற உணர்ச்சி உள்ளதோ; அதே குற்ற உணர்ச்சி என் குடும்பத்தினருக்கும் என் மறைவில் வரலாம் என்ற பயத்தால் வாழ்வை எதிர்கொள்கிறேன்.
தனக்கு சொர்கத்தில் தனிமை என்று ராசம்மா வீராவை அழைத்துக்கொண்டாள் போலும்.
ஆனாலும் வீரா - நீ வாழ்ந்திருக்கலாம்..
கண்ணீருடன் வினித் மணிமாறன்
மேகலை அழட்டும்
பதிலளிநீக்குமாற்றும் அழட்டும்
அண்ணனும் அழட்டும்
நீயும் அழுதிடு
வீராவை உன் எழுத்தில் மட்டுமே கண்ட நானும் அழுகிறேன்...
வீராவிற்கு இந்த உப்புத்துளிகளே பாச அஞ்சலி...
கனத்த இதயம் ஏனோ கண்ணீரில் வீராவை துறந்துட மறுக்கிறது...
நீக்குகண்ணீருடன் படிக்கும் நானும் தான்
பதிலளிநீக்கு